‘உழைத்த பணத்தில் ஊருக்கு நன்மை’ - மதுரை மக்களுக்கு கோடிகளில் உதவி செய்யும் 86 வயது வடக வியாபாரி!
86 வயதிலும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் பள்ளி, கோயில் என மக்களுக்கு பயனுள்ள அறக்கட்டளை பணிகளை செய்து வரும் வடக வியாபாரியான ராஜேந்திரன், இன்றைய இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னூதாரணமாக விளங்குகிறார்.
86 வயதிலும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் பள்ளி, கோயில் என மக்களுக்கு பயனுள்ள அறக்கட்டளை பணிகளை செய்து வரும் வடக வியாபாரியான ராஜேந்திரன், இன்றைய இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னூதாரணமாக விளங்குகிறார்.
நான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் 12 கோடி ரூபாய் வரை மதுரை மக்களுக்கு செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார் 86 வயது முதியவரான ராஜேந்திரன்.
வடக வியாபாரி:
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக ஆலை அமைத்து மோர் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். இப்போது மாதத்திற்கு லட்சங்களில் வருவாய் தரும் வணிகத்தை கட்டமைத்திருந்தாலும், ராஜேந்திரனின் ஆரம்ப கட்ட வாழ்க்கை மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டது.
ஆரம்பத்தில் விருதுநகரில் பூண்டு கடை ஒன்றில் மாதம் 25 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வந்துள்ளார். அந்த சம்பளம் சாப்பாட்டிற்கே சரிவார போதாமல் இருந்துள்ளது. இதனால் 1951ம் ஆண்டு கையில் 300 ரூபாயுடன் விருதுநகரில் இருந்து மதுரைக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு வாடகை சைக்கிளில் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தவர், மெல்ல, மெல்ல அரிசி வியாபாரம் செய்துள்ளார். 1960களில் அரிசிக்கு நிறைய தேவை இருந்ததால் அவரது வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
அரிசி வியாபாரத்தில் இருந்த போது தான் அவருக்கு அரிசி வடகம் செய்து விற்பனை செய்யும் யோசனை வந்துள்ளது. முதலில் அரை கிலோ அரிசியில் அவரது மனைவி உதவியுடன் அரிசி வடகம் செய்து விற்பனை செய்தார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, அத்துடன் மோர் மிளகாய், வத்தல், வடகம், கலர் அப்பளங்கள் என வியாபாரம் செய்து இப்போது தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில்,
“1968 முதல் 1988 வரை சைக்கிளில் ஊறுகாய் பாக்கெட்டுகள், வடகம், வத்தல், மசாலா பொருட்களை கடை, கடையாய் சென்று விற்பனை செய்து வந்தேன். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே மெல்ல, மெல்ல அவற்றை விரிவுப்படுத்த ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அதேபோல், அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய எனது தொழிற்சாலையின் மதிப்பே 9 கோடி ரூபாயாகும்,” என்கிறார்.
அரை கிலோ அரிசி மாவில் ஆரம்பித்த இவரது விற்பனை தற்போது 60 கிலோ மாவை கடந்து விற்பனையாகி வருகிறது.
பள்ளி, கோயில்களுக்கு அறக்கட்டளை பணி:
முதியவர் ராஜேந்திரனுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி நல்ல நிலையில் உள்ளனர். எனவே தான் பாடுபட்ட சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்கு செலவழிக்க ஆரம்பித்தார்.
2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ரூ.1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார்.
ரூ.71 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவுக்கூடம் கழிப்பறைகளை அமைத்து கொடுத்துள்ளார்.
கஜா புயலின்போது பாதிக்கப்பட் மக்களை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் செலவில் டிபன் பாக்ஸ், தட்டு, அப்பளம், வடகம், அரிசி கொடுத்து வந்தார்.
தற்போது மாநகராட்சி திரு.வி.க. பள்ளி சமையல் அறை மோசமான நிலையில் உள்ளது, அதனை ரூ.7 லட்சத்தில் புதிய சமையல் அறையை கட்டித்தர உள்ளார்.
மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். அதற்கு ரூ.2.5 கோடி நிதியுதவியும், செல்லூரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தர உள்ளார்.
மதுரை வைகையாற்றின் நடுவில் உள்ள மைய மண்டபம் சிதிலமடைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் அடிக்கடி பூஜைகளை மேற்கொள்வதால், அவர்களுக்காக அந்த மண்டபத்தை கட்டித்தர முடிவெடுத்துள்ளார்.
“வியாபாரம் செய்யும் உத்தியை கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார். அதில் கிடைக்கிற வருமானத்தில் நிறைய தானம், தர்மம் செய்கிறேன். இன்னும் 12 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மக்களுக்கான சமூகப் பணிகளை செய்ய உள்ளேன். இதுபோன்ற சமூகப் பணிகளை செய்ய எனது குடும்பத்தினரும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். குறிப்பாக எனது மகள்கள் எப்போதுமே இதற்குத் தடை சொன்னது கிடையாது. அப்பா நல்ல காரியத்திற்கு தானே செலவழிக்கிறார் என்ற எண்ணம் கொண்டவர்கள்,” என்கிறார்.
பணியாளர்களுக்கு இன்பச்சுற்றுலா:
சமூக சேவைகளில் மட்டுமல்ல தன்னிடம் பணியாற்றி வரும் 40 பணியாளர்களையும் ராஜேந்திரன் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறையாவது தன்னிடம் பணியாற்றுபவர்களை கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒருமுறை ஊழியர்களை ஹைதராபாத்துக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று வந்தார். தற்போது ஊழியர்களை குற்றாலத்துக்கு ரயிலில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதன் பின்னர், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலையும், தாஜ்மஹாலையும் சுற்றிக்காட்ட திட்டமிட்டுள்ளார்.
மீதமுள்ள வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். இறைக்கிற கிணறு ஊறும் என்பார்கள், அதுபோல் கிடைக்கிற வருவாயில் நன்கொடை வழங்குகிறேன். இறைவன் மீண்டும் எனக்கு கொடுக்கிறார்.
மனைவியின் கடைசி ஆசை; 5கோடி ரூபாய் சொத்தை முதியோர் இல்லம் கட்ட கணவர் உயில்!