Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றம் ஏற்படுத்தும் திறனாளிகள் என்று வாழ்ந்து காட்டும் கோவை ஜெகதீஷ்

மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றம் ஏற்படுத்தும் திறனாளிகள் என்று வாழ்ந்து காட்டும் கோவை ஜெகதீஷ்

Saturday September 09, 2017 , 3 min Read

ஜெகதீஷ் , ஆறு மாத குழந்தையாய் இருந்த போது Tetraplegia என்ற நோயால் பாதிக்கப்பட்டார், இவரால் எழுந்து நடக்கவே முடியாது, வீல் சேரில் தான் வாழவேண்டும் என்ற நிலை. இந்த நோய் என்பது உடலில் பக்கவாதத்தை ஏற்படுத்தி, இடுப்புக்குக் கீழ் பகுதி மற்றும் கால்களை அசைக்கவோ, பயன்படுத்தவோ முடியாது என்ற நிலையாகும். அம்ரித் சிறப்புப் பள்ளியில் படிக்கும்போது தான், 

“தான் சிறப்புக் குழந்தை இல்லை என்றும், இந்த சமுதாயத்தை சிறப்பிக்க வந்த குழந்தை,” என்று உறுதி மொழி எடுத்தார் ஜெகதீஷ். 
image


அந்த உறுதி மொழியை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார். ஆம், ஜெகதீஷ் இலங்கை தமிழர் இனப்படுகொலைக்காக 2013-ம் ஆண்டு கோயம்புத்தூரில் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுப்பட்டார். மேலும் இந்த சமூகத்தில் நடந்து வரும் பல அநீதிகளுக்கு தொடர்ந்து தனது கண்டனத்தையும், தமிழர்களின் போரட்டத்திற்காக தனது குரலையும் கொடுத்து வருகிறார்.

“சமூகப் பிரச்சினைகளுக்கு நான் குரல் கொடுப்பதற்கு முக்கியக் காரணம் வீழ்வேன் என்று நினைத்தாயோ புத்தகம் தான். இந்த புத்தகத்தின் பாதிப்பு இன்றளவும் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது,” என்கிறார்.

மேலும் பேசுகையில் “எனக்கு வெவ்வேறு மனிதர்களை சந்திப்பது மிகவும் பிடித்த ஒன்று. நான் நட்புகளை தேடிச் சென்று சேகரித்து கொள்ள விரும்புபவன், என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்,” என்றார் உற்சாகமாக.

கணினி பொறியியல் மீதும் மென்பொருள் டெவலப்மெண்ட் மீதும் அதீத ஆர்வமுடையவர். தற்போது இணையதள வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நட்புகள் தேடும் பணியையும் ஃபேஸ்புக், ட்விட்டர், போன்ற சமூகவலைதளங்களில் தொடர்ந்து செய்து வருகிறார் ஜெகதீஷ்.

சமூக ஆர்வலர், வலைப்பதிவாளர், இணையதள வடிவமைப்பாளர் என பல பரிணாமம் கொண்ட இவர், சிறந்த வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், போன்ற பல அடையாளங்களையும் கொண்டவர்.

ஜெகதீஷ் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார், மேலும் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து நண்பர்களிடம், உறவினர்களிடம், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனை, அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி, அவர்களின் ஆற்றலை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த உதவி வருகிறார் ஜெகதீஷ். தான் எழுதிய புத்தகத்தை பற்றி கூறுகையில்,

“எனக்கு வானொலி தொகுப்பாளராக வேண்டும் என்ற ஓர் ஆசை இருந்தது. அதற்கு மூச்சு விடாமல் பேசுவது மட்டும் முக்கியமில்லை, தமிழ் உச்சரிப்பும் தமிழ் இலக்கியமும் தெரிந்து இருக்க வேண்டும் என்பதால் தமிழ் புத்தகங்களை படிக்கத் துவங்கினேன்.”
தனது பாட்டி உடன் ஜெகதீஷ்

தனது பாட்டி உடன் ஜெகதீஷ்


நான் முதல் முதலில் படித்த புதினம் பொன்னியின் செல்வன், இந்த புதினம் ஏற்படுத்திய தாக்கம் என்னை நிறைய புத்தகங்களை படிக்க செய்தது. வாசிப்புகளின் அடுத்த கட்டமாக தான் எழுதத் துவங்கினேன். நானும் இணையமும் உடன் பிறவா சகோதரர்கள் என்று கூறலாம், அதை விட என் வாழ்க்கையை இ.மு (இணையத்திற்கு முன்) மற்றும் இ.பி (இணையத்திற்கு பின்) என்று கூட பிரித்து கொள்ளலாம். அந்த இ.பி தான் நான் எழுதிய புத்தகம் ’இணையமும் இவனும்’.

”இந்த புத்தகத்தில் என் வாழ்வியல், இணையத்திற்கு அப்பால் எப்படி மாறியது என்பதை விவரிக்கும். முதல் மடிக்கணினி, முதல் ஊட்டி பயணம், முதல் சென்னை பயணம், முதல் காதல் போன்ற அனைத்து அனுபவங்களை இந்த புத்தகத்தில் எழுதி இருப்பேன். “

மேலும் இவர் சிறுகதைகளும், கவிதைகளும் எழுதி உள்ளார். 2012 ஆம் ஆண்டு கலாம் ஐயாவை நேரில் சந்தித்த அனுபவம் இவருக்குக் கிடைத்தது.

“ஒரு நாள் காலை, ஒரு அழைப்பு. அதில், நீ அன்று இழந்த வாய்ப்பு இன்று மீண்டும் உன்னிடம், அழைத்தது நான் படித்த சிறப்புப் பள்ளி பேராசிரியர்.”

தன் புத்தகத்துடன் ஜெகதீஷ் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில்

தன் புத்தகத்துடன் ஜெகதீஷ் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில்


அன்று ஜெகதீஷ் என்ன இழந்தார்?

“நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நிகழ்ச்சி ஒன்றுக்கு கலாம் ஐயா வந்தார். ஒவ்வொரு பள்ளியில் இருந்து பத்து மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். எங்கள் பள்ளியில் அந்த பத்து மாணவர்களில் நானும் ஒருவன். மகழ்ச்சியின் உச்சத்திலும், உற்சாகத்தின் விளிம்பிலும் இருத்தேன். ஆனால் திடீர் என்று எனக்கு ஏற்பட்ட காய்ச்சலால் என்னால் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை. 

அந்த ஏக்கத்திலிருந்து மீள மீண்டும் கலாம் ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு 2012 ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்தது. அன்று இருந்ததை விட பல மடங்கு மகிழ்ச்சியும் உற்சாகவும் இருந்தது. அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ஜெகதீஷை கலாமிடம் அறிமுகப்படுத்திய போது, 

”நான் என்ன படிக்கிறேன்? என் கனவு என்ன? போன்ற கேற்விகளை என்னிடம் கேட்டார் அதற்கு விடை அளித்து, உங்களுக்கு சாராபாய் எப்படி இன்ஸ்பிரேஷனோ, நீங்க எனக்கு இன்ஸ்பிரேஷன்,” என்று கூறினேன்.

சிரித்துவிட்டு என்னை ஆசிர்வாதம் செய்துச் சென்றார். என் வாழ்நாளில் மறக்க முடியாத சில நொடிகள் அது. மேடையில் கலாம் ஐயா குழந்தைகளே நீங்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றும் திறனாளிகள் என்று ஊக்கவித்து பேசத் துடக்கினார், என்று நம்மிடம் நினைவுக் கூர்ந்தார் ஜெகதீஷ்.

அதேப் போல் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ஜெகதீஷ், அவரைப் போன்று கலையிலும் காதலிலும் வல்லவர். இவருக்கு திரைப்படங்கள் மீதும் ஆர்வம் அதிகம். நிறைய கலை ரீதியான திரைப்படங்கள் பார்ப்பது இவரின் பொழுதுபோக்கு. மேலும் பல கதைகளையும் உருவாக்கி உள்ளார்.

“இந்த உலகில் நடக்கிற ஒவ்வொரு நற்செயலுக்கும் காரணம், இந்த அண்டத்தில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களும் தான். அப்படி எனக்கு நடந்த நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் காரணமான அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஜெகதீஷ். 

எது ஊனம்? எதை ஊனம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவல்ல. உன் கடமையை செய்யாமல், பலனை எதிர்ப்பார்ப்பது ஊனம், உனக்குப் பிடித்த விஷயத்தை பிறருக்கு பிடிக்காததால் செய்யத் தயங்குகிறாயே!, அது ஊனம். நீ வாழ்ந்து கொண்டு இருப்பது உன் வாழ்க்கை தோழா, உனக்காக வாழ். பிறருக்கு உதவி செய், அது போதும்.

இந்த உலகம் உங்களுக்காகத் தான் உருவாக்கப்பட்டுள்ளது. உனக்குத் தேவையான ஒன்றை நீதான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். தூக்கி எறி உன் முகமூடியை... 

உங்கள் கனவுகள் தொடர வாழ்த்துக்கள் ஜெகதீஷ்!