Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 45: Meesho - இரு நம்பிக்கை நண்பர்கள் எழுப்பிய கோட்டை!

எண்ணற்ற பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கி, அவர்களுக்கு முதலீடே இல்லாமல் நிதி சுதந்திரத்தை உருவாக்கிய மீஷோவின் சக்சஸ் கதை இது.

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 45: Meesho - இரு நம்பிக்கை நண்பர்கள் எழுப்பிய கோட்டை!

Saturday March 15, 2025 , 7 min Read

இப்போதெல்லாம் ஒருவர் அதிக பணம் முதலீடு செய்யாமல் வீட்டில் வசதியாக அமர்ந்திருந்தபடியே சொந்தமாக ஆன்லைனில் எளிதாக பிசினஸ் தொடங்கலாம். இதற்கு ஏற்றாற்போல், கடந்த பத்தாண்டுகளில் ஆன்லைன் ஷாப்பிங் கணிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஆன்லைன் நிறுவனங்கள் இப்போது உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டிவருகின்றன.

கொரோனா தொற்றுநோய் காலத்துக்கு பிறகு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை அதிகமாக நம்பியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் ஆன்லைன் வணிகத்தில் சாம்ராஜ்ஜியங்களை வளர்த்தெடுத்துள்ளனர். இதில் ஆன்லைன் மறு விற்பனைத் துறையும் அடக்கம்.

ஆன்லைன் மறு விற்பனைத் துறையில் உச்சம் தொட்ட எல்லோருக்கும் பரிச்சயமான 'மீஷோ' (Meesho) தான் இந்த யூனிகார்ன் அத்தியாயம்.

‘மேரி ஷாப்’ அல்லது எனது கடை என்பதே மீஷோ பெயருக்கான அர்த்தம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று ஒவ்வொரு வீட்டிலும் மீஷோ காலடி எடுத்து வைத்துள்ளது.

தனது கனவு றெக்கைகளை பறக்கச் செய்து இன்று இந்தியர்களின் ஒவ்வொரு வீடுகளையும் தாண்டி, எண்ணற்ற பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கி, அவர்களுக்கு முதலீடே இல்லாமல் நிதி சுதந்திரத்தை உருவாக்கிய மீஷோவின் சக்சஸ் கதையையே பார்க்கப் போகிறோம்.

Meesho founders

இணைந்த கைகள்

மீஷோவின் சக்சஸ் கதைக்குப் பின்னணியில் நெருங்கிய நட்பு இருக்கிறது. அந்த நட்புக்கு சொந்தக்காரர்கள் விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால். இந்த இருவர்தான் 'மீஷோ' வெற்றிக்கு மூலவர்கள். வெற்றிக்கான வேட்கையில் விடாமுயற்சியாக இருந்து இன்று சுமார் 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஒரு பேரரசாக மீஷோ நிறுவனத்தை வளர்த்துள்ளனர் இந்த இருவரும்.

மீஷோவின் வெற்றி இந்த இருவருக்குமான வெற்றி என்பதை தாண்டி இந்தியர்கள் கொண்டாடி தீர்க்க வேண்டிய வெற்றி. ஏன் என்பதை, விதித் ஆத்ரேவின் பயணத்தில் இருந்து அறியத் தொடங்கலாம்.

ஐஐடி ஹாஸ்டல்

வடமேற்கு டெல்லியில் உள்ள ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் விதித் ஆத்ரே. இவரின் தந்தை டெல்லி நீர்வளத் துறையில் பணிபுரிந்தார். நடுத்தர வர்க்கத்திலும் அரசு ஊழியர்களின் சுற்றுப்புறத்தில் வளர்ந்ததாலும் அதே பாதையை பின்பற்ற தீர்மானித்து அரசு வேலை வாங்க வேண்டும் என்பதே விதித் ஆத்ரேவின் தந்தைக்கு ஆசையாக இருந்தது. அதற்கேற்ப பள்ளிப் படிப்பை முடித்த விதித், ஐஐடி டெல்லியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் சேர்ந்தார். முதல் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு சிவில் சர்வீஸ் தேர்வே இலக்காக இருந்தது. அதற்காக தயாராகவும் செய்தார்.

ஆனால், ஐஐடியில் அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் விதித் கொண்டிருந்த சிவில் சர்வீஸ் இலக்கை மாற்றியமைத்தது. வகுப்பறை போல் இல்லாமல், ஐஐடி டெல்லி விடுதி வலுவான நட்பை உருவாக்குவதற்கு ஏற்ற இடமாக இருந்தது. அப்படி, ஐஐடி டெல்லி விடுதியில் விதித் கண்ட நட்புதான் சஞ்சீவ் பர்ன்வால்.

ஜார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த சஞ்சீவ், ஐஐடி டெல்லியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து வந்தார். இருவரும் ஒரே வகுப்பறையில் இல்லை என்றாலும், ஒரே ஹாஸ்டல் என்பதால் அவர்கள் மத்தியில் நட்பு உருவானது. இந்த நட்பு பரஸ்பர நம்பிக்கைக்கு வழிவகுத்ததோடு தொழில்நுட்ப ரீதியாகவும் சிந்திக்க வைத்தது.

சஞ்சீவ் பர்ன்வாலுக்கு ரோபாட்டிக்ஸ் மீது மிகுந்த ஆர்வம். கல்லூரியில் படிக்கும்போதே பல ரோபோக்களை உருவாக்கி பல விருதுகளை வென்றார். இவரின் இந்த ஆர்வம், தொழில்நுட்பம் மற்றும் சிக்கலுக்கான தீர்வை தேடும் விருப்பத்தில் இருந்து வந்தது. தொழில்நுட்பத்தை கொண்டு உருப்படியான மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பது சஞ்சீவின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்கு நேர்மாறாக சிவில் சர்வீஸ் வேலைகள் மீது நாட்டம் கொண்டிருந்த விதித், கல்லூரியின் ஸ்டார்ட்அப் அமைப்பில் கூட சேரவில்லையாம்.

ஆனால், கடைசி செமஸ்டர் சமயத்தில் தனது அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்க தொடங்கிய விதித்திற்கு, சஞ்சீவ் மற்றும் சில முன்னாள் மாணவர்கள் செய்த பல வித்தியாசமான விஷயங்கள் ஈர்க்கத் தொடங்கின. குறிப்பாக, அவர்களின் தொழில்முனைவோர் பயணம் விதித்தை ஈர்த்தது. இதனால், தந்தையின் விருப்ப பாதையிலிருந்து விலகத் தீர்மானித்த அவர், ஐஐடியில் பட்டம் பெற்ற பிறகு தந்தையிடம் சென்று அரசாங்க வேலை பெறப்போவதில்லை என்பதை கூறினார். அதற்கு பதிலாக உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஏதாவது ஒன்றை செய்யப்போவதாக கூறி சிவில் சர்வீஸ் கனவுக்கு முழுக்குப் போட்டார்.

கார்ப்பரேட் பக்கம் கரை ஒதுங்கி, சென்னையை தளமாக கொண்டு ஐடிசி நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சியாளராக விதித் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதே சமயம், சஞ்சீவ், ஜப்பானில் உள்ள சோனி நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் இப்படியாக சென்றது. இந்த சமயத்தில் தான் ஐடிசி நிறுவன வேலை தொடக்கம் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், அந்த துறை கண்டு வந்த மெதுவான புதுமைகளால் விதித் ஏமாற்றமடைந்தார்.

meesho

தொழில்முனைவு பயணம்

தனது நண்பர்களை போல வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை விதித்தை இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனமான 'இன்மொபி' (inMobi) பக்கம் இழுத்துச் சென்றது. மறுபக்கம், உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆரம்பம் முதல் முனைப்புக் காட்டிக் கொண்டிருந்த சஞ்சீவும், அதற்காக ஜப்பான் வேலையை உதறிவிட்டு இந்தியா பக்கம் வந்தார்.

கல்லூரி நண்பன் விதித் வேலை பார்த்த இன்மொபியிலும் தன்னை இணைத்துக் கொண்டார் சஞ்சீவ். இந்த நிறுவன வேலைதான் இவர்களுக்கு தேவையான தெளிவான 'தொழில்' பார்வையை அளித்தது. இறுதியாக ஒரே முடிவாக வேலையை விட்டுவிட்டு தங்களின் கனவு பாதையில் பயணிக்க தொடங்கினர்.

FASHNEAR முயற்சி

நண்பர்களின் முதல் முயற்சிதான் இந்த FASHNEAR. ஸ்விக்கி, ஜோமோட்டோ போன்றொரு யோசனை தான் FASHNEAR. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஃபேஷன் தொடர்பான பொருட்களை ஆன்லைன் மூலம் வழங்குவது. அருகில் உள்ள கடைகளில் இருந்து ஆடைகள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை வாங்கி அவற்றை ஆன்லைன் டெலிவரியாக வழங்குவதே FASHNEAR-ன் கான்செப்ட்.

ஆடைகள் மற்றும் ஆபரணங்களை விற்கும் உள்ளூர் கடைகள் FASHNEAR செயலியில் பதிவு செய்யலாம். மேலும், இதே செயலி மூலம் வாடிக்கையாளர்கள் இந்த உள்ளூர் கடைகளில் ஆர்டர் செய்தால், பொருட்கள் டெலிவரி செய்யப்படும்.

இருவரும் எதிர்பார்த்தபடி FASHNEAR முயற்சி கைகூடவில்லை. இதன் பிசினஸ் மாடலில் சில குறைபாடுகள் இருந்தன. உள்ளூர் கடைகளில் இருந்து துணிகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக அக்கறை காட்டவில்லை என்பது முக்கிய குறைப்பாடுகளில் ஒன்று.

இதேபோல், கடை உரிமையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உள்ளூரில் விற்பனை செய்வதற்குப் பதிலாக நாட்டின் பல்வேறு இடங்களில் ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் விற்பனையை அதிகரிக்க விரும்பினர். இப்படியான பிரச்சினைகளை கவனித்த விதித் மற்றும் சஞ்சீவ் இவற்றை சரிசெய்ய முற்பட்டனர்.

MEESHO உதயம்

பல கடைக்காரர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டனர். விளைவு, 2015-ஆம் ஆண்டின் இறுதியில், ஃபேஷ்னியர் நிறுவனம் 'மீஷோ' என மறுபெயரிட்டு புதுப்பிறவி கண்டது. பெங்களூருவின் கோரமங்கலா பகுதியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு சாதாரண பிளாட்டில் இருந்து மீஷோ செயல்படத் தொடங்கியது. அந்த பிளாட்டில் இருந்த டைனிங் டேபிள்தான் அவர்களுக்கான ஒர்க் ஸ்டேஷன்.

ஃபேஷ்னியர் கற்றுக்கொடுத்ததும் மீஷோவை தொடங்கியதன் நோக்கமும் ஒன்றுதான். இந்தியாவின் முழு சிறு வணிகப் பொருளாதாரத்தையும் ஆன்லைனில் கொண்டு வருவதுதான் அது.

மீஷோ ஆரம்பித்த 2015-ல் இந்த இலக்கு அடைய முடியாததாகத் தோன்றியது. ஆனால், 2016-ல் தொடங்கப்பட்ட ஜியோவின் மிகவும் மலிவான டேட்டா சேவைகள் இந்தியாவின் இணைய கலாச்சாரத்துக்கு புதிய உயிர் கொடுத்தது. இது, நாடு முழுவதும் உள்ள பல சிறு விற்பனையாளர்களை மீஷோவை தேடி கொண்டுவர, இலக்கை அடையும் நம்பிக்கை கிடைத்தது. அதற்காக உருவாக்கப்பட்ட மீஷோ செயலி, உற்பத்தியாளர்களை மறு விற்பனையாளர்களுடன் இணைக்கிறது.

meesho

மேலும், உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை மீஷோ ஷாப்பிங் செயலியில் பட்டியலிட முடியும். அதோடு, உற்பத்தி பொருட்களை வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்க முடியும்.

மாற்றங்களுடன் மீஷோ செயல்பட தொடங்கியபோது விதித் மற்றும் சஞ்சீவ் கடைக்காரர்கள் மற்றும் மறு விற்பனையாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டனர். அப்போது கடைக்காரர்கள் பலர் ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருவதை அறிந்துக் கொண்ட அவர்கள், உள்ளூரில் மட்டுமே இப்படியான விற்பனை நடப்பதையும் தெரிந்துக் கொண்டனர்.

மேலும், மீஷோவில் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான கடைகள் பெண்களால் நடத்தப்படுகின்றன என்பதையும், இந்த பெண்கள் தங்கள் பொருட்களை வேறு எந்த கடைகளிலும் அல்லாமல் தங்கள் வீடுகளுக்கு வெளியே விற்றதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

“இ-காமர்ஸ் சந்தைகளை விட அதிகமான மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதில் கேள்வி என்னவென்றால், 50 கோடி இந்தியர்களை சமூக ஊடகங்களில் இருந்து இ-காமர்ஸ் வணிகத்தை நோக்கி எவ்வாறு கொண்டு வருவது? அதேபோல், நிறைய பெண்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் சொந்த ஃபேஷன் பிராண்டுகளை பிரபலப்படுத்த எங்கள் செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். எனவே, அதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள அவர்களிடமே பேசத் தொடங்கினோம்” - விதித்

பெண்களை மையப்படுத்தி...

திருமணமான பிறகு அல்லது குழந்தைகளைப் பெற்ற பிறகு பல பெண்கள் வேலை செய்வதை நிறுத்தியதை கவனித்தனர். அப்படியான பெண்கள் அனைவரும் தங்களுக்கு நல்ல ஃபேஷன் உணர்வு இருப்பதாகவும், தங்களுக்கென ஒரு பிராண்டைத் தொடங்க வேண்டும் என்ற கனவை இன்னும் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தனர். ஆனால், அதற்கான மூலதனம்தான் அவர்களிடம் இல்லை. மொத்த சந்தைக்குச் சென்று மறு விற்பனை செய்ய பொருட்களை வாங்க அவர்களுக்கு நிதி தேவைப்பட்டது.

இந்த நிதி சுதந்திரத்தை பெண்களுக்கு அளிக்க விரும்பியது விதித் குழு. தனிநபர்கள், குறிப்பாக பெண்கள், முன்கூட்டியே முதலீடு செய்யாமல் ஆன்லைன் வணிகங்களைத் தொடங்க வைக்க வேண்டும். இதுதான் திட்டம். அந்த நோக்கில் செயல்படும்போது மொத்த விற்பனையாளரின் தொடர்புகளைச் சேகரித்து, அவர்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்து உற்பத்தி பொருட்களின் பட்டியலை அனுப்ப வழிவகை செய்யப்பட்டது.

meesho

மறுபக்கம், பெண்கள் இடைத்தரகர்களாக இருந்து வாடிக்கையாளர் வாட்ஸ்அப் குரூப்பில் ஆர்டர் செய்யும்போது அதனை மொத்த விற்பனையாளரிடம் பேசி குறிப்பிட்ட தொகை கமிஷனுடன் வாங்கி அனுப்ப முடியும் என்கிற கான்செப்ட்டை கொண்டுவந்தனர். இதன்மூலம், இடைத்தரகராக பெண்கள் லாபம் ஈட்ட முடியும்.

இந்த கான்செப்ட் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. காரணம், டெலிவரி செய்வது, அதற்கான பணத்தை பெறுவது, டெலிவரி பொருட்களை கையாள்வது பல சிக்கல் இருந்தன. இதனை எளிதாக்க மீஷோ தொழில்முனைவோர் நெட்வொர்க்கை கட்டமைத்தது. இதன்மூலம், சப்ளையர்கள், மறுவிற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்பட, கான்செப்ட் வெற்றி பெற்றது.

தற்போது பெண்கள் எந்தவொரு கடனும் முதலீடும் இல்லாமல் வீட்டிலிருந்தே மீஷோ மூலம் விற்பனை செய்ய முடியும். மீஷோவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய உந்து சக்திகளில் ஒன்று, பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதில் காட்டிய அர்ப்பணிப்புதான்.

சிறிய நகரங்களில் உள்ள இல்லத்தரசிகள் மற்றும் பெண்களிடையே உள்ள மகத்தான ஆற்றலையும், பயன்படுத்தப்படாத திறமையையும் உணர்ந்த விதித் மற்றும் சஞ்சீவ், மீஷோவை எளிதாக அணுகும் வகையில் வடிவமைத்தனர். இதனால் உலகம் அதுவரை கண்டிராத பிசினஸ் மாடல் உருவானது. விளைவு, கற்பனைக்கு எட்ட முடியாத வளர்ச்சியை கண்டது. விரைவாக ஃபேஷன் பொருட்களை தாண்டி வீட்டுக்கு தேவையானது அனைத்தும் மீஷோவில் கிடைத்தன.

2022 ஏப்ரல் மாதம் மீஷோ சூப்பர்ஸ்டோராக உருமாறியது. டிஜிட்டல் முறையில் மளிகை விற்பனை என நிறைய வசதிகள் கொண்டுவரப்பட்டன. மக்கள் மீஷோ பக்கம் படையெடுக்க முதலீடுகளும் குவிந்தன. வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல், டிரிஃபெக்டா கேபிடல், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சாஃப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்கள் முதலீடுகளை குவிக்க, 2022-ல் யூனிகார்ன் மதிப்பை எட்டியது மீஷோ.

யூனிகார்ன் அந்தஸ்துக்கு பின் ஊழியர்கள் பணிநீக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், மீஷோ இன்னும் வீரியத்துடன் வெற்றிகரமாக நடைபோடுகிறது.

தற்போது, இ-காமர்ஸ் மற்றும் சோஷியல் காமர்ஸ் துறையில், இந்தியாவில் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு திருப்புமுனையாக மீஷோ உருவெடுத்துள்ளது.

இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியவர்களாக விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் உள்ளனர். அவர்களின் தொலைநோக்கு தலைமை மற்றும் தனிநபர்களை மேம்படுத்துவதற்கான இடைவிடாத முயற்சியால், டிஜிட்டல் சகாப்தத்தில் மக்கள் வணிகம் செய்யும் விதத்தில் அவர்கள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

meesho

மீஷோவின் பயணம் சவால்கள் இல்லாமல் இருந்ததில்லை. கடுமையான போட்டி நிறைந்த இ-காமர்ஸ் சந்தையில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டியிடுவது சிறிய சாதனையல்ல. ஆனால், சஞ்சீவ் மற்றும் விதித்தின் தங்கள் நோக்கத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து வழிநடத்தியது.

ஆன்லைன் வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்துவது மற்றும் வளங்களை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது என்கிற மீஷோவின் யோசனை எளிமையானது... ஆனால், சக்தி வாய்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் நிதி சுதந்திரத்தை கனவு காண்கிறார்கள். ஆனால், அதை அடைவதற்கான வழிகள் இல்லாத ஒரு நாட்டில், மீஷோ நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியிருக்கிறது. இல்லை இல்லை... மாற்றியிருக்கிறார்கள்!

யுனிக் கதை தொடரும்...




Edited by Induja Raghunathan