வீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’
‘இணையத்தின் மூலம் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கும் சென்னையை சேர்ந்த இளம்தாய்’
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, குழந்தைப்பேறுக்குப் பிறகு, அதிக பட்சம் 26 வாரங்கள் வரை சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படவேண்டும் என்ற இந்திய அரசின் யோசனைக்கு சமீபத்தில் இளம் தாய்மார்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. ஆனால் குழந்தைப்பேறுக்குப் பிறகு ஒரு பெண் தனது உத்தியோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்ற கருத்து இதுவரை இன்றைய சமூகத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. சில திறமையுள்ள தாய்மார்களும் கூட சமூகத்தின் வலையில் சிக்கி, உத்தியோக சந்தையில் தங்களுடைய அடையாளத்தை இழந்து விடுகின்றனர்.
ஆனால், இணையம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட தற்போதைய காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே வேலைக்குச் சென்று தான் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நிலை மலையேறிவிட்டதாக சொல்கிறார் சென்னையை சேர்ந்த ஹோம்ப்ரூனர் ஜ்யோத்ஸ்னா ராமச்சந்திரன்.
2014- ஆம் ஆண்டு ‘அமேசான் கிண்டில் பப்ளிஷிங்’ மூலம் செல்ப்-பப்ளிஷிங் (self -publishing ) என்று கூறப்படும் சொந்தமாக இணையத்தில் புத்தகங்களை வெளியிடும் யுக்தியை தனது தொழிலாக உருவாக்கிக்கொண்ட ஜ்யோத்ஸ்னா ராமச்சந்திரன், தன்னை ஒரு ‘வீட்டிலிருந்து இயங்கும் தொழில்முனைவர்’ (Home Entrepreneur) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். இன்று இந்தத் தொழிலின் நுணுக்கங்களை துல்லியமாக கற்றறிந்து, இதே தொழிலில் ஒரு பயிற்சியாளராகவும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் இவர். இதையெல்லாம் இவர் கற்க, உறுதுணையாக இருந்தது பறந்து விரிந்திருக்கும் இணையவழிக் கல்விமுறை தான். இது பற்றி தமிழ் யுவர்ஸ்டோரி யுடன் பகிர்கிறார் ஜ்யோஸ்னா.
எப்படி துவங்கினார்?
ரீடெயில் மேனேஜ்மெண்ட் துறையில் MBA படித்திருந்த ஜ்யோத்ஸ்னா ராமச்சந்திரன், முதன் முதலில் பேண்டலூன்ஸ், ரிலையன்ஸ் போன்ற துணிக்கடைகளில் நிர்வாகியாக பணியைத் துவங்கினார். இடமாற்றங்கள் மேற்கொண்டாலே இந்தத் துறையில் வளர்ச்சி காண முடியும் என்பதாலும், திருமணத்திற்கு பிறகு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலை இருந்ததாலும், வாழ்க்கையில் புதியதாக ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற துடிப்பாலும் வேலையை ராஜினாமா செய்தார் ஜ்யோத்ஸ்னா.
துவக்கமே தோல்வி
அதன் பின்னர், தனக்கு அனுபவமிருந்த ரீடெயில் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்க உதவும் மனிதவள ஆலோசனை நிறுவனம் ஒன்றை துவங்கினார். குழந்தை பிறந்த பிறகு, அந்த வேலையில் முழு கவனம் செலுத்த முடியாததால், ஆர்டரின் பேரில் சாக்லேட்ஸ் தயாரித்து விற்பனை செய்யும் சாக்கோ-கிராப்ட் நிறுவனத்தின் ப்ரான்ச்சைசியாக (franchisee) சென்னையிலிருந்து பணிபுரிந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அதையும் தொடர முடியவில்லை.
"அடுத்து இணையதளங்கள் வடிவமைப்பது பற்றிக் கற்றுக்கொண்டு, அதை ஒரு தொழிலாகத் துவங்கினேன். அதிலும் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்கவில்லை. எனினும் இந்த இணைய அறிமுகம் தான் எனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மின் வணிக தளங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதைப் பற்றி கேள்விப்பட்டேன். குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டின் போன்ற மேலை நாடுகளில் இணையத்தில் கிண்டில் பப்ளிஷிங் முறையில் ஈ-புத்தகங்கள் விறுவிறுப்பாக விற்பனை ஆவது பற்றி படிக்க த்துவங்கினேன்” என்கிறார்.
"புத்தகம் படிக்க மட்டும் தான் தெரியும், எழுதத் தெரியாது"
“புத்தகங்கள் படிப்பது மட்டுமே எனது பழக்கமாக இருந்தது. எழுதுவதற்கு தைரியம் இல்லாததால், கிண்டிலில் வெளியிடுவதற்கான புத்தகங்களை பகுதி நேர எழுத்தாளர்களிடம் ஒரு தொகைக்கு எழுதி வாங்கி புனைப்பெயரில் வெளியிடத் துவங்கினேன். இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடிந்தது. இதில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு விஷயத்தை கவனித்தேன்…”
தன்னைப் போல் பல பெண்கள் குழந்தைப்பேறுக்குப் பிறகு வேலையை விட்டு வீட்டில் இருப்பதையும், அல்லது குழந்தையை தினப்பராமரிப்பு கூடங்களில் விட்டு விட்டு மனது ஒப்பாமல் வேலைக்கு செல்வதையும் கண்டார். இணையத்தின் உதவியுடன் தான் உருவாக்கிக்கொண்ட தொழிலைப் போல அவர்களும் செய்ய முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
புத்தகம் எழுதும் துணிச்சலும் உடன் பிறந்தது. ஏப்ரல் 2015-ல் ‘ஜாப் எஸ்கேப் பிளான்’ (Job Escape Plan) என்ற புத்தகத்தைத் தானே எழுதி வெளியிட்டார். இன்று வரை மிகவும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.
“இந்த புத்தகத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பல மார்க்கெட்டிங் யுக்திகளை கற்றுக்கொண்டேன். அமெரிக்காவின் பிரபல வணிக இதழான இன்க் (Inc) இதழில் ‘2015-ஆம் ஆண்டின் சிறந்த பத்து வணிக புத்தகங்கள்’ என்ற பட்டியலில் எனது புத்தகம் இடம்பெற்றது,”
என்று தனது முதல் வெற்றியை உற்சாகத்துடன் பகிர்கிறார் ஜ்யோத்ஸ்னா.
இன்றைய காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள தொழில்முனைவோர் முழுநேர பணியாளர்களை விட, இது போன்ற விருப்ப நேர பணியாளர்களின் திறன்களைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். எனவே, நீங்களும் வீட்டிலிருந்தே உங்கள் தனித்திறமைகளை பயன்படுத்தி வருமானம் ஈட்டலாம்.
நீங்களும் புத்தகம் எழுதலாம்
ஒரு தொழிலை வெற்றி பெறச்செய்யவோ அல்லது ஒரு விஷயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவோ புத்தகங்கள் ஒரு சக்தி வாய்ந்த களமாக இருப்பதை உணர்ந்த ஜ்யோத்ஸ்னா, ஒரு புத்தக பயிற்சியாளராக ஆக முடிவெடுத்தார். ‘புக் கோச்’ (Book coach) என்ற முறையில், புத்தகம் எழுத விரும்புபவர்களுக்கு எப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்பது, எப்படி புரியும்படி எளிமையாக எழுதுவது, எப்படி உங்களது புத்தகத்தை இணையத்தில் சந்தைப்படுத்துவது என்பதையெல்லாம் பற்றி நேரடியாகவும், ஸ்கைப் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். இன்றைய உலகில் புத்தகம் எழுத, தீவிர மொழியாளராகவோ, அனைத்தும் தெரிந்தவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்ற துணுக்கையும் முன்வைக்கிறார்.
சமீபத்தில் ‘ஹாப்பி ஸெல்ப் பப்ளிஷிங்’ (Happy Self Publishing) என்ற நிறுவனத்தை நிறுவி, தன்னுடைய திறமைகளுடனும், தன்னிடம் பகுதி நேரமாக பணியாற்றுவோரின் உதவியுடனும், எழுத்தாளர்களின் புத்தகங்களை தொகுப்பாக்கம் செய்தல், புத்தக மேலுறை வடிவமைத்தல், ஒலிப்புத்தகம் ஆக்கல், காகித அட்டை புத்தகமாகவும், இணையத்திலும் வெளியிடுதல் போன்ற சேவைகளை வழங்கி வருகிறார். இதுவரை பத்து எழுத்தாளர்களுக்கு முழுமையான புக் கோச்சிங் அளித்துள்ளார் ஜ்யோத்ஸ்னா. முப்பது பேரின் புத்தகங்களை இணையத்தில் இதுவரை வெளியிட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டில் குறைந்தது நூறு பேருக்கு கோச்சிங் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.
மேலும், இந்த வருடத்தில் தனது திறமைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில், ஒரு பயிற்சியாளராக, ’தி ஹோம் ஆன்ட்ரப்ரூனர் அகாடமி’-யை தொடங்க முழுவீச்சில் ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறார் ஜ்யோத்ஸ்னா.
இலவச காணொளிகள் மற்றும் பாட்காஸ்ட் சேவை
“வருமானம் ஒரு பக்கம் இருக்க, எனக்கு தெரிந்தவற்றை எல்லோருடனும் பகிர வேண்டும் என்ற ஆர்வத்தில், வாழ்க்கையிலும் தொழிலிலும் முன்னேறத் தேவையான எளிமையான வழிமுறைகளை பற்றி வீட்டிலேயே காணொளிகள் பதிவு செய்து எனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன்”.
மேலும், மேலை நாடுகளில் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் வீட்டிலிருந்து தொழில் செய்து வெற்றிபெற்ற ‘ஹோம் ஆன்ட்ரப்ரூனர்ஸ்’-ஐ பேட்டி எடுத்து ஒலிப்பதிவுகளை ‘தி ஹோம் ஆன்ட்ரப்ரூனர் ஷோ’ என்ற தலைப்பில் பாட்காஸ்ட்டாக வெளியிடுகிறார்.
“இணையத்தின் மூலம் பயனடையுங்கள்”
உங்களைப் போல வளர்ந்து வரும் தொழில்முனைவோரும், இளைஞர்களும், குறிப்பாக இளம் தாய்மார்களும் இணையத்திலிருந்து பயனடைய நீங்கள் தரும் டிப்ஸ் என்ன என்று ஜ்யோத்ஸ்னா-விடம் கேட்டபொழுது, அவர் கூறியதாவது:
இணையத்தில் உள்ள கல்விசார் பயிற்சிப் படிப்புகளை பயன்படுத்துங்கள். முதலில் இலவசமாக அளிக்கப்படும் பயிற்சிகளையும், காணொளிகளையும் தேர்ந்தெடுங்கள். பிறகு, கட்டணமுள்ள பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.
- யூ-ட்யூப் தளத்தில் தினந்தோறும் பதிவாகும் பல பயிற்சி காணொளிகளைப் பின்தொடரலாம்.
- உங்களுக்கு ஊக்கம் தரும் வெற்றியாளர்களின் வலைப்பதிவுகளை தொடர்ந்து படிப்பது ஒரு நல்ல உந்துதலாக அமையும்.
- குழந்தை பிறப்பின் காரணமாக வேலையை விடுத்த பெண்கள், இணையத்தில் உள்ள upwork.com போன்ற ‘விருப்ப நேர வேலைவாய்ப்பு’ அளிக்கும் இணையதளங்களில் தங்களது திறமைகளை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
குடும்பம், குழந்தை என பல கடமைகள் சூழ்ந்த வாழ்க்கையிலும், பெண்கள் வீட்டிலிருந்தே சாதனை படைக்க முடியும் என்பதற்கு ஜ்யோத்ஸ்னா ராமச்சந்திரன் ஒரு சிறந்த முன்மாதிரி என்றே சொல்ல வேண்டும்.
இணையதள முகவரி: Jyotsana Ramachandran
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:
இல்லத்தரசிகள் சமைக்கும் உணவை வெளியில் விற்க உதவும் 'ஃப்ரம்எஹோம்'
நீண்ட இடைவேளைக்கு பின் பணியைத் துவங்கும் தாய்மார்களுக்கு 10 உற்சாகக் குறிப்புகள்!