வெள்ள அகதிகள் பசி போக்கிய பாளை சிறைக் கைதிகளின் கரங்கள்!
சென்னை, கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளூரில் அகதிகள் நிலைக்குத் தள்ளப்பட்டு வாடிய மக்களின் பசியை போக்கியிருக்கிறது, பாளை சிறைக் கைதிகளின் கரங்கள். ஆம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா தரப்பிலும் நிவாரண உதவிகள் குவியத் தொடங்கிய வேளையில், திருநெல்வேலி பாளையம்கோட்டை மத்திய சிறையில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன.
அந்தச் சிறையில் உள்ள ஏறத்தாழ 25 ஆயுள்தண்டனைக் கைதிகள், தங்கள் கைகளால் 4,000 சப்பாத்திகளையும், 150 கிலோ கோதுமை மாவையும் அனுப்பி துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எங்கிருந்து வந்தது இந்த சிந்தனை?
சிறையில் அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள், சென்னை கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாமும் ஏதாவது உதவி செய்தால் என்ன? என்ற எண்ணம் அவர்களுக்குள் தோன்றியிருக்கிறது. ஆனால் சிறைக்குள் இருந்துகொண்டு எப்படி உதவ முடியும்? சிறை அதிகாரிகள் அனுமதி கிடைக்குமா என்றெல்லாம் யோசித்து தயங்கி நின்றனர்.
அப்போது தான் சிறையின் மனநல ஆலோசகரான கே.ஆர்.ராஜா என்பவரை இக்கைதிகள் அணுகியிருக்கிறார்கள்.
“ஒரு மனநல ஆலோசகர் என்ற முறையில் சிறைவாசிகள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் என்னை அணுகுவது இயல்பு. சென்னை மக்களுக்கு தாங்களும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற அவர்களின் ஆர்வம் எனக்கு பிடித்திருந்தது. இதில் என்ன தவறு என்று தோன்றியது. எனவே சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்களும் உதவ முன்வந்தார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது” என்கிறார் ராஜா.
4000 சப்பாத்திக்கு மாவுக்கு என்ன செய்தார்கள் என்று விசாரித்த போது, சிங்கம்பாறையிலுள்ள செயிண்ட் பால் ஷ்ரைன் தேவாலயம், மாவுக்கான ஏற்பாடு செய்து உதவியிருக்கிறார்கள். சிறைவாசிகள் தங்கள் உடலுழைப்பை கொடுத்து நான்காயிரம் சப்பாத்தி தயாரித்தினர். 150கிலோ கோதுமையை பாக்கெட்டுகளில் அடைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இது மட்டுமல்லாமல், 13 மூத்தகைதிகள் உட்பட 299 ஆயுள் தண்டனை கைதிகள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை சேர்த்து அதாவது 52,049ரூபாய் திரட்டி முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்திருக்கிறார்கள். சிறைவாசிகளுக்கு சிறையில் தினம் தோறும் செய்யும் வேலைக்கு 13ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. அதன்மூலம் வந்த வருவாய் இது.
சிறைவாசிகளில் பெரும்பாலானோரின் மனைவிகள் வெளியில் பீடி சுற்றுவதன் மூலமாக வரும் வருமானத்திலேயே தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள். பிள்ளையை படிக்க வைப்பது, குடும்பத்தை பார்த்துக்கொள்வது போன்றவற்றுக்கு சிறைவாசிகள் மாதம் தோறும் அனுப்பும் ஆயிரம் ரூபாய் அவர்களின் அத்தியாவசியம், இருப்பினும் இவர்கள் தங்கள் பங்காக அந்த வருமானத்தை விட்டுக்கொடுத்திருப்பது மனிதாபிமானத்தின் ஆழத்தை காட்டுகிறது.
சப்பாத்தி தயாரித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுள்தண்டனை கைதியாக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாளயம்கோட்டை சிறையில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆயுள் தண்டனை சிறைவாசிகள் கொலைகாரர்கள், கடுங்குற்றவாளிகள் மற்றும் கொடூர எண்ணமுடையோர் என்று தான் வெளியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பதை இது போன்ற சம்பவங்களில் தான் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் இணைந்து இதை செய்து காட்டிய எனக்கு மிகுந்த மன நிறைவும், திருப்தியு கிடைத்துள்ளது” என்றார் ராஜா.
டிஐஜி கனகராஜ், சிறையின் சூப்பரிண்டண்ட் ஆறுமுகம், ஜெயிலர் கிருஷ்ணராஜ் போன்றோரின் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியம் ஆனது என்கிறார் ராஜா. சிறையின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இவர்களுடன் இறுதிவரை உடன் இருந்து பொருட்களை சென்னை செல்லும் வண்டியில் ஏற்றி அனுப்ப உதவியது குறிப்பிடத்தக்கது” என்றார் ராஜா.
ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஏதோ ஒரு சூழலில் குற்றம் புரிந்துவிட்டு தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை மனிதர்களாக மாற்றும் வாழ்க்கைப் பள்ளிக்கூடமாக செயல்பட சிறைகள் தவறவில்லை என்பதற்கு பாளைச் சிறை ஒரு மகத்தான முன்னுதாரணம்.