தன் பிறந்தநாள் சேமிப்பில் வாங்கிய 30 சிசிடிவி கேமராக்களை காவல் துறைக்கு பரிசளித்த 9 வயது சிறுமி!

தன் பிறந்தநாள் சேமிப்பில் வாங்கிய 30 சிசிடிவி கேமராக்களை காவல் துறைக்கு பரிசளித்த 9 வயது சிறுமி!

Monday April 22, 2019,

2 min Read

பிறந்தநாள் என்றாலே அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி தான்; அதும் சிறு வயதில் புத்தாடை, நண்பர்களுடன் பகிரும் இனிப்புகள், பர்த்டே பார்டி இதை எல்லாம் நினைத்தாலே பிறந்தநாளுக்கு முன்தினம் நமக்கு தூக்கமே வராது. ஆனால் சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தன் பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணத்தை சென்னையில் சிசிடிவி கேமரா வைக்க அன்பளிப்பாக தந்துள்ளார்.

குற்றங்களை குறைக்க காவல் துறையினர் செயல்படுத்தி வரும் ’மூன்றாவது கண்’ (3rd eye) சாலைகளில் சிசிடிவி அமைக்கும் திட்டத்தைப்பற்றி அறிந்த 3 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரிஹிதாவிற்கு அத்திட்டத்தின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. தன் தந்தையின் அலுவலகம் அருகில் காவல்துறையினர் நடத்திய சிசிடிவி பற்றிய விழிப்புணர்வு சந்திப்பில் ஸ்ரிஹிதா பங்கேற்றுள்ளார்; அப்பொழுது சிசிடிவி கேமராவின் முக்கியத்துவத்தை அறிந்த இச்சிறுமி இத்திட்டத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவுசெய்துள்ளார்.

“ஸ்ரிஹிதாவின் தந்தை சத்யநாராயணன் உடன் சிசிடிவி அமைப்பதை பற்றி நான் பேசினான், அதைப்பற்றி வீட்டில் தன் மகளுடன் மீண்டும் பேசியுள்ளார் சத்யநாராயணன், இதனால் ஈர்க்கப்பட்டு போனில் என்னுடன் பேசிய  ஸ்ரிஹிதா தன் பிறந்தநாள் சேமிப்பை தானம் செய்வதாக தெரிவித்தார்,” என தி ஹிந்து உடன் பேசிய ராயப்பேட்டை உதவி ஆணையர் தெரிவித்தார்.

சில நாட்களிலே, பிறந்தநாள் பார்டிக்காக தன் தந்தை சேமித்து வைத்த பணத்தை கொண்டு தன் அப்பாவுடன் சென்று 30 சிசிடிவி கேமராவை வாங்கி காவல்துறைக்கு தானமாக அளித்துள்ளார் ஸ்ரிஹிதா. சிறுவயதிலே இவருடைய பரந்த எண்ணத்தை பாராட்டி சிசிடிவி கேமரா துவக்க விழாவின் போது சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அவரை கௌரவித்துள்ளார்.

குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே ’3rd eye’. இதனால் காவல் துறையினர் சென்னையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகிறது. சென்னை, தியாகராயநகர் பகுதிகளிலுள்ள தியாகராய நகர் காவல் சரகத்தில் 120 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களும், அசோக்நகர் காவல் சரகத்தில் 1207 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களும், வடபழனி காவல் நிலையத்தில் 100 கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 1427 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான துவக்க விழாவும் சமீபத்தில் நடந்தது.

இது போன்று பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, இது குறித்து பேசிய சென்னை ஆணையர்,

“இந்தத் திட்டம் மூலம் எங்களால் பல குற்றங்களுக்கு எளிமையாக தீர்வு காண முடிகிறது. குற்றத்தில் சம்மந்ததப்பட்டவர்கள், அதை பார்த்தவர்கள் என விசாரித்து குற்றவாளியை பிடிப்பதற்கு பதில் இந்த கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை சுலபமாக கண்டுப்பிடிக்க முடிகிறது,” என்றார்.

சமீபத்தில் சிசிடிவி கேமரா உதவியால் 3 மணி நேரத்தில் செல்போன் பறிப்பு குற்றவாளியை அயனாவரம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்