‘3 மாத வாடகை வேண்டாம்’- சமயத்தில் உதவிய 91 வயது 10 ரூபாய் டாக்டர்!
தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் கைக்கொடுப்பதே உண்மையான உதவி என காட்டியுள்ள பட்டுக்கோட்டை மருத்துவர்.
தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் கைக்கொடுப்பதே உண்மையான உதவியாகும். அப்படிப் பலர் இந்த கொரோனா காலத்தில், எளியவர்களுக்கும், நிதி நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்யும் செய்திகள் நம் காதுகளை குளிரவைத்துக் கொண்டிருப்பது ஆறுதலான விஷயம்.
அப்படி, இங்கே பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 91 வயது மருத்துவர் ஒருவர் செய்துள்ள செயல், லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள சில கடை வியாபாரிகளுக்கு பேருதவியாய் அமைந்துள்ளது.
91 வயதிலும் உடல் வலிமையுடன், தன் பணிகளை தானே செய்து கொள்ளும் டாக்டர் கனகரத்தினம், தனது மனைவி ராஜலட்சுமியுடன் வாழ்கிறார். இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷாவும் டாக்டராக உள்ளனர். கனகரத்தினம், தனக்கு சொந்தமான இடத்தில், அவர் ஆறு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
கொரோனா பரவுதலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல நாட்களாக வாடகைக்கு விடப்பட்ட கடைகள் செயல்படாமல் பூட்டப்பட்டது. வியாபாரம் இல்லாத நிலையில், அந்த கடை உரிமையாளர்கள் வாடகை தரமுடியாமல் தவிப்பதை உணர்ந்தார் டாக்டர் கனகரத்தினம்.
ஆறு கடைகளுக்கும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய, மூன்று மாதங்களுக்கான, 4 லட்சத்து 20,000 ரூபாய் வாடகையை தர வேண்டாம் என கடைக்கரர்களிடம் அவர் தெரிவித்து, வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த மனிதநேய செயலை, அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
டாக்டர் கனகரத்தினம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய தெருவில் கிளினிக் நடத்தி வருபவர். மகப்பேறு மருத்துவரான இவரை 10 ரூபாய் மருத்துவர் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இன்று வரை அவர் 10 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்குவதால், மக்கள் அவரை அன்போடு அப்படி அழைக்கின்றனர். காசுக்கு முக்கியத்துவம் தராமல் தன்னிடம் வருபவர்களுக்கு அன்பாக அக்கறையுடன் சிகிச்சையளிப்பார்.
தகவல் உதவி: விகடன்