'வர்த்தகமயமாகும் வடசென்னை' - இலவசக் கல்வி மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அலி பாஷா!
குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலே கைவிட்ட அலி பாஷா, வடசென்னையில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியுடன், அவர்களது வாழும் பகுதி தொழில்மயமாக்கல் மற்றும் வர்த்தக விரிவாக்கத்தினால் அடையும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலே கைவிட்ட அலி பாஷா, வடசென்னையில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியுடன், அவர்களது வாழும் பகுதி தொழில்மயமாக்கல் மற்றும் வர்த்தக விரிவாக்கத்தினால் அடையும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
கலை, இசை மற்றும் போட்டோகிராபி போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஈடுப்படுத்தி, மோதல்கள் நிறைந்த சூழல்களுக்கு வெளியே உள்ள ஒரு உலகத்தை காட்டி, அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார்.
வறுமை மற்றும் சீரான நிதி நிலையற்ற வீட்டுச் சூழல்களால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய வடசென்னையின் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியை அளிக்கத் தொடங்கினார்கள் அலிபாஷாவும், அவரது தோழி சித்ராவும். அப்போது அவருக்கு வயது 17. ஏனெனில், குடும்பத்தின் மோசமான நிதி நிலைமை காரணமாக பாஷாவும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
அவரது குழந்தைப்பருவ அனுபவங்களால், மோசமான சமூக-பொருளாதார நிலைமைகளின் தாக்கத்தை நேரடியாகப் புரிந்துகொண்டார். எனவே, இருவரும் பள்ளிக்குப் பிறகு முறைசாரா வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்தனர். இந்த வகுப்புகள் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற முக்கிய பாடங்களில் கற்றலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டது. அதே வேளை, கலை, இசை மற்றும் போட்டோகிராபி போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்களிலிலும் அவர்களை ஈடுப்படுத்துகின்றன.
1992ம் ஆண்டில், வடசென்னை திருவொற்றியூரில் உள்ள "ஜெனித் டியூஷன் சென்டரில்" பாஷாவின் முயற்சிகள் முறைப்படுத்தப்பட்டன. மறுபுறம் மையத்தின் பணிகளை விரிவுபடுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் கேட்டரிங் தொழிலைத் தொடங்கினார். ஜெனித்தில், குழந்தைகள் வாழ்க்கைத் திறன்களை ஆராய்ந்தனர். வழக்கமான கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் கலந்து கொண்டனர். பாஷா அவர்களை தொடர்ந்து அருங்காட்சியகங்கள், காட்சியகங்கள் மற்றும் பல்வேறு சமூக இடங்களுக்கு அழைத்துச் சென்று, மோதல்கள் நிறைந்த சூழல்களுக்கு வெளியே உள்ள ஒரு உலகத்தைக் காட்டினார்.
நிலம் மற்றும் சூழலியலுக்கான நீண்டப் போராட்டம்...
மூன்று தசாப்தங்களாக, பாஷாவின் 'ஜெனித் டியூஷன் சென்டர்' ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உதவியுள்ளது. அவர்களது கல்விக்கு உதவியதுடன், தனிப்பட்ட மற்றும் கலாச்சார சூழலுக்குள் வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை வழிநடத்தியுள்ளது. அவர்களில் சிலர் தலைமுறை தலைமுறையாக அவர்களது நிலத்தையும் குடும்பத்தையும் பாதித்த, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாதலால் ஏற்படும் வறுமை மற்றும் சுரண்டலின் சுழற்சியை முறியடிக்க உழைக்கும் தலைவர்களாகிவிட்டனர்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் முன்மொழிந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது. பெட்ரோகெமிக்கல் ஆலைகள், நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் போதுமான ஒழுங்குமுறை அமலாக்கமின்றி சுற்றுச்சூழல் தரங்களை அடிக்கடி மீறுவதால், வடசென்னையின் கடலோரப் பகுதியான எண்ணூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகால விதிமீறல்களால் கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் சிற்றோடை கடுமையாக மாசுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய நீர் ஆதாரங்கள் இப்போது சாம்பல் மற்றும் எண்ணெய் கசிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பூர்வீக மீன் இனத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. குடிநீரே மக்களுக்கு ஆபத்தாகியுள்ளது.
"ஏற்கனவே அரிப்பினால் பாதிக்கப்படக்கூடிய இந்தப் பகுதி, விரிவாக்கம் தொடர்ந்தால், கரையோரங்களின் தீவிர இழப்பை எதிர்கொள்ளும். இது இப்பகுதியில் தனித்துவமான கடல் மற்றும் பறவை இனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். பாரம்பரிய வாழ்வாதாரங்களின் இழப்பினால், உள்ளூர் மக்கள் இடம்பெயர்வு ஆளாகுகின்றனர்," என்று பகிர்ந்தார் பாஷாவுடன் பணிபுரியும் கலைஞர் சாத்விக் காடே.
ஒரு காலத்தில் செழிப்பாகயிருந்த இந்நீரை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க முடியாத நிலையில், பிழைப்பிற்காக பலர் குறைந்த ஊதியத்திற்கும், அவர்களுக்கு பழக்கமற்ற, பாரம்பரியமற்ற வேலைகளை மேற்கொள்கின்றனர். இது அவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் பாதித்துள்ளது. பாஷா போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எண்ணூர், புலிகாட் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மீனவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தத் திட்டங்களால் ஏற்படும் பாதகங்களை அடையாளம் காண கல்வி மற்றும் அதிகாரம் அளித்து வருகின்றனர்.
தலைமைத்துவத்திற்கான கல்வி..!
சமூகத்தின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க, பல ஆண்டுகளாக பாஷா அவரை அர்ப்பணித்துள்ளார். எண்ணூர் மற்றும் மீஞ்சூர் போன்ற கிரேட்டர் சென்னை மாநகராட்சிப் பகுதிகளை விட புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் தொழில்மயமாக்கல் மற்றும் வர்த்தக விரிவாக்கத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளார்.
"உள்ளூர் சமூகங்களுக்கு குறுகிய கால பொருளாதார நலன்களை உறுதியளிப்பதன் மூலம், பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் சூழலியல் ரீதியாக உணர்திறன் பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்துகின்றன. இதற்கு ஈடாக பண இழப்பீடு முதல் தற்காலிக வேலை வரை அளிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த சலுகைகள் அப்பகுதிகளில் வாழும் மக்களை ஈர்க்கிறது. ஆனால், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளுக்கு பெரும்பாலும் கணக்கு காட்டுவதில்லை.
எண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்த சலுகைகள் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோப்பைகள், மருத்துவ முகாம்கள், துறைமுகத்தில் வேலைகள் மற்றும் குழந்தைகளுக்கான புதிய சீருடைகள் போன்ற வடிவங்களில் உள்ளன. இருப்பினும், இந்த குறுகிய கால நன்மைகளுக்கு ஈடாக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அடையும் பாதிப்பை அக்குடியிருப்பாளர்கள் கண்டுக்கொள்வதில்லை.
அந்நிலங்கள் கடுமையான மாசுபாடு, மற்றும் நீர் மாசுபாட்டிற்கு உள்ளாகின்றன. அவை உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை மீளமுடியாத அளவிற்கு சேதப்படுத்தும். விவசாயம் மற்றும் மீன்பிடியில், பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்களை இழக்க வழிவகுக்குகிறது. நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயும் காலநிலை வல்லுநர்களின் உரையாடல்கள், கலைக்கல்வி மற்றும் தெரு நாடகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் வழி அவர்களுக்கு சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்துவதே எங்களது குறிக்கோள்," என்றார் அலிபாஷா.
30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்மயமாக்கல், எண்ணூர் மற்றும் மீஞ்சூர் நிலப்பரப்பை மாற்றிவிட்டது. கடுமையான தொழில்துறை மாசுபாடு இருந்தபோதிலும், சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் மக்கள் தொடர்ந்து இப்பகுதிகளில் குடியேறியும், வசித்தும் வருகின்றனர்.
"மக்கள் கடினமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். ஏனெனில், தொழிற்சாலைகள் அவர்களின் விவசாய நிலங்களை பறித்துவிட்டன. மாசுபடுத்திகள் மீதமுள்ள பல நிலங்களையும் நீர்நிலைகளையும் தரிசாக அல்லது நச்சுத்தன்மையாக்கிவிட்டன. நிறுவனங்கள் மக்களுக்கு வேலைகளை அளிப்பதாக உறுதியளிக்கின்றன. ஆனால், அவை ஒருபோதும் நிறைவேறாது. புற சென்னை சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக மீஞ்சூருக்கு வடக்கே சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள காட்டூர், சோமஞ்சேரி மற்றும் அருகிலுள்ள பிற கிராமங்களில் இப்போது இதேபோன்ற பாதிப்புகள் சுழற்சி மீண்டும் நடக்கிறது என்றார்," என்கிறார் கேட்.
கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கலால் ஏற்பட்ட கண்கூடான பாதிப்புகளில் ஒன்று எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் ஏற்பட்ட சேதம். அச்சம்பவம் மீன்பிடி நடவடிக்கைகளை கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தியது. நீரில் இருந்து எண்ணெயை வெளியேற்ற பிளாஸ்டிக் குடங்களைப் பயன்படுத்தி தற்காலிக துப்புரவு முறைகளுடன் போராடியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகளிடமிருந்து வலுவான துப்புரவு உதவிக்காக அவர்கள் காத்திருந்தனர். கசிவு மீன்பிடி பகுதிகளை மாசுபடுத்தியது மட்டுமல்லாமல், இந்த சமூகங்கள் மீது குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடிக்கும் வழிவகுத்தது. எண்ணுார் எண்ணெய் கசிவை கருப்பொருளாகக் கொண்டு கலைப்படைப்புகளை உருவாக்க பாஷா அவரது மாணவர்களை ஊக்குவித்தார். பின்னர், அவற்றை சென்னையின் பிரபலமான கலைக்கூடங்களில் ஒன்றான அஷ்விதாவில் காட்சிப்படுத்தியுள்ளார்.
2018ம் ஆண்டு திருவொற்றியூரில் வசிக்கும் கலை மாணவரான எம்.ராஜேஷ், ஜெனித் டியூஷன் சென்டரில் சேர்ந்தார். கலையின் மீது ராஜேஷிற்கு இருந்த தீவிர ஆர்வத்தை பாஷா கண்டறிந்தார். பாஷா அவரை ஊக்குவித்தார். பள்ளிக் கட்டணத்தை முழுமையாக கட்டி முடிக்காமல் இருந்ததால் 12ம் வகுப்பிற்குப் பிறகு ராஜேஷால் கல்லூரியில் சேரமுடியவில்லை. என்றாலும், பாஷாவின் ஊக்கத்தால் அவரது கலைப் பயிற்சியைத் தொடர்ந்தார். சில முயற்சிகளுக்குப் பிறகு, அவர் பள்ளிப் படிப்பை முடித்தார். தற்போது, சென்னை அரசு நுண்கலை கல்லூரியில் நுண்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் அவரது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார்.
"நம்மைப் போன்ற சமூகங்களுக்கு, கல்வி என்பது பெரும்பாலும் அனைத்து பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வாகும். உலகை எதிர்கொள்ள நம்மை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டிய தன்னம்பிக்கையே நமக்கு தேவை," என்று கூறினார் ராஜேஷ்.
ஆங்கிலத்தில்: சரண்யா, தமிழில்: ஜெயஸ்ரீ
நக்சல் பகுதிகளில் அழிந்த பள்ளிக்கூடங்கள்; குழந்தைகளின் கல்வியை மீட்டெடுக்கும் சமூக ஆர்வலர்!