‘கொரோனா ஹீரோஸ்’ : தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய-அமெரிக்க டாக்டர்கள்
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து நோய்தொற்று ஏற்பட்டு பல அமெரிக்க-இந்திய மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒரு சில நாடுகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 68,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் பலருக்கும் நோய்தொற்று ஏற்பட்டு உயிரிழப்பது வருத்தமளிக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து நோய்தொற்று ஏற்பட்டு பல இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 10 டாக்டர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்று இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1994-ம் ஆண்டு தனது கணவருடன் அமெரிக்கா சென்ற இந்திய அமெரிக்கரான டாக்டர் மாத்வி அயா நியூயார்க்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவருக்கும் இந்தக் கொடிய நோய்தொற்று ஏற்பட்டது.
மருத்துவப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு சிகிச்சையளித்து வந்த மாத்வி உயிரிழப்பதற்கு முன்பு கூட தன்னுடைய கணவரையும், மகளையும் பார்க்கமுடியாமல் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்ப முடிந்துள்ளது சோகமான விஷயம்.
“மாத்வி தன் வாழ்நாளை மருத்துவத்துக்காகவே செலவிட்டுள்ளார். அவர் மருத்துவத்துறை மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பு அவரின் இந்த உயிர்த்தியாகம் மூலம் தெரியவந்துள்ளது.”
டாக்டர் ரஜத் குப்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நியூஜெர்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார். அந்த நோயாளி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். அது ரஜத் குப்தாவின் உடல் மீது பட்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தீவிர முயற்சிகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்திய அமெரிக்கரான 43 வயது பிரியா கண்ணா சிறுநீரக மருத்துவர். இவர் நியூஜெர்சியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 78 வயதான இவரது அப்பாவிற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
“இந்திய-அமெரிக்க டாக்டர்கள் உண்மையான ஹீரோக்கள். பலர் இந்நோய்க்கு சிகிச்சை அளித்து தாங்களும் பெற்றதால் உயிரிழந்துள்ளனர். சிலர் உன்னும் ஐசியூ பிரிவில் தீவிரச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று அமெரிக்க-இந்திய மருத்துவர்கள் துணைத்தலைவர் தெரிவித்தார்.
இவர்கள் தவிர டாக்டர் அஜய் லோதா கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு நியூயார்க் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். டாக்டர் அஞ்சனா சமாதர், பிரபல இந்திய அமெரிக்க மருத்துவரான டாக்டர் சுனில் மெஹ்ரா ஆகியோரின் உடல்நிலையும் மோசமாக உள்ளது.
உலகம் முழுவதும் இவர்களைப் போன்ற எண்ணற்ற மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்கிற போரில் மருத்துவப் பணியாளர்கள் ராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள். இவர்களது உன்னத சேவையைப் போற்றி வணங்குவோம்.
கட்டுரை தொகுப்பு: ஸ்ரீவித்யா