இணையம் மூலம் சம்பாதிப்பது எப்படி? வழிகாட்டும் இணையதளம்!
இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்:
இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம் தான் விஷயமே. இந்த கட்டுரை முன் வைத்து அலசும் கேள்விக்கு உண்மையான பதிலும் அந்த ஏமாற்றமே. ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்குள் நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த கேள்விக்கு ஏமாற்றம் தராத பதில் அளிக்காமல் இருக்கவே இந்த ஆரம்ப எச்சரிக்கை. இனி தயங்காமல் வாசிக்கவும்!
இணையத்தின் மூலம் சம்பாதிப்பது எப்படி? இது அந்த கேள்வி!
அநேகமாக இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இது இருக்க வேண்டும். இணையத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கேள்வி ஏதாவது ஒரு கட்டத்தில் எழுந்திருக்கும். சிலருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கலாம். பலர் சரியான பதில் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இந்த கேள்வியை வெறுத்து ஒதுக்கியிருக்கலாம். உங்களுக்கும் கூட இந்த கேள்வி மனதில் இருக்கலாம்.
இந்த கேள்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட, இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார்கள் எனும் ஆர்வம் ஏற்படலாம். எப்படி பார்த்தாலும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய கேள்வி!
இந்த கேள்விக்கு எண்ணற்ற பதில்கள் இல்லாமல் இல்லை. யூடியூப் மூலம் சம்பாதிக்கலாம், வலைப்பதிவு செய்து சம்பாதிக்கலாம், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து சம்பாதிக்கலாம் என பலவிதமாக அவை அமைகின்றன. இந்த வழிகளில் லட்சங்களிலும், ஏன் கோடிகளிலும் சம்பாதித்தவர்களின் வெற்றிக்கதைகளும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி கொண்டே தான் இருக்கின்றன.
யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி? என்றோ அல்லது வெற்றிகரமாக வலைப்பதிவு செய்து வருவாய் ஈட்டுவது எப்படி? என்றோ வழிகாட்டும் கட்டுரைகளும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.
இவைத்தவிர, வீட்டிலிருந்தே இணையத்தில் சம்பாதிக்கலாம், ஆன்லைன் சர்வே செய்து சம்பாதிக்கலாம், எதுவும் செய்யாமல் கிளிக் செய்யாமலே சம்பாதிக்கலாம் என ரீதியிலும் பதில்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வகை பதில்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருவாய் அளிப்பவை, இவற்றை படிக்கும் அப்பாவிகளுக்கு அல்ல என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.
இதன் பொருள் இணையம் மூலம் சம்பாதிக்க முடியாது என்பதோ, அது மிகவும் கடினமானதோ அல்ல என்பது அல்ல: இணையம் மூலம் நிச்சயம் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கான வழியை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான வழிகள் எல்லாம் ஒரு வழிகாட்டி தான். அவை நிச்சயம் வெற்றிக்கான அறிகுறி அல்ல. நடைமுறையில் பலன் அளிக்க வேண்டும் எனில், ஒவ்வொருவரும் தங்களுக்கான வழியை தாங்களே தான் கண்டு கொள்ள வேண்டும்.
அதாவது இணைய பயன்பாட்டில் நீங்களே ஊக்கம் பெற்று உங்களுக்கான வழியை மின்னல் கீற்றாக கண்டறிய வேண்டும். அப்படி செய்தால் உங்களாலும் நிச்சயமாக இணையத்தில் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ சம்பாதிக்க முடியும்.
இந்த பதிலில் உங்களுக்கு திருப்தி இல்லை எனில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ’ஹூ பைடு 99செண்ட்ஸ்’ (https://whopaid99cents.com/ ) இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், இணையத்தில் இப்படி எல்லாம் கூட சம்பாதிக்கலாம் என்பதை உணர்த்துகிறது. அதைவிட முக்கியமாக, இப்படி தான் சம்பாதிக்க வேண்டும் என்றும் உணர்த்துவதாக அமைகிறது.
இந்த தளத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். உண்மையில் அப்படி விரிவாக பார்க்க இந்த தளத்தில் எதுவுமே இல்லை. ஆனாலும் இந்த தளம் உங்கள் கவனத்தை ஈர்க்கும் என்பது தான் விஷயம்.
99 செண்ட்களை செலுத்தியது யார்? எனும் கேள்வி தான் இந்த தளத்தில் நுழைந்ததும் உங்களை வரவேற்கிறது. இந்த கேள்விக்கான பதிலை அளிப்பது தான் இந்த தளத்தின் நோக்கமும் கூட. ஆனால் இந்த கேள்விக்கு பதில் அறிய இமெயில் முகவரி மற்றும் கிரெடிட் கார்டு விவரத்தை அளித்து நீங்கள் 99 செண்ட்களை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், இதற்கு முன், இப்படி 99 செண்ட் செலுத்தியவர்கள் பட்டியலை நீங்கள் பார்க்கலாம். அவ்வளவு தான் இந்த தளம்.
எப்படி இருக்கிறது பாருங்கள்? ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு கேள்வியை கேட்டு அதற்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் காசு கொடுக்க வைக்கிறது இந்த தளம். மற்றபடி இதில் வேறு எதுவும் இல்லை. பலரும் இதெல்லாம் ஒரு தளமா? என அலட்சியம் செய்யலாம். ஆனால் யாரேனும் சிலர், என்ன தான் பதில் வருகிறது என பார்க்க 99 செண்ட் அளிக்கலாம். இந்த எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும் கூட வருவாய் தானே!
அது மட்டும் அல்ல, இந்த விநோதமான புதுமையான ஐடியா, வியக்க வைக்கிறது அல்லவா? ஆர்வம் ஏற்படுவதோடு, இந்த தளத்தில் வேறு ஏதேனும் இருக்குமா? அல்லது மோசடியாக இருக்குமா? என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது அல்லவா? இந்த ஆர்வமே இந்த தளத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் சிலர் இந்த தளத்தால் கவரப்பட்டு, இது பற்றி விரிவாக எழுதுவதற்காக, 99 செண்ட்களை செலவிட்டு பார்த்து கட்டுரை எழுதியிருக்கின்றனர். 99 செண்ட்கள் என்பது பெரிய தொகை அல்ல என்பதால் யாரும் பொருட்படுத்துவதில்லை.
ஆக, இந்த தளம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துவிட்டது. மெல்ல இந்த தளம் வைரலாகி மேலும் பலரது ஆர்வத்தை ஈர்க்கலாம். அல்லது ஆரம்ப பரபரப்போடு அடங்கிப்போகலாம். ஆனால் எப்படி பார்த்தாலும் இந்த தளம் வருவாய் ஈட்டிக்கொண்டே இருக்கும். ஏனெனில் அதை பயன்படுத்த 99 செண்ட்களை செலவிட்டாக வேண்டும். அதற்கேற்ற தூண்டிலும் இந்த தளத்தில் இருக்கிறது.
’மாஷபில்’, ’பிஸ்னஸ் இன்சைடர்’ உள்ளிட்ட தளங்கள் இந்த விநோதமான தளம் பற்றி எழுதியுள்ளன. இந்த தளம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், இதன் பின்னணி பற்றி எல்லாம் அலசி எழுதியிருக்கின்றனர். இந்த தளத்தை உருவாக்கிய திங்கோ எனும் இணைய நிறுவனத்தின் பங்குதாரர் பாஸ்குலே டிசில்வா என்பவரிடமே ஸ்லேட் இணைய இதழ் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இந்த பேட்டியில் சுவையான பல விஷயங்கள் இருக்கின்றன.
முக்கியமாக, சில ஆண்டுகளுக்கு முன் இதேப் போல புதுமையான ஐடியா மூலம் இணையத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்த மில்லியன் டாலர்ஹோம்பேஜ் பற்றிய குறிப்பும் வருகிறது. நிலத்தை மனையாக்கி விற்பது போல, இணையதளத்தின் முகப்பு பக்கத்தை டிஜிட்டல் மனைகளாக்கி, அவற்றை பிராண்ட்களுக்கு விற்று உண்மையிலேயே மில்லியன் டாலர் சம்பாதித்த இணையதளம் இது.
இது போல புதுமையான இணைய முயற்சிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அந்த வரிசையில் தான் மேலே சொன்ன இணையதளமும் வருகிறது. ஆக, இணையத்தில் சம்பாதிக்க வேண்டும் எனில் புதுமையாக சோசித்து உங்களுக்கான ஐடியாவை கண்டறியுங்கள். அதற்காக இத்தகைய விநோத இணையதளங்களை உருவாக்க ரூம் போட்டி யோசிக்க வேண்டும் என்றில்லை, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என எந்த சேவையை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, அந்த சேவையின் ஆதார குணத்தை உங்கள் தனித்தன்மையான திறனோடு எப்படி பயன்படுத்தலாம் என யோசியுங்கள், உங்களிடமும் வெற்றிகரமான இணைய ஐடியா ரெடி!