யாரெல்லாம் ‘Boomer’ அங்கிள்? - வரலாற்றுப் பின்புலமும்; சமகால பூமர்களும்!
2கே கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்களைக் காட்டிலும் இப்போதெல்லாம் அதிகம் புழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது ‘பூமர் அங்கிள்’. இளம் தலைமுறையினரலாலும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாலும் கலாய்க்கப்படும் இந்த ‘Boomer’-க்குப் பின்னால் நிறைய சிரிப்புக்குரிய விஷயங்களும், சிந்திக்கத்தக்க அம்சங்களும் உள்ளன.
‘லவ் டுடே’ படத்தில் நாயகன் பிரதீப் செம்ம டென்ஷனாக போனில் நாயகியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் நாற்பதைக் கடந்த உறவினர் ஒருவர் வருவார். “ம்ம்ம்ம்... லைஃபை எஞ்சாய் பண்ற..” என்கிற ரீதியில் சொல்லிக்கொண்டே கடந்துபோவார். அவரை பிரதீப் கடுப்புடன் நோக்குவார். அப்போது, அந்த உறவினரை ‘Boomer Uncle’ என்று குறிப்பிட்டு திரையில் எழுத்துகள் கொட்டையாகத் தோன்றுவதை கவனிக்கலாம்.
‘பூமர்’ என்பதற்கான வரையறையை போகிற போக்கில் பதிவு செய்வார் பிரதீப்.
பூமர் அங்கிள் என்றால் என்ன?
கடந்த தலைமுறையினரில் பிற்போக்குகளைப் பின்பற்றுவோர், சமகாலத்தின் இளம் தலைமுறையினரிடம் ட்ரெண்டிங்கில் இருக்கும் வாழ்வியல் விஷயங்கள் எதையும் புரிந்துகொள்ளாமல் பற்றுகொண்டு இருப்போரையே பொதுவாக ‘பூமர்’ என்று குறிப்பிடப்படுகின்றனர்.
பூமர் - வரலாறு சொல்வது என்ன?
கடந்த 1945ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களை ‘பேபி பூமர்ஸ்’ (Baby Boomers) என்று அழைக்கப்படுகின்றனர்.
இதற்குப் பின்னால் வரலாற்றுக் காரணமும் உண்டு. அதாவது, 2-ம் உலகப் போர் முடிந்து, இயல்பு நிலைத் திரும்பிய பின்னர் வளர்ந்த நாடுகளில் குழந்தைப் பிறப்பு சதவிகிதம் வெகுவாக உயர்ந்தது. ஒரு வீட்டில் 10, 15 குழந்தைகள் கூட வலம் வந்தனர். அந்த அளவுக்கு குழந்தைப் பிறப்பு விகிதம் அப்போது அதிகம்.
அந்தக் குழந்தைகளை அப்போது செல்லமாக ‘பேபி பூமர்’ என்று சுற்றத்தார் அழைப்பர். இப்போது கூட வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகையில், அந்தக் காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பர்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 1945-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் தங்களது வீடுகளுக்கு பத்திரமாக திரும்பியதும் குடும்ப வாழ்க்கையில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.
இரண்டாம் உலகப் போருக்கு அடுத்த 15, 20 ஆண்டுகளில் உலக அளவில் மக்கள் தொகை வேகமெடுத்தது. ஆம், அதிகக் குழந்தைப் பிறப்புகளால் மக்கள்தொகை ‘பூம்’ ஆனது. எனவேதான், அந்தக் காலக்கட்டத்தில் பிறந்தவர்களை ‘பேபி பூமர்’ என்றனர். அவர்களே இப்போது வயதாகி கடந்த தலைமுறையினர் ஆகிவிட்டதால் அவர்கள் ‘பூமர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
பின்னர், வயதின் அடிப்படையில் மட்டுமின்றி, மனதளவில் ஒருவர் கடந்த தலைமுறையினர் போல இருந்தாலே, அவர்களை பூமர், பூமர் அங்கிள், பூமர் ஆன்ட்டி என்றும், அவர்கள் செய்வது பூமர்த்தனம் என்றும் சொல்லத் தொடங்கிவிட்டனர்.
‘பூமர்’ பாப்புலர் ஆனது எப்போது?
டிக் டாக் பிரபலம் அடையத் தொடங்கிய 2018ல் ஒரு வீடியோ செம்ம வைரல் ஆனது. அதில், ஒரு சிறுவனிடம் வயதான ஒருவர்,
“இந்த ஜெனரேஷன்ல இருக்குற பிள்ளைங்க எல்லாமே சரியில்லை. எல்லாருக்கும் ஒருநாள் வயசு ஆகத்தான் போவுது. சோ, உங்க பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க...” என்று அட்வைஸ் சொல்வார். அதற்கு அந்தச் சிறுவன், ஒரு நோட்டுப் புத்தகத்தில் ‘OK Boomer' எழுதிக் காட்டிவிட்டுச் செல்வான்.
அது, இளம் தலைமுறையினரிடையே வைரல் ஆனது. பெரியவங்க ஏதாச்சும் அட்வைஸ் பண்ணா, அது நமக்கு சரிபட்டு வரவில்லை என்றால், ‘ஓகே பூமர்’ என்று சொல்லி கடந்துவிடுவது மீம் மெட்டீரியல் ஆனது.
இந்தப் போக்கின் உச்சமாக, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், 25 ப்ளஸ் வயது கொண்ட பெண் உறுப்பினரான க்லோயி சுவார்பிரிக் என்பவர், காலநிலை மாற்றம் தொடர்பான சட்ட மசோதாவைப் பற்றி பேசும்போது,
“இந்த நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் உறுப்பினர்களின் சராசரி வயது 49. இவர்கள் யாரும் எதிர்காலம் பற்றி யோசிப்பதே இல்லை...” என்று பேசியபோது, ஒரு மூத்த உறுப்பினர் இடைமறித்து ஏதோ அட்வைஸ் தொனியில் பேச, அப்போது சட்டென ’ஓகே பூமர்’ என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்ததும் குட்டி வீடியோவாக இணையத்தில் வைரலாகி, ‘பூமர்’ சொல், உலக அளவில் இளம் தலைமுறையினரால் அதிகம் புழக்கத்தில் இருக்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பூமர் - ப்ளஸ்கள் என்னென்ன?
சரி, பூமர்களிடம் சொல்லிக்கொள்ளும் அளவில் பாசிட்டிவ் விஷயங்களே இல்லையா? என்று கேட்டால், நிறைய இருக்கிறது என்பதுதான் நேர்மையான பதில். பொதுவாக பூமர்களிடம், அதாவது, இப்போது 50 வயதைக் கடந்துவிட்டவர்கள் அல்லது அந்த வயதினரை ஒத்த மனநிலை கொண்டவர்களிடம் உள்ள பாசிட்டிவ் அம்சங்களாகப் பார்க்கப்படுபவை இவை:
- தங்கள் பணிபுரியும் நிறுவனத்துக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர்.
- பூமர்கள் பலரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே நிறுவனத்தில் உழைப்பர்.
- விடுப்பின்றி தினமும் தவறாமல் அலுவலகம் சென்று பணிபுரிவதில் பேரார்வம் காட்டுவர்.
- அலுவலகத்துக்கு சீக்கிரம் சென்று, வீட்டுக்கு லேட்டாக கிளம்புவர்.
- உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவர்.
- 20 ப்ளஸ் வயது ஆகும்போதே இல்லற வாழ்க்கையைத் தொடங்கிவிடுவர்.
- உடை அணிவதில், அலங்கார செய்வதில் அதீத ஈடுபாடு காட்டமாட்டார்கள்.
பூமர் - கலாய்க்கப்படுவதன் காரணிகள்
- இளம்தலைமுறையினருக்கு அறிவுரை மழை பொழிவர்.
- வேலையில் பாதுகாப்பு உணர்வு அதீதம் என்பதால் ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டார்கள்.
- ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...’ என்கிற தொனியில் அடிக்கடி பேசுவர்.
- சொன்னதையே திரும்பத் திரும்ப சலிக்காமல் பேசுவர்.
- “என்னதான் இருந்தாலும் எங்க காலம் போல வருமா...” என அனத்துவர்.
- எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாமல் நீட்டி இழுத்துப் பேசுவர்.
- ‘கன்சர்வேட்டிவ்’ என்பது ரத்தத்தில் கலந்திருக்கும்
- செயலிலும் சிந்தனையிலும் பிற்போக்குத்தனம் மிகுந்திருக்கும்.
இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், எல்லா தரப்பிலும் விதிவிலக்கு என்பது உள்ளதுதானே. அந்த வகையில், பூமருக்கான வயதை எட்டியவர்களில் பலரும் முற்போக்கு சிந்தனையுடன், இளம் தலைமுறையினருடன் அனைத்திலும் அப்டேட்டாக இருப்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
அதேபோல், வயதின் காரணமாக ஒருவர் இளம் தலைமுறையினராக அறியப்பட்டாலும், அவர் தன் சிந்தனை - செயல்களால் பிற்போக்குத்தனம் மிகுந்திருந்தால் அவரும் பூமர்தான். அவர் செய்வதும் பூமர்த்தனம்தான். இதற்கு ஓர் உதாரணம்:
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காதல் என்ற பெயரில் ‘ஸ்டாக்கிங்’ செய்வதை ஹீரோயிசமாக காட்டி வந்தனர். இப்போது அது வெகுவாக குறைந்துவிட்டது. ஏனெனில், ‘ஸ்டாக்கிங்’ என்பதும் பாலியல் குற்றம் என்ற தெளிவு இப்போது நம் சமூகத்துக்கு கிடைத்துள்ளது. இந்தக் காலக்கட்டத்திலும் இளம் தலைமுறையினரில் யாராவது ஒருவர் காதல் என்ற பெயரில் பின்தொடர்ந்து ‘ஸ்டாக்கிங்’ செய்தால், அதுவும் விமர்சிக்கத்தக்க பூமர்த்தனம்.
ஓகே! ஓகே! இதோட நிறுத்திக்கறேன்... இதுக்கு மேலே எழுதினால், என்னையும் நீங்க பூமர் அங்கிள்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவீங்க...
80s கிட்ஸ், 90s கிட்ஸ், 2K கிட்ஸ் யார் யார்? - ‘மில்லினியல்ஸ்’ யாருனும் தெரிஞ்சுக்கங்க!
Edited by Induja Raghunathan