வாட்ச் அணிவதை தவிர்த்த ஆப்பிள் நிறுவனர் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ - ஏன் தெரியுமா?
வாட்ச் அணிவதை தவிர்த்த ஸ்டீவ் ஜாப்ஸ் வேறு வகையான கடிகாரத்தைக் கண்டுப்பிடிக்கிறார் என்றால், அவரது சொந்தப் பார்வை என்பது கார்ப்பரேட் நலன்களை பாதிக்காமல் இருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் வாட்ச் கட்டும் பழக்கம் இருந்தது இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். வேகமாக ஓடும் உலகில் ஒருவர் வாட்ச் கட்டாமல் இருக்க முடியுமா? அதுவும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) போன்ற ஒரு மிகப் பெரிய தொழிலதிபர், செல்வந்தர், உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் சாகசர் கைக்கடிகாரம் கட்டவில்லை எனில், அதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்பதை அறிய ஆவலாகவே இருக்கும்தானே?!
நாம் இந்தக் கட்டுரையில் அதுபற்றிதான் பேசப் போகிறோம். அதாவது, காலத்தின் கட்டாயங்கள் இல்லாமல் காலமெனும் தடைகளின்றி ஓடக்கூடிய, வாழக்கூடிய ஒரு வாழ்க்கையை அவரது இந்தச் செய்கை குறிக்கின்றது.
அதாவது, காலம் காட்டியைப் பார்த்துப் பணியாற்றுதல் என்பது ‘இந்த நேரத்தில் இதை இதைச் செய்ய வேண்டும்’ என்ற காலச்சிறைக்குள் அடைப்பதாகும். ஆனால், ஒவ்வொரு கணத்தையுமே மதிப்பு மிக்கதாகவும் போற்றத் தகுந்ததாகவும் கருதும் ஒரு நபர் கைக்கடிகாரம் தேவையில்லை என்று நினைப்பதில் ஆச்சரியமில்லை. அப்படிப்பட்ட மனிதர்தான் இந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஐபோன் போன்ற படைப்புகளால் தொழில்நுட்ப நிலப்பரப்பை மாற்றியமைத்து, தனது கண்டுபிடிப்புகளால் அழியாத முத்திரையை பதித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரது முன்னேற்ற, முற்போக்குத் தொழில்நுட்ப பங்களிப்புகளுக்கு இடையே, பரபரப்பாக இயங்கும் வாழ்க்கை முறைகளுக்கு இடையே கைக்கடிகாரம் அணிவதில்லை என்ற தீர்மானத்தையும் அவர் எடுத்தார்.
வித்தியாசமாக சிந்திக்கும் நபரான ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த வாட்ச் தவிர்ப்பு நடவடிக்கையும் வித்தியாசமான அவரது வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ் மகளின் பகிர்வு
ஸ்டீவ் ஜாப்ஸ் தன் மகள் லிசா பிரெனனுடன் நடத்திய எண்ணற்ற உரையாடல்களில் ‘வாட்ச் வேண்டாம்’ என்று அவர் வேண்டுமென்றே எடுத்த முடிவு குறித்து மகள் லிசா தன் ‘ஸ்மால் ஃப்ரை’ (Small Fry) என்ற நினைவுக்குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். இதில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை மற்றும் காலநேரம் பற்றிய அவரது தனித்தன்மை வாய்ந்த தத்துவப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
‘நான் காலத்தினால் பிணைக்கப்பட விரும்பவில்லை’ என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியதாக லிசா பதிவு செய்துள்ளார்.
அதாவது, ஓய்வு ஒழிச்சலின்றி டிக் டிக் சப்தங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் எந்திரம் நம்மைக் கட்டுப்படுத்துவதா என்ற கேள்வியில் சுதந்திர வாழ்க்கை என்பது வாட்ச் கட்டிக்கொள்ளாமல் வாழ்வதே என்ற முடிவை அவருக்குத் தந்திருக்கிறது.
நேரம் குறித்த இத்தகைய அணுகுமுறை, வாழ்க்கையின் தற்போதைய தருணங்களை, அந்தந்தக் கணங்களை முழுமையாக அனுபவிப்பதில் ஜாப்ஸின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், நேரத்தின் தற்காலிக எல்லைகளின் கட்டுப்பாடற்ற ஒரு சுதந்திர, ஆக்கபூர்வ வாழ்தலுக்கான அவரது அர்ப்பணிப்பை நோக்கியதாகும்.
ஸ்டீவ் ஜாப்ஸின் இத்தகு தொலைநோக்கு சித்தாந்தம் ஏதோ வாட்ச் கட்டாத எளிமை என்னும் டாம்பீகத்தை உணர்த்த அல்ல. மாறாக சுதந்திரம், புதுமையான சிந்தனையைக் கொண்டாடும் ஒரு தத்துவத்தை உள்ளடக்கியதாகவும் இருந்தது. ஒரு கடிகாரம் வழங்கும் வாழ்க்கையின் விரைவான இயல்பு பற்றிய ஒரு நச்சரிப்பு நினைவூட்டலைத் தவிர்க்கவும் வாட்சை நிராகரித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
நகைமுரண்
தொழில்நுட்ப புதுமைக் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தும் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஒருவர் வாட்ச் என்னும் தொழில்நுட்பத்தை மறுக்கும் முரண் வாழ்க்கை பற்றிய அவரது தத்துவக் கண்ணோட்டம் பற்றியதாகும்.
ஏனெனில், கைக்கடிகாரம் என்பது மட்டுப்படுத்துவதன் குறியீடு, அதிகாரம் வழங்குவதன் குறியீடு அல்ல என்கிறார் ஜாப்ஸ். காலச்சங்கிலி பிணைக்காத ஒரு வாழ்க்கையை அவர் நேசிக்கிறார். ஒவ்வொரு கணத்தின் ஆற்றலையும் பயன்பாட்டையும் எதிர்கால உந்து விசையையும் அவர் நோக்குவதால்தான் ரிஸ்ட் வாட்சைத் தவிர்க்கிறார்.
இதில் இன்னொரு நகைமுரண் என்னவெனில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாட்சை வெறுத்தாலும், அவரது நிறுவனம் ஆப்பிள் வாட்ச்சை அறிமுகம் செய்ததே. மரபான நேரம் காட்டும் கருவியாக இருப்பதுடன் ஆப்பிள் வாட்ச் வேறு பல உயர் தொழில்நுட்ப சாதக அம்சங்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாட்ச் என்று சொல்லப்படும் இந்த வாட்ச்கள் நம் வாழ்க்கையின் அங்கமாகவே இன்று மாறிவிட்டது. EKG திறன்களுடன் வீழ்ச்சி கண்டறிதல் முதல் இதய ஆரோக்கிய கண்காணிப்பு வரையிலான அம்சங்களை வழங்கும் அதிசய வாட்ச் என்னும் ஒரு தொழில்நுட்பத்தையும் ஆப்பிள் நிறுவனர் வழங்கியுள்ளார்.
வாட்சைப் புறக்கணிக்கும் ஒருவர் வேறு வகையான கடிகாரத்தைக் கண்டுப்பிடிக்கிறார் என்றால், அவரது சொந்தப் பார்வை என்பது கார்ப்பரேட் நலன்களை பாதிக்காமல் இருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நேரம் பற்றிய ஸ்டீவ் ஜாப்ஸின் தத்துவம் நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட வற்புறுத்துகிறது. அவர் கடிகாரத்தை அணிய வேண்டாம் என்று தேர்வு செய்தாலும், அவரது தாக்கம் வரலாற்றில் எதிரொலிக்கிறது. அவர் பொக்கிஷமாக வைத்திருந்த தருணங்களைப் போலவே காலமற்ற ஒரு பார்வையைக் கொண்டதாக உள்ளது.
இங்கே காலம் குறித்த ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரு மேற்கோளும் நினைவுக்கு வருகிறது. அது...
“உங்களுக்கான நேரம் குறைவானது. எனவே, வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து, அதை வீணடிக்காதீர்கள்!”
எது எப்படியிருந்தாலும் வாட்ச்சுடனோ, வாட்ச் இல்லாமலோ காலச் சங்கியிலினால் பிணைப்புறாத ஒரு சுதந்திர வாழ்வு, படைப்பூக்கமிக்க ஒரு வாழ்வையே ஸ்டீவ் ஜாப்ஸ் பரிந்துரைக்கிறார்.
“வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் விலைமதிப்பில்லாதவை” என்பதுதான் அவர் வாட்ச் அணியாததன் பின்னணியில் உள்ள வாழ்க்கைத் தத்துவம்.
மூலம்: Nucleus_AI
Motivational Quote | நீங்கள் தொண்டனா? தலைவனா? - ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லும் தாரக மந்திரம்!
Edited by Induja Raghunathan