10 கோடி வரை நன்கொடை கொடுத்து பெண் குழந்தைகள் படிப்பிற்கு உதவிவரும் 95 வயது 'குரோர்பதி ஃபக்கீர்’
ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர். காசிராம் வர்மா பெண் குழந்தைகளின் கல்விக்காக இதுவரை 10 கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை வழங்கியுள்ளார்.
பெண் கல்வி பற்றி ஏராளமான முழக்கங்களும் முன்னெடுப்புகளும் இருந்து வந்தாலும், எத்தனையோ சிறுமிகளுக்கு அடிப்படைக் கல்விகூட கிடைப்பதில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. சமூக நலனில் அக்கறைக் கொண்டவர்கள் இந்த அவலநிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 'குரோர்பதி ஃபக்கீர்’ என்றழைக்கப்படும் காசிராம் வர்மா அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.
பெண் குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் என்பதே இவரது விருப்பம். இந்த சேவையில் கடந்த பல ஆண்டுகளாகவே தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.
டாக்டர்.காசிராம் வர்மாவிற்கு 95 வயதாகிறது. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு பகுதியில் வசிக்கிறார். இவர் ஒரு கணிதவியலாளர்.
இவர் பெண் குழந்தைகளின் கல்விக்காகவே இதுவரை 10 கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை வழங்கியுள்ளார். 28 ஹாஸ்டல்கள், 21 பள்ளி, கல்லூரிகள் அமைக்கப்படவும் செயல்படவும் டாக்டர் காசிராம் உதவியிருக்கிறார். இதுதவிர ராஜஸ்தானில் உள்ள ஏராளமான தொண்டு நிறுவனங்களுக்கு உதவியிருப்பதாக காசிராம் தெரிவித்துள்ளார்.
கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்தும் காசிராம் தொடர்ந்து பெண்களின் படிப்பிற்காக உதவி செய்து வருகிறார்.
கல்வி உதவி
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் காசிராம் வர்மா மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா வருவது வழக்கம். பெண் கல்விக்காக தன்னுடைய பென்ஷன் தொகையில் இருந்து கொடுத்து உதவுகிறார். இவர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நேரடியாக பணத்தை அனுப்பி வைக்கிறார். உதவி தேவைப்படும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு உதவி செய்யப்படுகிறது.
டாக்டர் காசிராம் வர்மா சிறு வயதில் தன்னுடைய படிப்பிற்கே பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். ஸ்காலர்ஷிப் மூலம் படித்துள்ளார். கணிதப் பாடத்தில் ஆர்வம் இருந்த காரணத்தால் அதில் பட்டப்படிப்பை முடித்தார். ஆசிரியராக பணியாற்றியவாறே பிஎச்டி முடித்திருக்கிறார்.
1958-ம் ஆண்டு நியூயார்க் ரோட் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 400 டாலர் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முதல் இந்தியர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.
ஓய்வூதியம்
இருபதாண்டுகளுக்கு முன்பே டாக்டர் வர்மா பணி ஓய்வு பெற்றுவிட்டார். ஆண்டுதோறும் இவருக்கு 68 லட்ச ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கிறது. இதிலிருந்து 50 லட்ச ரூபாயை பெண் கல்விக்காக நன்கொடையாக வழங்குகிறார்.
1981ம் ஆண்டு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் போதிய கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். முதலில் ஹாஸ்டல் ஒன்றைக் கட்டினார். பின்னர், இது முதுகலைப் பட்டப்படிப்பிற்கான கல்லூரியாக மாற்றப்பட்டது. இங்கு குறைந்த கல்விக் கட்டணத்துடன் 1800 மாணவிகள் படிக்கின்றனர். இதுதவிர உதவித்தொகை பெற்றும் பல மாணவிகள் பலனடைந்து வருகின்றனர்.
கட்டுரை: ஹிந்தி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா