Rs.99, Rs.199, Rs.499… பொருட்களின் விலை ஏன் இப்படி வைக்கப்படுகிறது தெரியுமா?
99, 499, 999, 1999 என பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டிங் உத்தி அடங்கியுள்ளது.
ஷாப்பிங் என்பது இன்று நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. நமக்குத் தேவையான பொருட்களை நம் தனித்தேவைக்கு ஏற்றவாறு எத்தனையோ பிராண்டுகள் வழங்கி வருகின்றன. நாமும் இவற்றை ஆன்லைனிலோ நேரடியாக சென்றோ வாங்குகிறோம். அப்படி பொருட்களை வாங்கும்போது நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா?
பெரும்பாலான பொருட்களின் விலை ரூ.99, ரூ.499, ரூ.999, ரூ.4999 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
இவற்றிற்கு பின்னால் இருக்கும் காரணங்களை நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?
99 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பொருளை 1 ரூபாய் அதிகமாக 100 என்று நிர்ணயித்திருக்கலாம் இல்லையா? இந்த 1 ரூபாயை குறைப்பதால் நிறுவனத்திற்கு பெரிதாக என்ன கிடைத்துவிடப்போகிறது? 1 ரூபாய் குறைவாக இருப்பதால் மக்கள் பெரிதாக ஈர்க்கப்படுவார்களா என்ன?
100 ரூபாய் பொருளைக் காட்டிலும் 99 ரூபாய் பொருள் விலை குறைவானது என்று மக்கள் யோசிப்பார்களா என்ன? நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் சரி, அதிர்ச்சியடைந்தாலும் சரி, 'ஆம்’ என்பதுதான் இதற்கான பதில்.
இந்த 1 ரூபாய் விலை நிர்ணயத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டிங் உத்தி இருப்பதுதான் உண்மை.
உளவியல் சார்ந்த உத்தி
ரூபாய் 99, 199, 999 என விலை நிர்ணயிக்கப்படுவதன் பின்னணியில் உளவியல் சார்ந்த உத்தி அடங்கியுள்ளது. 500 என்கிற விலையைக் காட்டிலும் 499 என்கிற விலை குறைவாக இருப்பதாகவே மக்களுக்கு தோன்றும், என்பதுதான் உண்மை.
ஒரே ஒரு ரூபாய் மட்டும்தான் குறைவு என்று பெரும்பாலானோர் நினைப்பதில்லை. ரூ.430 என்கிற விலையில் இருந்தாலோ ரூ.470 என்கிற விலையில் இருந்தாலோ மக்கள் எப்படிப் பார்க்கிறார்களோ அப்படித்தான் ரூ.499 என்கிற விலையையும் பார்க்கிறார்கள். இதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் சார்ந்த அணுகுமுறை.
நிரூபிக்கப்பட்ட ஆய்வு
சிகாகோ பல்கலைக்கழகம், எம்ஐடி இரண்டும் இணைந்து பிரைசிங் ஸ்ட்ராடெஜி பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் பெண்களின் ஆடைகள் $34, $39, $44 என மூன்று வெவ்வேறு விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த மூன்று ஆடை வகைகளில் $39 என்கிற விலை கொண்ட ஆடைகளே அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி ஆய்வாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
1 ரூபாய் சேமிப்பு
இந்த 1 ரூபாய் சந்தையில் மிகப்பெரிய அளவில் பங்களிக்கிறது. இந்த 1 ரூபாயின் மூலம் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றன என்பதும் உண்மைதான். பலர் இப்படி 99, 199, 999 என விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கும்போது மீதித் தொகையான 1 ரூபாயைக் கேட்டுப் பெறுவதில்லை.
சிறு கடைகளில் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளாத 1 ரூபாய் தொகையானது கடை உரிமையாளரின் கைகளுக்கு சென்று சேரலாம். பெரிய கடைகளில், பணம் செலுத்தும் கவுண்டரில் இருக்கும் நபருக்கு இந்தத் தொகை சென்று சேர வாய்ப்புண்டு.
தமிழில்: ஸ்ரீவித்யா