‘பணத்தின் ஈர்ப்பை விட பசியின் வலி நன்றாக தெரியும்’ - ஏழை மக்களுக்கு சொந்த பணத்தில் உணவு அளிக்கும் டெலிவரி நண்பர்கள் குழு!
ஸ்விக்கி, ஜெப்டோ, ஜொமேட்டோ நிறுவங்களில் டெலிவரி சேவையாளர்களாக பணியாற்றும் 15 நண்பர்கள் இணைந்து பணம் திரட்டு, சமூக நோக்கில், மன நல நோக்கில் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு மேல் உளவு அளித்துள்ளனர்.
முகமது தஸ்தகீர் பசி மற்றும் உணவின் தேவையை நன்கு உணர்ந்தவர். அவரது தந்தை கேட்டரிங் தொழில் செய்து வந்ததால் வீட்டுல் எப்போதும் சமையல் நடந்தாலும், சாப்பிட எதுவும் இருந்ததில்லை. ஏனெனில், தந்தை அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடிப்பதில் செலவிட்டார்.
இதனால் ஒரு கட்டத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்ப நிலை மிகவும் கஷ்டமாகி, பெரிய பிள்ளையான தஸ்தகீர் படிப்பை நிறுத்திவிட்டு வேலை பார்க்கத்துவங்கினார். அவரது சகோதரரும் வேலையில் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து இளைய சகோதரியை படிக்க வைத்தனர்.
“பணத்தின் ஈர்ப்பை விட பசியின் வலி எனக்கு நன்றாக தெரியும்...” என்கிறார் தஸ்தகீர்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் அவரும், 14 நண்பர்களும், (அனைவரும் ஜெப்டோ, ஸ்விக்கி, ஜொமேட்டோ டெலிவரி சேவையாளர்கள்) தங்கள் சொந்த வருமானம் கொண்டு, சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். இவர்களில் பலர் மன நலம் பாதிக்கப்பட்வர்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் என் மகள் பிறந்த நாள் கொண்டாட்ட திட்டமிடலின் போது இது ஆரம்பமானது, என்கிறார் தஸ்தகீரின் நண்பரும் ஜெப்டோ டெலிவரி சேவையாளருமான சிலம்பரசன.
"நான் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்ய விரும்பிய போது, விருந்து சாப்பாடு சாப்பிட முடியாத ஏழைகளுடன் கொண்டாடலாம் என தஸ்தகீர் கூறினார். என் தந்தை வேலைக்குச் செல்வதை விட்ட பிறகு பல ஆண்டுகள் நானும் என் குடும்பத்தினரும் இரவில் பட்டினி கிடந்துள்ளதால் இந்த எண்ணம் எனக்கு பிடித்திருந்தது,”என்றார் சிலம்பரசன்.
இவர் கட்டிட வேலை மற்றும் இறுதி ஊர்வல வேலை பார்த்தபடி, டிப்ளமோ படித்து முடித்தார்.
“கடந்த சில ஆண்டுகளில் தான் சீரான வருமானம் இருக்கிறது. எனவே, ஏழை எளியவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டம் என் வாழ்வின் நோக்கமாக மாறியது என்கிறார் அவர் மேலும்.
சிலம்பரசன் தவிர, தஸ்தகீரின் மற்ற நண்பர்கள், அரவிந்த் நடேசன், செம்மைராஜ், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள காது கேளாதர் பள்ளியிலுள்ள 35 குழைந்தைகள், இளைஞர்களுக்கு உணவு அளிப்பதுடன் துவங்கினர்.
உணவுக்கான செலவு ரூ.4,000-த்தை சிலம்பரசன் ஏற்றுக்கொண்ட நிலையில், மற்றவர்கள் பணம் போட்டு குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கினர்.
“இதைத் தொடர்ந்து செய்வோம் என நினைக்கவில்லை. குழந்தைகள் விருந்து சாப்பிட்டு மகிழ்ந்ததை பார்த்த போது, இதை மாதந்தோறும் செய்ய தீர்மானித்தோம்,” என்கிறார் ஆனந்த்.
குழு உறுப்பினர்கள் வாரம் 250 சேமித்து மாதம் ரூ.1000 அளிப்பதாக தஸ்தகீர் கூறுகிறார். இந்த தொகை கொண்டு, (ரூ.15,000),தொண்டு அமைப்பு ஒன்றை தேர்வு செய்து, உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
“டெலிவரி ஊழியர்களுக்கு வாரம் சம்பளம் வழங்கப்படுகிறது. எங்களில் சிலர் வசதியுடன் இல்லை. சிலருக்கு வீடு கிடையாது அல்லது மற்றொரு வருமானம் கிடையாது. ஆனால், எங்களைப்பார்த்து மற்றவர்களும் இந்த திட்டத்தால் ஈர்க்கப்படுள்ளனர்,” என்கிறார் தஸ்தகீர்.
கடந்த சில மாதங்களில், இந்த குழுவில் 15 டெலிவரி சேவையாளர்கள் இணைந்துள்ளனர். வாய் மொழி தகவல், சமூக ஊடக பகிர்வு மூலம் இணைந்துள்ளனர். சாதனா பள்ளித்தவிர, குன்றத்தூரில் உள்ள சாஸ்தா ஓல்ட் ஏஜ் ஹோம், அன்பகம் மனநல காப்பகம், பாரடைஸ் மனநல காப்பகம் ஆகியவற்றில் உணவு அளித்துள்ளனர்.
அண்மையில் கோவலத்தில் உள்ள பான்யன் மனநல மையம் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் உணவு வழங்கினர்.
“இது மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த நண்பர்கள் தினசரி சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையில் வாழ்கின்றனர். ஆனால் பலர் இவர்களுடன் இணைந்துள்ளனர்,” என்கிறார் பான்யனின் பொறுப்பு வகிக்குய்ம் கீர்த்தனா.
எங்கள் இல்லவாசிகளுடன் இணைந்து பேசி உணவு சாப்பிட்டனர். எங்கள் சேவைகள் பற்றி கூறினோம். மேலும் உதவுவதாக கூறினர், என்கிறார் அவர்.
இந்த நண்பர்கள் குழு, இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 பேருக்கு உணவு அளிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமக்கு மிஞ்சியே தானம் என்று சொல்வார்கள், ஆனால், இந்த நண்பர்கள் குழு தங்களிடம் இருப்பதில் பகிர்ந்தளித்து பலரின் பசியை போக்குவது மிகவும் போற்றுதலுக்குரியது.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
ஏழைகளுக்கு ‘இலவச ஷாப்பிங்’ - ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு உடையளிக்கும் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’
Edited by Induja Raghunathan