86 வயதில் 14 லட்சம் கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ள சாதனையாளர்!
பெரும்பாலானோர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் அறுபது வயதிற்குப் பிறகு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நிலையில் ஒரு சிலரே தங்களது பொழுதுபோக்கில் மும்முரமாக ஈடுபடுவார்கள். முன்னாள் ரயில்வே ஊழியரான 86 வயது பைலஹல்லி ரகுநாத் ஜனார்தன், தனது 64-வது வயதில் சைக்கிள் ஓட்டத் துவங்கியுள்ளார்.
சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மேற்கொள்தல் போன்றவற்றில் ஈடுபாடுள்ள இவருக்கு சைக்கிளில் நகரை வலம் வருவதே மிகவும் பிடித்த விஷயமாகும்.
இவர் சைக்கிளில் பயணம் செய்து தொலைந்து போன தனது குழந்தைப்பருவத்தை மீட்டெடுப்பதுடன் நான்கு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிளில் பயணமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
தி க்விண்ட் உடனான நேர்காணலில் ஜனார்தன் கூறுகையில்,
நான் 64 வயதில் சைக்கிள் ஓட்டத் துவங்கினேன். தற்போது 265 மாதங்கள் கடந்துவிட்டது. பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரமான, கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ தூரம் வரை சைக்கிளில் பயணித்துள்ளேன். நம்பிக்கையும் உடல் வலிமையும் பெற்ற பிறகு 68 வயதில் மலையேற்றம் மேற்கொண்டேன். கைலாய மலை உட்பட இமயமலைக்கு சுமார் 20 முறை சென்றுள்ளேன்.
பெங்களூருவில் வசிக்கும் ஜனார்தன் உடலைக் காட்டிலும் மனம்தான் வலிமையாக இருக்கவேண்டும் என்கிறார். உடல் ஆரோக்கியத்திற்கு ஒருவர் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். ஆனால் பெரும்பாலான தடகள வீரர்கள் போலல்லாது ஜனார்தன் எளிமையான சைவ உணவையே விரும்புகிறார் என்றும் வீட்டிற்கு வெளியே கிடைக்கும் உணவை சாப்பிட விரும்புவதில்லை என்றும் சில்வர்டாக்கீஸ் குறிப்பிடுகிறது.
அவரது உணவுமுறை குறித்து கேட்கையில்,
”தினமும் பேரீச்சம் பழத்துடன் நாளை துவங்குவேன். காபி, டீ எடுத்துக்கொள்வதில்லை. எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்துவிடுகிறேன். என் உடலுக்குத் தேவையான முக்கிய சக்திகள் தண்ணீர் குடிப்பதன் மூலமே கிடைக்கிறது. சமைக்கப்படாத, முளைகட்டிய காய்கறிகளையே விரும்புகிறேன். மாலை வேளையில் பச்சை வாழைப்பழமும் பாலும் எடுத்துக்கொள்வேன்,” என்றார்.
ஜனார்தனுக்கு சைக்கிள் ஓட்டுவது மட்டுமல்லாது மாடிப்படிகளில் வேகமாக ஏறும் போட்டிகளிலும் ஆர்வம் அதிகம். இந்தப் போட்டிகளில் பல மாடிக் கட்டிடங்களில் விரைவாக ஏறவேண்டும்.
32 தளங்கள் கொண்ட கட்டிடத்தை நான்கு முறை ஏறியுள்ளார். 52 தளங்கள் கொண்ட மாடியை ஒரு முறை ஏறியுள்ளார். துபாயில் 64 தளம் கொண்ட கட்டிடத்தில் ஏறியுள்ளார்.
ஜனார்த்தன் தன் வயது ஒரு தடையாக இருக்க அனுமதித்ததில்லை. அனைத்து மாரத்தான்களிலும் பங்கேற்றுள்ளார். மலையேற்றம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துபால், சிட்னி என பயணித்துள்ளார். மும்பையில் மூன்று மாரத்தான்களிலும் பெங்களூருவில் இரண்டு மாரத்தான்களிலும் துபாயில் ஒரு மாரத்தானிலும் பங்கேற்றுள்ளார்.
நாம் பயணம் செய்ய இரு சக்கர வாகனத்தையோ நான்கு சக்கர வாகனைத்தையோ சார்ந்தே இருக்கும் நிலையில், ஜனார்தன் நகர் முழுவதும் சைக்கிளிலேயே வலம் வருகிறார். அவர் கூறுகையில்,
”நான் நகருக்குள்ளேயும் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கும் சைக்கிளிலேயே செல்கிறேன். எனவே இயற்கையை பாதுகாக்கிறேன் என்கிற மனநிறைவு எனக்கு உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 55 கி.மீ வரை என்னால் பயணிக்க முடிகிறது,” என்றார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு ஜனார்தனின் சாதனையை அங்கீகரித்து கர்நாடக அரசாங்கம் அவருக்கு உயரிய விருதான கெம்பகௌடா விருது வழங்கி கௌரவித்துள்ளது. அத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவின் ஜெயநகர் தபால் நிலையத்தால் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.
கட்டுரை : THINK CHANGE INDIA