காரில் 40ஆயிரம் கிமீ சுற்றி 33 நாடுகளை விசிட் அடித்த 60 வயது அமர்ஜித் சிங்!
உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது? தன் இளம்வயது பயணக்கனவை 60 வயதில் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் இவர்.
உலகத்தைச் சுற்றி பார்க்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது? அனைவருக்கும் இந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும், அந்த நாட்டின் உணவை உண்ண வேண்டும் என்ற கனவுகள் இருக்கும். ஆனால் குடும்ப கடமை, நிதி, வேலை என பல காரணங்களால் நம்மால் அதை நிறைவேற்ற முடிவதில்லை.
இங்கு டெல்லியைச் சேர்ந்த 60 வயதான அமர்ஜித் சிங்கிற்கும் இளமையில் இருந்தே உலகம் சுற்றும் கனவு இருந்தது, அதை 40 வருடங்கள் கழித்து இன்று நிறைவேற்றி உள்ளார் இவர்.
2018 ஜூலை மாதம் தன் உலகம் சுற்றும் கனவை நினைவாக்க வேண்டும் என்று தனது 4 சக்கர வாகன SUV காரை எடுத்துக்கொண்டு சாலை வழி பயணத்திற்கு தயாரானார் அமர்ஜித். டெல்லியில் துவங்கி 6 மாதத்திற்குள் 40,000 கிமீ பயணித்து 33நாடுகளை சுற்றி பார்த்து திரும்பியுள்ளார் இந்த பயணி.
பயணத்தின் மீதான இவரது காதல் 1979 இல் துவங்கியது. அந்த ஆண்டு ஹாலாந்தில் இருந்து வந்த ஒரு பயணி தம்பதியர்கள் உடன் பழக்கம் ஏற்பட்ட போது பயணத்தின் மீது இவருக்கு ஆர்வம் துவங்கியது.
“அந்த தம்பதியர்கள் சொன்ன பயணக்கதைகள் நானும் அவர்களை போல் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது. என் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய திட்டமிருந்தேன். ஆனால் அப்பொழுது என் பாதுகாப்பிற்காக என் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்,” என தெரிவிக்கிறார் அமர்ஜித் சிங்.
அதன் பின் தனது துணி வியாபாரத்தில் கவனத்தை செலுத்தி பல ஆண்டுகளை கடந்தார் அமர்ஜித், ஆனால் பயணம் செய்யும் ஆசை மட்டும் அவர் மனதில் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அதனால் 40 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு தன் மகனிடம் வணிகப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தனது பயணத்தை திட்டமிட துவங்கினார் இவர்.
நான்கு மாதங்கள் தன் பயணத் திட்டத்தை போட்டு, 120 நாளில் 23000 கிமீ , 23 நாடுகளை கவர வேண்டும் என முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.
“ஹாலாந்தில் வந்தவர்களிடம் பழக்கம் ஏற்பட்டாலும் அவர்களின் முகவரி தெரியாது, அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுப்பது தான் இந்த பயணத்தின் ஆரம்பமாக இருந்தது,” என்கிறார்.
ஜூலை 7 டெல்லியில் இருந்து தன் பயணத்தை துவங்கி, முதலில் நேப்பாள் சென்றார், அங்கிருந்து சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ரஷ்யா சென்றார். தனது வயது காரணமாக தினமும் காரை ஓட்ட முடியாது என்பதற்காக தான் திட்டமிட்ட நாட்களில் இருந்து இன்னும் சற்று நாட்களை நீட்டிக்க முடிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து முக்கிய ஐரோப்பிய நாடுகளான போலந்து, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரியா, எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியா, ஸ்வீடன், நார்வே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவேனியா, இத்தாலி, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், போர்ச்சுகல், லக்சம்பர்க், மொராக்கோ, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் சென்றார். இறுதியாக டிசம்பர் மாதம் லண்டன் வந்தார்.
தனது பயண அனுபவத்தை பற்றி பகிர்ந்த அமர்ஜித்,
“மொழி, கலாச்சாரம் அப்பாற்பட்டு அனைத்து மக்களும் தன்மையான இறக்கக் குணம் கொண்டவர்கள் தான். எனது காரில் பல கையொப்பங்கள், எழுத்துக்கள் இருப்பதைக் கண்டும் எனது தலப்பாவை பார்த்தும் தானாகவே பலர் என்னுடன் வந்து பேசினர். அனைவரும் நம்மை போன்றுதான், உலகமே ஒரு பெரிய குடும்பம்,” என்கிறார்.
தான் நினைத்தது போல் தனது இளமைக்கால ஹாலாந்து நண்பர்களை சந்தித்து இன்பதர்ச்சி கொடுத்துள்ளார்.
“எனது வயதால் எனக்கு இந்த பயணத்தில் சிரமமாக இருந்தது என்னுடைய உடல்நிலை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம். அதை தாண்டி நான் சந்தித்த சவால் உணவு, நான் சைவம் என்பதால் சீனா போன்ற நாடுகளில் சுத்த சைவ உணவை கண்டுப்பிடிப்பது சவாலாக தான் இருந்தது,” என்கிறார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கு சிக்கல் ஏற்படும் போதும் உதவி செய்ய மக்கள் தயங்கவில்லை என தெரிவிக்கிறார் அமர்ஜித். மாஸ்கோவில் தனது விசா முடியும் நிலையில் அங்கிருந்த இந்தியர் ஒருவர் உதவியுள்ளார்.
நடுவில் ஈஸ்டன்சியாவில் இருக்கும் பொழுது உடல் நலம் சரி இல்லாததால் அங்கிருந்த இந்திய குடும்பதினரிடம் காரை ஒப்படைத்துவிட்டு இந்தியா வந்து சிகிச்சைப்பெற்று மீண்டும் 2 வாரத்தில் ஈஸ்டன்சியா சென்று தன் பயணத்தை துவங்கினார். இத்துடன் தன் பயணத்தை நிறுத்தும் எண்ணம் அமர்ஜித்திற்கு இல்லையாம்.
குறைந்தது 100 நாடுகளைச் சுற்றி வரவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் இந்த ’இளம்’ பயணி.
தமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்