உணவு விடுதியல்ல… இது இன்னொரு வீடு...
கருணைவேல், சொர்ணலட்சுமி… இவர்களைத் தெரியுமா?
கோவையிலிருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவில் ஈரோடு மாவட்டம் சீனிபுரத்தில் உள்ள யு.பி.எம் உணவகத்திற்கு சென்றவர்களால் மறக்க முடியாத பெயர்கள் கருணைவேல், சொர்ணலட்சுமி.
அந்த உணவகத்தில் ஆடம்பரமான ஜோடனைகள் இல்லை…
குளிர்சாதன வசதி இல்லை…
இருந்தும் கூட்டம் குறைவதில்லை…
விலைமிகுந்த கார்கள் அந்த உணவகத்தின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன...
வார இறுதி நாட்களில் பல கிலோமீட்டர்கள் பயணித்து அங்கே வருபவர்கள் பலர்…
ஒரு நேரத்தில் 50 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் வகையில் உள்ளது கூரை வேய்ந்த அந்த உணவகம்.
20 பேர் வரை உண்ட களைப்பு நீங்க ஓய்வெடுக்கும் வகையில் மற்றொரு பகுதி இருக்கிறது.
பகல் 12.30 மணியிலிருந்து, பகல் 3 மணி வரைதான் அந்த உணவகம் இயங்குகிறது.
500 ரூபாயும் சில நேரங்களில் 700 ரூபாயும் என ஒரு சாப்பாட்டிற்காகப் பெறப்படுகிறது.
பகல் 11 மணிக்கே தொலைபேசி மூலம் முன்பதிவு செய்துவிட வேண்டும்.
பணியாளர்கள், முதலாளி என்று அனைத்துமே கருணைவேலும், சொர்ணலட்சுமியும்தான்
அன்பு கலந்த உணவு
60 வயதுகளைத் தொட்டுவிட்ட கருணைவேல், 53 வயதைக் கடக்கும் சொர்ணலட்சுமி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் இருந்தனர், ஆனால் அவர்களது மகன் இறந்து விட்டார். அந்த துக்கத்தை மறக்க உணவருந்த வருவோர் எல்லாம் தங்கள் பிள்ளைகள்தான் என்ற உணர்வோடு உணவு பரிமாறத் துவங்கினர்.
தலை வாழை இலையிட்டு, உப்பில் தொடங்கி, ரத்தப்பொரியல், குடல், தலைக்கறி, ஈரல், கொத்துக்கறி, சுக்கா, நல்லி எலும்பு, கால் பாயா, சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி, வான்கோழி, புறாக்கறி, காடை, மீன், லெக்பீஸ், பிரியாணி, முட்டை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, உப்புமீன் இப்படிப் பரிமாறிவிட்டு, தொட்டுக்கொள்ள சோறு வைக்கிறார்கள்.
எந்த அவசரமும் இன்றி நிதானமாய் சாப்பிடலாம். உண்டு களைப்பாறி பின்னரும் உண்ணலாம். இறுதியாய் வாடிக்கையாளர் கொடுக்கிற பணத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்பதிலும் உறுதியாய் இருக்கிறார் கருணைவேல்.
அன்பு கலந்து வகை வகையாய் பரிமாறியவரை ஏமாற்ற யாருக்குத்தான் மனம் வரும். அந்த நம்பிக்கை கருணைவேலுக்கும் சொர்ணலட்சுமிக்கும் இருக்கிறது.
பிரபலங்களின் பிரியமான உணவகம்
பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதிகளில் திரைப்பட படப்பிடிப்புகள் நடந்தால், இயக்குநர்கள், நடிகர்கள் தொடங்கி அனைவரும் விரும்புவது அந்த யு.பி.எம் (UBM) உணவகம் தான்.
படப்பிடிப்புக்கு வரும்போதே பெரிய கேரியரில் வகைவகையான உணவுகளைக் கொண்டு வந்து சக நடிகர்களையும் சாப்பிட வைப்பதில் கில்லாடியான நடிகர் பிரபுவுக்கு பிரியமான உணவகமும் இந்த யு.பி.எம் உணவகம் தான்.
அசைவ உணவு வகைகளை அவ்வளவு சுவையாகச் சமைக்கும் சொர்ணலட்சுமி, சைவம் மட்டுமே சாப்பிடுவார் என்பதுதான் சுவாரஸ்யம்.
25 ஆண்டுகளாய் அலுப்பில்லாத அன்புப் பயணம்
1992 ஆம் ஆண்டுகளில் நார் ஆலை தொழிலாளர்களுக்கு சிறிய உணவகத்தை தொடங்கி, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் யு.பி.எம் உணவகமாய் பரிணமித்து தற்போது வரை எந்த சங்கடமோ, சஞ்சலமோ இன்றி தங்கள் பணியைத் தொடர்வதாகக் கூறுகின்றனர் கருணைவேல், சொர்ணலட்சுமி தம்பதியினர்.
என்னதான் இருந்தாலும் வீட்டுல சாப்பிட்ட மாதிரி இல்லை என்பது பெரும்பாலான உணவு விடுதிகளில் சாப்பிடுபவர்கள் கடைசியாக உதிர்க்கிற வார்த்தை. அந்த வார்த்தை இங்கே வருபவர்களுக்கு மறந்தும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்கிறார் கருணை வேல். வீட்டில் விருந்து சாப்பிட்ட மனநிலையோடுதான் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டும், என்பதால்தான், நாங்களே பார்த்துப் பார்த்து சமைக்கிறோம், நாங்களே கேட்டுக் கேட்டு பரிமாறுகிறோம் என்கிறார்கள் அந்த தம்பதியினர்.
அனைவரையுமே தன் குழந்தைகளாக அன்போடு உபசரிக்கும் இந்த தம்பதியருக்கு கர்பிணி பெண்கள் மீது அலாதி பிரியம், அதாவது, தாய் வீட்டின் உபசரிப்போடு ஒரு குட்டி வளைகாப்பு செய்து ஆசிர்வதித்த பினரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.
பணம் என்பதை விட, அன்பு கலந்த சேவைதான் நோக்கம் என்று நெக்குருகும் கருணைவேல், சொர்ணலட்சுமி தம்பதியினர் நடத்துவது வழக்கமான உணவு விடுதி அல்ல… அன்பும், அக்கறையும் நிறைந்திருக்கும் இன்னொரு வீடு...
UBM நம்ம வீட்டு சாப்பாடு: தொடர்பு எண்: 9362947900,04294245161