சிறு வியாபாரிகளுக்கு பணமற்ற பரிவர்தனை முறையை துவக்கிய சஞ்சீவ் சதக்!
ஆஃப்லைன் எனும் இணையதளம் சாரா வணிகர்களுக்கு வணிக நடவடிக்கைகளை சுலபமாக்கவே, சஞ்சீவ் சதக் (Sanjeev Chadhak), "எஃப்டி கேஷ்" (ftcash) யை உருவாக்கினார். ஒரு நாள், சஞ்சீவ் தொலைபேசி வாயிலாக தள்ளுவண்டி காய்கறி வியாபாரியிடம் தனக்கு தேவையான காய்கறிகளை தன் வீட்டிற்கு கொண்டு வந்து தரும்படி கேட்டுக்கொண்டார். காய்கறி வியாபாரியோ, காய்கறி பட்டியலை குறித்துக்கொள்ள முடியாததால்,"வாட்ஸ் அப்" (Whatsapp) வாயிலாக பட்டியலை அனுப்பி வைக்கும் படி சஞ்சீவிடம் பணிந்தார். பிறகு காய்கறிகள், சஞ்சீவ் அலுவலகத்தில் இருக்க, அவரது வீட்டிற்கே கொண்டு வந்து தரப்பட்டது, பரிமாற்றம் வெகு சுலபமாகவே நடந்தேறியது.
சரி, இப்போது காய்கறி வியாபாரிக்கு பணம் கொடுப்பது எப்படி? சஞ்சீவ் கூறுகையில், "நான் வீட்டில் இருக்கும் போது , பணத்தை பெறுவதற்காக காய்கறிகாரர் தனது நபரை என் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அப்போது தான், நான் யோசிக்கத் தொடங்கினேன். சிறு வியாபாரிகளுக்கும் மின்னணு மூலமாக பணம் கொடுக்க வழி இருக்க வேண்டும் என்று எண்ணினேன்". இதன் பிறகே, "எஃப்டி கேஷ்" (ftcash ) நிறுவப்பட்டது. இது சிறு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களிடம் சுலபமாக வியாபாரத்தில் ஈடுபட ஏதுவாக அமைகிறது. இந்த மொபைல் பிளாட்பாரம் (Mobile Platform) எனும் கைபேசி தளத்தில், ஆப்லைன் சில்லறை வியாபாரிகள், மொபைல் வழியாக பணம் பெற்றுக்கொள்ளவும், விளம்பரம் செய்யவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சஞ்சீவ் கூறுகையில், "மின்-வர்த்தகம் எனும் இ-காமர்ஸ் வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது, ஆனால் மொத்த சில்லறை வணிகத்தில் இது ஒரு சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது . மீதமுள்ள 99 சதவீத சில்லறை வணிகத்தில், 'எஃப்டி கேஷ்' (ftcash) மூலம் செயல்படுத்தலாம் என்று நினைக்கிறோம்" என்கிறார் சஞ்சீவ். நாம் பெரும்பாலும் பால்காரர், காய்கறி வியாபாரி என சிறு ஆஃப்லைன் வியாபாரிகளிடமே பல பொருட்களை வாங்குகிறோம். இவர்கள், பெரும்பாலோர் இன்னமும் ஆஃப் லைனிலேயே வியாபாரம் செய்கின்றனர்.
விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுவது
மேலும் கூறுகையில்,"எஃப்டி கேஷ் மூலம் பரிவர்த்தனை செய்வது மகிழ்ச்சியான அனுபவமாக அமைவதுடன், அக்கம் பக்கத்து வணிகர்களிடம் ரொக்கமாக, பணம் கொடுக்கல் முறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களும், தொலைவில் இருந்தபடியே தங்களின் கைபேசி மூலம் பணம் செலுத்தி, அதற்கான ரசீதும் பெற முடிகிறது. இந்த தளத்தின் மூலம், வணிகர்களும் சிறப்பான உள்ளூர் விளம்பரங்கள் செய்யலாம். மேலும் தங்களின் விசுவாசமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஊக்க வெகுமதிகளையும் அளிக்கலாம்" என்கிறார் சஞ்சீவ்.
இந்த நிறுவனமானது, டிஜிட்டல் தளத்தில் மிக எளிமையான, சிக்கனமான முறையில் நுழைய வழிவகை செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள விற்பனையாளர்களை தெரிந்து கொள்வதுடன், விற்பனையாளர்களும் சிறந்ததொரு உள்ளூர் விளம்பரமும் இதன் மூலம் செய்யலாம். மேலும் அருகிலோ, வெகுதொலைவில் இருந்தபடி மின்னணு வாயிலாக பணமும் பெறலாம். இது, இவர்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
'எஃப்டி கேஷ்' தொடங்குவதற்கு முன்பாக சஞ்சீவ், டாய்ச்சி வங்கி (Deutshe Bank) யில், இணை தலைமை நிதி அதிகாரி யாக பணியாற்றினார். இணை நிறுவனரான தீபக் கோதாரி, சஞ்சீவுடன் ஒன்று சேர்வதற்கு முன், கிரான்ட் தோர்ன்டன் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து,சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடல்கள், கலந்தாய்வுகள் மற்றும் கள ஆய்வுககளை நடத்தினார்கள்.
செயல்முறைகளை நிலைபெற செய்தல்
சஞ்சீவ் கூறுகையில், "ஆரம்பத்தில் இதை துவக்கிய போது எங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நாங்கள் வாடிக்கையாளர்களை மதிப்பீடு செய்யவும் மற்றும் வியாபாரிகளின் கருத்தறியவும், எந்த ஒரு முன்மாதிரி உதாரணம் இல்லாமல், நாங்களே இந்த முறை குறித்து அவர்களுக்கு விவரித்தோம். சிறு வியாபாரிகளிடம் (Micro merchants) இது குறித்து விவரிக்க எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது ஒரு வடிவம் பெற்ற பிறகு, நாங்கள் அனைவருக்கும் செயல் முறை விளக்கம் அளித்தோம். அது இருசாராரையும் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைந்தது”.
எங்கள் குழு, வியாபாரிகளிடம் எங்கள் எண்ண கருத்துக்களை பகிர்ந்து கொண்டபோது தான், ஒரு விஷயத்தை புரிந்து கொண்டது . சிறு வியாபாரிகள் கூட தங்கள் வணிகத்தில் தொழில்நுட்பத்தை உபயோகிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததென்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். ஆனால், அதை செயல்படுத்துவதற்கான வழிகள் மற்றும் ஆக்கப்பொருள் அவர்களிடம் இல்லை.
மேலும் சஞ்சீவ் கூறுகையில், இது வியாபாரிகளின் பார்வைக்கு புதிதாக இருப்பதால், அதை ஏற்றுக்கொள்ள வெகு காலமாகும் என்றார். ஆண்டாண்டு காலமாக வியாபாரிகள் ஒரே மாதிரி தான் வியாபாரம் செய்கிறார்கள், மெதுவாகத்தான் மாறுவார்கள். ஆனால், ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த செயல்வடிவிற்கு மாற ஆரம்பித்துவிட்டால், அவர்களை பின் தொடர்ந்து பலரும் மாறுவார்கள் என்று இந்த குழு நம்புகிறது.
வளர்ச்சி மற்றும் நீடிப்புதன்மை
ஜூன் மாதம் தொடங்கப்பட்டு, மும்பை நகர போவை (Powai) யில் இயக்கப்படுகின்ற இந்த தளமானது, மும்பை நகரின் இதர பகுதிகளுக்கும் விரிவடைய திட்டமிட்டுள்ளது. இந்த தளத்தில் இதுவரை சுமார் 150 வியாபாரிகளை கொண்டு, ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்தனைகளை செய்துள்ளது.
‘எஃப்டி கேஷ்’ ன் வருமானம் என்பது, வியாபாரிகள் செய்யும் ஒவ்வொரு வியாபார பரிவர்த்தனையிலிருந்து கட்டணமாக பெறப்படுகிறது. மேலும் வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கும்போதும் "எஃப்டி கேஷ்"க்கு கட்டணம் செலுத்தவேண்டும். மேலும் இந்த கட்டமைப்பின் மூலம் பல வகையில் வருமானம் ஈட்டமுடியும் என்றும் கருதப்படுகிறது.
"கடந்த 12 - 18 மாதங்களில், தொழில்நுட்பத்தை வியாபாரிகள் பெருமளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு, ஸ்மார்ட் ஃபோன் என்பது ஒரு ஆடம்பர பொருளாக கருதப்பட்டது. ஆனால் இன்றோ சிறு வியாபாரிகள், தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு "வாட்ஸ் அப்" போன்றவற்றை பயன்படுத்துமளவிற்கு தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக சௌகர்யங்களையே விரும்பும் வாடிக்கையாளர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டு வாசலில் வியாபாரிக்கு தரவேண்டிய பாக்கி பணத்தை கொடுப்பதை விட, தங்கள் அலுவலகங்கலில் இருந்த படியே பணத்தை உடனடியாக கொடுக்க விரும்புகிறார்கள்”, என்கிறார் சஞ்சீவ்
பணமற்ற பரிவர்த்தனைகான (Cashless transaction) சந்தை
இந்தியாவில் சந்தைக்களம் வேகமாக வளர்ந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பத்தை கொண்டு சிறு வியாபாரிகள் பெருமளவில் வளர்ந்து வருகிறார்கள் என்றும், இந்த வியாபாரிகளுடன் இணைந்து 'எஃப்டி கேஷ்', அவர்கள் வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் என்றும் இந்த குழு நம்புகிறது.
"நாங்கள் வேகமாக வளர்ந்து வருகிறோம். மார்ச் 2016 ஆம் ஆண்டில் சுமார் இரண்டாயிரம் வியாபாரிகள் கொண்ட தளமாக இது அமையும். நாட்டிலுள்ள சிறு வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்போம். ஆன்லைன் வியாபாரிகளுக்கு போட்டியாக நம் அக்கம்-பக்க வியாபாரிகளை மேம்படுத்தவது, ஆன்லைன் வியாபாரிகளுக்கு இணையாகவோ அதற்கு மேலாகவோ,வாடிக்கையாளர்களுக்கு வசதியினை அளிக்க செய்வதே எங்கள் நோக்கமாகும்" என்கிறார் சஞ்சீவ்.
பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகள், ஃபிளின்ட் (Flint), லேவல்அப் (LevelUp) போன்ற பணம் செலுத்தும் தளங்கள் கொண்டு மொபைல் வழி பண பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகின்றன. ஆனால் இந்திய சந்தையில் மட்டும் பணமற்ற பரிவர்த்தனைகளை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. 11 சதவீதம் நகர்புற மக்கள் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்வதாக ஐடிஎஃப் (IDF) அறிக்கை கூறுகிறது. ஐஎஎம்ஐ (IAMAI) அறிக்கையின் படி சந்தையின் 0.43 சதவீதம் மட்டுமே பணமற்ற பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இணையதள முகவரி: ftcash