மூன்று மடங்கு வருவாய் உயர்வு கண்ட சென்னை ஸ்டார்ட்-அப் அக்னிகுல் காஸ்மோஸ்!
அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாடு, தரை சோதனை வசதி விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆய்வு மற்றும் மேம்பாட்டிலும் அதிகமாக முதலீடு செய்து வருகிறது.
விண்வெளி நுட்ப நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ், 2024 நிதியாண்டில் மூன்று மடங்கு வருவாய் உயர்வு ஏற்பட்டிருப்பதாகவும், ஆனால், அதிக செலவுகள் காரணமாக நஷ்டம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த `அக்னிகுல் காஸ்மோஸ்` நிறுவனம், 2024 நிதியாண்டில் ரூ.9.3 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முழுவதும் செயல்பாடு அல்லாத வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 225.6 சதவீத வளர்ச்சியாகும். செயல்பாட்டு வருமானம் எதுவும் ஈட்டப்படவில்லை என அதன் நிதி நிலை அறிக்கை தெரிவிக்கிறது.
அக்னிகுல் நிறுவனம் லேசுரக மற்றும் கனராக செயற்கைகோள்கள் செலுத்துவதற்கான மென்பொருள் மற்றும் புரப்லயூஷன் அமைப்பு போன்ற வன்கலன்களை வடிவமைத்து, உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிறுவனம் இன்னமும் வருவாய்க்கு முந்தைய நிலையில் உள்ளது. தனது தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாடு, தரை சோதனை வசதி விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆய்வு மற்றும் மேம்பாட்டிலும் அதிகமாக முதலீடு செய்து வருகிறது. இதன் காரணமாக நஷ்டம் அதிகரித்துள்ளது.
நிறுவன லாபம், 2024 நிதியாண்டில் ஆண்டு அடிப்படையில்,
112.3 சதவீதம் அதிகரித்து, ரூ.43 கோடியாக உள்ளது. செலவுகள் 126.4 சதவீதமாக அதிகரித்து. ரூ.52.3 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.32.1 கோடியாக இருந்தது.
ஊழியர்கள் நலனுக்கான செலவு அதிகரித்தது நஷ்டம் அதிகரிக்க முக்கியக் காரணம். நிறுவனத்தின் அதிகபட்ச செலவான ஊழியர் நலன் செலவு ஆண்டு அடிப்படையில் 80 சதவீதம் அதிகரித்து, ரூ.17.5 கோடியாக இருந்தது. மேலும், ஆய்வு மேம்பாட்டிற்கான செலவும் ரூ.12.9 கோடியாக அதிகரித்துள்ளது.
அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் 2017ல், ஸ்ரீநாத் ரவிசந்திரன் மற்றும் மொயின் எஸ்.பி.எம் ஆகியோரால் நிறுவப்பட்டது. 2023ல் பி- சுற்றில் 26.7 மில்லியன் டாலர் நிதி திரட்டியது உள்பட சமபங்கு நிதியாக 67 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.
விண்வெளி நுட்ப பரப்பு தற்போது நல்ல நிலையில் உள்ளது. இந்தியா குறைந்த விலையிலான விண்வெளி ஏவும் வசதியில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், 3டி பிரிண்டிங் நுட்பம் மூலமான ராக்கெட் வசதியில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. 2021ல் பரிசோதிக்கப்பட்ட அதன் 'அக்னிலெட் இஞ்சின்' உலகின் முதல் ஒற்றை பொருள் செமி கிரயோஜினிக் ராகெட் இஞ்சினாகும்.
நான்கு தோல்வி அடைந்த முயற்சிகளுக்கு பிறகு, மே மாதம் 30ம் தேதி, நிறுவனம் தனது அக்னிபான் SOrTeD ஏவுவாகனம் செலுத்தலில் வெற்றி பெற்றது. 2022ல் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிறகு, தனியார் துறையில் வெற்றிகரமாக நிகழ்ந்த இரண்டாவது ராக்கெட் செலுத்தலாக இது அமைகிறது.
விண்வெளி ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதில் இஸ்ரோ முக்கிய பங்காற்றுகிறது. அக்னிகுல், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், பிக்செல், துருவ் ஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் உள்ளன. கடந்த மாதம், விண்வெளி நுட்பத்துறைக்காக ரூ.1,000 கோடி நிதிக்கு IN-SPACe கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. .
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan