‘காலை 5 மணி - நள்ளிரவு 1 மணி வரை வேலை; மயக்கம் வரும்வரை அடி’ - மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளயின் சர்வைவல் கதை!
ஜெய்ப்பூர் வளையல் கம்பெனி தொழிலாளியின் கதை!
14 வயதில் குழந்தை தொழிலாளியாக கடத்தப்பட்டு தற்போது குழந்தை கடத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திலீப் குமார் தனது கதையை பகிர்ந்துகொள்கிறார்.
இந்த வார சர்வைவல் தொடரில் தனது 14ம் வயதில் ஜெய்ப்பூர் வளையல் கம்பெனியில் தான் விற்கபட்டது எப்படி என்ற கதையை அவர் கூறும் வார்த்தைகளிலேயே கேட்போம்.
”என் பெற்றோர்கள் தினக்கூலி வேலை ஆட்களாக பீகாரில் இருந்ததால் நான் அங்கு வளர்ந்தேன். நாங்கள் வறுமையில் வாடியதால் சிறுவயது பருவம் நன்றாக அமையவில்லை. எனது பெற்றோர் இருவரும் மது அருந்துபவர்கள். அதனால் தினமும் வேலை முடித்து வீடு திரும்பியதும் மது அருந்துவார்கள், பின்பு இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். இதில், எனக்கும் அடி கிடைப்பது உண்டு. இச்சம்பவத்தில் இருந்து தப்பிக்க நான் பலமுறை முயற்சி செய்திருக்கிறேன்.
இந்த சமயத்தில் தான் எனது உறவினர் ஜெய்ப்பூரில் வேலை வாங்கி தருவதாகக் கூறினார் . நான் 14 வயது சிறுவன் என்பதால் நான் வேலை செய்வது மட்டும் இல்லாமல் படிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார். நாங்கள் இருவரும் ரயிலில் ஜெய்ப்பூர் சென்று அடைந்தோம். முதல் இரு நாட்களில் அனைத்தும் நன்றாக இருந்தது. நான் அந்த தருணத்தில் தான் முதல் முறையாக நன்றாக சாப்பிட்டு தூங்கினேன். நான் என்னைபோல் இருக்கும் பல குழந்தைகளுடன் வளையல் கம்பெனியில் வேலை செய்தேன்.
அங்கு எங்கள் மேற்பார்வையாளர் ஒருவர் எங்களை கடுமையாக வேலை வாங்கிவிட்டு பின்பு நாங்கள் யாரும் வேலை பார்க்கவில்லை என்று எங்கள் உரிமையாளரிடம் கூறுவார். அதனால் உரிமையாளர் கருணையின்றி மிகவும் கடுமையான சொல்லால் எங்களைத் திட்டுவார். அவர் மது அருந்துபவர் என்பதால் எங்களுக்கு மயக்கம் வரும்வரை எங்களை அடிப்பார். எங்கள் சம்பளத்தை தரமுடியாது என்று மிரட்டுவார். அதன்காரணமாக போக போக எங்களுக்கு போதிய உணவும் நீரும் கிடைக்காமல் போனது.
காலை உணவாக சில பிஸ்கட் மற்றும் மதிய உணவாக ஒரு ரொட்டி மற்றும் சில காய்கறிகள் கொடுத்தனர் . நாங்கள் தினமும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வேலை செய்தோம். நாங்கள் வேலை செய்யும் அறை 8 * 8 அடியில் இருந்ததால் அனைவரும் நெருக்கமாக அமர்ந்து வேலை பார்த்தோம். வேலை முடிந்ததும் இதேபோல் மற்றொரு சிறிய அறையில் சென்று நாங்கள் அனைவரும் நெருக்கமாக தூங்குவோம். நான் வேலை பார்த்ததற்கு எனக்கு ஒருநாள் கூட சம்பளம் தரவில்லை. ஒருநாள் அதிர்ஷ்டவசமாக கம்பெனியை சோதனை செய்த காவல்துறையினர், எங்களைக் காப்பாற்றினர்.
இப்போதும் அவர்களுக்கு எங்களைப் பற்றிய தகவல் எப்படி தெரிந்தது? யார் கூறினார்? என்று தெரியவில்லை. அவர்கள் எங்களுக்கு அருகிலுள்ள காப்பகத்தில் அடைக்கலம் கொடுத்து எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் நான் நீரிழிவு நோயால் தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனக்கு உடனடி கவனிப்பு தேவைப்பட்டது. அதன்படி சிகிச்சை அளிக்கப்பட, எங்கள் உடல் நலம் சரியானதும் நாங்கள் வீட்டிற்குச் சென்றோம்.
இருப்பினும் நான் வீடு திரும்பும்போது எனக்கு அனைத்தையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. எனது அம்மா மது அருந்தாமல் அவரது உடலை கவனமான முறையில் பார்த்துக்கொண்டார். எனது அப்பாவும் சிலமுறை மட்டும் மது அருந்துவதும், அப்படி அருந்தும்போதும் வீட்டில் சண்டையில்லாமல் அமைதியாக இருப்பதும் வழக்கமாக இருந்தது.
நான் எனது பகுதியிலுள்ள தன்னார்வலர்கள் நடத்தி வரும் சென்டர் டைரக்ட் என்னும் இடத்தில் ஆலோசனை பெற்றுக்கொண்டேன். அவர்கள் எனது வாழ்க்கைக்கான பாதையாக ஒரு மளிகைக்கடை வைக்க ரூ.5000 கொடுத்தனர். இன்று என் அம்மாவும் எனக்காக கடையில் வந்து உதவுகிறார்.
இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதனால் நான் எனது பகுதியிலுள்ள மற்ற குழந்தைகளிடம் இதைப்பற்றி கூறி அவர்களை கடத்தல் சம்பவத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கக் கூறுகின்றேன். நான் இந்திய தலைமை மன்றத்துடன் இணைந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வாதாடினோம். குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தால் தண்டிக்கப்படுவதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன், என்று மனம் திறந்துள்ளார்.
தமிழில்: மலையரசு