தமிழகத்தில் கொத்தடிமைகளாக இருந்த 6,000 தொழிலாளர்களை மீட்ட மானசி!
தமிழகத்தின் வெவ்வேறு செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருந்த 6,000-க்கும் மேற்பட்டவர்களை துணிச்சலுடன் மீட்டுள்ளார் 19 வயது மானசி.
இந்தியாவில் கொத்தடிமை முறை பல காலமாக இருந்து வருகிறது. இதன்படி அதிகளவிலான தொழிலாளர்கள் ஆறு மாதம் முதல் பல ஆண்டுகள் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவதாக உத்தரவாதம் அளிக்கப்படும்.
பல என்ஜிஓ-க்கள் இந்த அடிமைத்தனமான முறைக்கு எதிராக போராடி தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். தரகர் ஒருவரால் கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் தமிழகத்தின் வெவ்வேறு செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக சிக்கிக்கொண்ட 6,000 தொழிலாளர்கள் மீட்கப்பட உதவியுள்ளார்.
ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மானசி பரிஹா. இவர் தனது அப்பாவுடனும் 10 வயது சகோதரியுடனும் வசித்து வந்தார். இவரது அம்மா உயிரிழந்துவிட்டார். மானசியின் அம்மாவின் மருத்துவச் செலவுகளுக்காக இவர்கள் 28,000 ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.
ஆனால் இவர்களால் பணத்தைத் திருப்பியளிக்க முடியவில்லை. முகவர் 355 தொழிலாளர்களுடன் இவர்களையும் திருவள்ளூரின் புதுக்குப்பத்தில் உள்ள ஜிடிஎம் செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
“நாங்கள் அதிகாலை 4.30 மணிக்கு வேலையைத் தொடங்கி மதியம் வரை வேலை செய்யவேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு கொடுப்பார்கள். மீண்டும் பணியைத் தொடரவேண்டும். மாலை வெகு நேரம் வரை வேலை செய்யவேண்டும்,” என்று மானசி ‘தி பெட்டர் இந்தியா’-இடம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் சிறு தொகையை சம்பாதிக்க ஆறு மாதங்கள் வரை வேலை செய்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்தத் தொழிலாளர்கள் விரைவில் வீடு திரும்ப விரும்பினர்.
“நாங்கள் பணியை செய்து முடித்து வீடு திரும்புவதற்காக இரவு பகலாக உழைத்தோம். எங்கள் உறவினர்கள் சீக்கிரம் வீடு திரும்புமாறு அழுத்தம் கொடுத்தனர். எங்களுக்கும் இந்தப் பெருந்தொற்றை நினைத்து பயம் அதிகரித்தது,” என்றார்.
வேலையை முடித்தாலும்கூட தொழிலாளர்கள் வீடு திரும்ப உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை. மே மாதம் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். உரிமையாளர் அந்தத் தொழிலாளர்களை ஆள் அனுப்பி லத்தியால் அடித்துள்ளார். மானசியின் சகோதரி உட்பட பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போதுதான் ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற எண்ணம் மானசிக்கு ஏற்பட்டது.
“என் மொபைலில் இருந்து அனைவரையும் தொடர்பு கொண்டேன். காயம் பட்டவர்களின் புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவற்றை வாட்ஸ் அப் எண்களுக்குப் பகிர்ந்துகொண்டு உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்டேன். உரிமையாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடும் ரத்தப்போக்கால் சிலர் உயிரிழக்கும் அபாயம் இருந்தது,” என்று Sambad-இடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஊடக நண்பர்களையும் தொடர்புகொண்டுள்ளார் மானசி. உடனடியாக காவலர்கள் சென்று தொழிலாளர்களை மீட்டனர். செங்கல் சூளைக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தபோது இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் முறைகேடாக கொத்தடிமைகளை நியமித்திருப்பது தெரியவந்தது. காவல்துறையின் பாதுகாப்புடன் அவர்கள் அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA