வறுமையை ஒழிப்பது தொடர்பான ஆய்வு: இந்தியர் அபிஜித், அவரது மனைவிக்கு நோபல் பரிசு!
உலகளவில் வறுமையை ஒழிப்பது தொடர்பான ஆய்விற்காக, அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகிய 3 பேருக்கு 2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களுடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்ளோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக இந்தாண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் வறுமையை ஒழிப்பது தொடர்பான முன்னோடியான பொருளாதார ஆய்வுக்காக இம்முறை இவர்கள் மூவருக்கும்நோபல் பரிசு தரப்படுகிறது.
இந்தியர் அபிஜித் பானர்ஜி பின்னணி
58 வயதாகும் அபிஜித் பானர்ஜி இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் இருவருமே கல்லூரி பேராசிரியர்கள் தான். தாய் நிர்மலா பானர்ஜி கொல்கத்தா சமூக அறிவியியல் கல்வி மையத்தில் பொருளாதார பேராசிரியை, தந்தை தீபக் பானர்ஜி கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் பொருளாதார பேராசிரியர் ஆவார்.
கொல்கத்தாவில் பிறந்தவரான அபிஜித்திற்கு பெற்றோர் இருவருமே கல்வித் துறையில் இருந்ததால் சிறுவயது முதலே கல்வியில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில். 1981ம் ஆண்டு கொல்கத்தாவில் இருக்கும் பிரசிடென்சி கல்லூரியில் பிஎஸ்சி பொருளாதாரம் படித்தார். பின்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். 1988ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அபிஜித், பின்னர் அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டு குடியுரிமையைப் பெற்று விட்டார். இவரோடு சேர்ந்து நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் எஸ்தர் டப்ளோ வேறு யாருமல்ல, அபிஜித்தின் மனைவி தான்.
மிகச் சிறந்த பொருளாதார வல்லுநராகக் கொண்டாடப் படும் அபிஜித் தற்போது, ஃபோர்டு பவுண்டேஷன் சார்பில் செயல்படும் எம்ஐடி எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் மாசெசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச பொருளாதார பேராசிரியராக உள்ளார். 2003-ம் ஆண்டு அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகத்தை தனது மனைவி எஸ்தர் மற்றும் தமிழரான செந்தில் முல்லைநாதனுடன் சேர்ந்து தொடங்கினார். தற்போதும் அதன் இயக்குநராக அவர் நீடிக்கிறார்.
“மொராகோ நாட்டில் ஒருவேளைக்குக் கூட போதுமான உணவு கிடைக்காத நபர் தொலைக்காட்சி வாங்க முடியுமா? ஏழையாக இருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் கூட ஏன் கற்க முடியாமல் போகின்றனர். குழந்தைகள் திட்டமிட்டே ஏழைகளாக்கப் படுகின்றனரா? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே உலகளாவிய வறுமையை நாம் விரட்ட முடியும்,” என்பதே அபிஜித்தின் முக்கிய தேடலாக இருந்தது. அது தொடர்பாகவே அவரது ஆராய்ச்சிகளும் தொடர்கிறது.
வறுமை ஒழிப்பு குறித்த இவரது பார்வை உலகளவில் பெரிய அளவில் விவாதத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளாக வளர்ச்சி பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளுக்கு புதிய கோணத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 70 கோடி மக்கள் மிகவும் மோசமான வருமானத்தை கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 50 லட்சம் குழந்தைகள் குறைந்தபட்ச மருத்துவ உதவி கூட கிடைக்காமல் மரணமடைகின்றனர் என்கிறது புள்ளி விபரக் கணக்கு. இதுபற்றிய அபிஜித்தின் ஆய்வுகள் புதிய வளர்ச்சி பொருளாதாரத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. வறுமையை ஒழிப்பது தொடர்பான செயல்பாட்டில் இவரது ஆய்வுகள் முன்னோடியாக உள்ளன.
அபிஜித் உட்பட விருதுக்கு தேர்வாகியுள்ள மூவரின் ஆராய்ச்சி முடிவுகளும் உலகளாவிய அளவில் வறுமையைக் கட்டுப்படுத்தும் நமது திறனை மேம்படுத்தி இருப்பதாக விருதுக் குழு பாராட்டியுள்ளது.
உலகின் பாதி குழந்தைகள் இன்னும் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண் திறன் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். இப்படியான உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதை சோதனை முறையில் முயற்சி செய்து நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
தனது ஆராய்ச்சி முடிவுகளை புத்தகங்களாகவும் அபிஜித் எழுதியுள்ளார். Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty உள்பட பொருளாதார புத்தகங்கள் பலவற்றை அவர் எழுதியுள்ளார். இதில் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகம் மட்டும் 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
எஸ்தர் டப்ளோ
அபிஜித்துடன் நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் எஸ்தர் அவரது இரண்டாவது மனைவி ஆவார். முதலில் அபிஜித் அருந்ததி துலி பானர்ஜி என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டார். கொல்கத்தாவில் தன் சிறு வயதில் தோழியாக இருந்தவர் அருந்ததி. மாசெசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் இலக்கிய பேராசியராக உடன் பணிபுரியும்போது அவரை அபிஜித் காதலித்து மணந்து கொண்டார். அவர்களுக்கு கபிர் பானர்ஜி என்ற மகன் பிறந்தார். பின்னர் கருத்துவேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 2016ம் ஆண்டு கபிரும் மரணமடைந்தார்.
அதன் பிறகு தன்னுடன் சேர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட எஸ்தர் டப்ளோவுடன் அபிஜித்திற்கு காதல் ஏற்பட்டது. எஸ்தர் 1972ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தவர். அங்கு வரலாறு மற்றும் பொருளாதார பாடங்களில் பட்டம் பெற்றார். எம் ஐ டி-ல் 1999ம் ஆண்டு பி.எச்.டி பட்டம் பெற்றார். இவரும் ஏராளமான புத்தகங்கள் எழுதியதுடன், விருதுகளும் பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே அபிஜித்தும், எஸ்தரும் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு 2012ம் ஆண்டு குழந்தையும் பிறந்தது. அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அபிஜித்தும், எஸ்தரும் சேர்ந்து கொடுத்த ஆலோசனையின் பேரில் 50 லட்சம் குழந்தைகள் டியூசன் பயிற்சியின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
இது தவிர, குறைந்த வயதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் எஸ்தர். இதற்கு முன்னர் கென்னத் ஜெ.ஆரோ என்பவர் கடந்த 1972ம் ஆண்டு தனது 51 வயதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றார். ஆனால், எஸ்தர் 46வது வயதிலேயே இந்த விருதைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்தர்,
"இப்போது பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் என்றாலும், பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. எனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதன் மூலம் இத்துறையில் பெண்களுக்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படும் என்று நம்புகிறேன். இதன் மூலம் பெண்களின் மதிப்பு சர்வதேச அளவில் மேலும் அதிகரிக்கும். எங்கள் பணிக்கு மிகஉயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது,” என்றார்.
தொடர்ச்சியாக வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் கவனம் செலுத்தி வரும் அபிஜித்துக்கு ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல் நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார்.
நோபல் பரிசை வென்ற இந்தியர்கள்:
உலகளவில் கௌரவம் மிக்க விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசை இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேர் பெற்றுள்ளனர். முதல்முதலில் நமது தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை கடந்த 1913ம் ஆண்டு பெற்றார். அதன் பிறகு 1930ம் ஆண்டு சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஹர் கோவிந்த் கொரானா, மருத்துவத் துறை பணிக்காக 1968ல் நோபல் பரிசு பெற்றார்.
1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அன்னை தெரசாவுகு வழங்கப்பட்டது. சுப்ரமண்யம் சந்திரசேகர் இயற்பியல் துறைக்காக, 1983ல் நோபல் பரிசு பெற்றார். பொருளாதார அறிவியலுக்கு வழங்கிய பங்களிப்புக்காக, 1998ல் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு வேதியியல் துறையில் சாதித்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு தரப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு 2014ல் கைலாஷ் சத்யார்த்திக்கு வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது அபிஜித் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துச் செய்தி
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அபிஜித் நல்ல உறக்கத்தில் இருந்தாராம். காரணம் அப்போது அங்கு காலை 6 மணி. நோபல் பரிசு கிடைத்திருக்கும் தகவலைக் கேட்டு விட்டு மீண்டும் உறங்கச் சென்று விட்டாராம். ஆனால், இந்தியாவில் இருந்தும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து வந்த வாழ்த்துக்களால் அவரால் தொடர்ந்து உறங்க முடியவில்லையாம்.
அபிஜித்திற்கு அவர் படித்த கொல்கத்தா பிரசிடன்சி பல்கலைக்கழகம் தனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னும் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அபிஜித்திற்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட பல்வேறு இந்திய தலைவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
"நோபல் பரிசு வென்றதன் மூலம் நமது தேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் அபிஜித் பானர்ஜி பெருமை சேர்த்துள்ளார்,” என தங்களது வாழ்த்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
நோபல் பரிசு வென்ற மூவருக்கும், 1998-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய நிபுணர் அமர்த்தியா சென் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"அபிஜித் உள்ளிட்ட மூவர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிகச்சரியான நபர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்,” என்று கூறியுள்ளார்.
அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகியோர் நோபல் பரிசு பெற்றுள்ளது குறித்து அபிஜித்தின் தாயார் நிர்மலா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் வசித்து வரும் அவர் இது தொடர்பாக கூறுகையில்,
"எனது மகனும், மருமகளும் சர்வதேச அளவில் உயர்ந்த விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நமது தேசத்துக்கு பெருமையளிக்கும் விஷயம்,” என்று கூறியுள்ளார்.
கௌரவம்
தனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் நோபல் பரிசு கிடைக்கும் என அபிஜித் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
“நான் கடந்த 20 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு நோபல் கிடைக்கும் என நான் நினைக்கவேயில்லை. நோபல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது. வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற உயரிய கௌரவம் கிடைக்கும். அதனை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பொருளாதாரம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,
“இந்திய பொருளாதாரம் தற்போது தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்த்தால் விரைவில் அது மீண்டு எழும் என உறுதியாக கூற முடியாது. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் சில வளர்ச்சியைக் கண்டோம். ஆனால் இப்போது அந்த உறுதிப்பாடும் போய்விட்டது,” என்கிறார் அபிஜித்.
மைக்கேல் கிரெமர்
அபிஜித் மற்றும் எஸ்தரோடு சேர்ந்து இம்முறை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும், மெக்கெல் கிரெமர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமுக அறிவியலில் பட்டப்படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் முனைவரானவர். வளர்ச்சி மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருளாதார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். மாசெசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ள அவர், இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
1993ல் அவர் வெளியிட்ட "கிரெமரின் ஒ-ரிங் பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடு' மிகவும் பிரபலமானதாகும். சர்வதேச அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வுகளை அளித்துள்ளார்
பரிசு விபரம்
நோபல் பரிசுகள் தரக் காரணமான ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைதிக்கான பரிசு தவிர மற்ற நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நோபல் பரிசுடன் 9,18,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6.53 கோடி), தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் தரப்படும். பரிசுத் தொகை மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.