90 வயது எழுத்தாளர் தேவகி: இது பாட்டி சொல்லும் கதை அல்ல பாட்டியின் கதை...
தேவகி நிலயங்கோட் 75 வயதில் புத்தகம் எழுதத் துவங்கி இன்று 90 வயதில் நம்பூதரி அந்தர்ஜனத்தின் வாழ்க்கை குறித்த நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்...
பெரும்பாலான எழுத்தாளர்கள் இளம் வயதிலேயே எழுதத் துவங்கிவிடுவார்கள். 30 வயதாகும்போது தங்களுக்கென ஒரு தனி முத்திரையை பதிக்க விரும்புவார்கள். பலர் உலகின் மிகச்சிறந்த பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள். அது மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்.
ஆனால் தேவகி நிலயங்கோட் இப்படிப்பட்டவர்களில் ஒருவரல்ல. இவர் எழுதத் துவங்குகையில் இவரது வயது 75. முறையான கல்வி பயிலாதவர். வாழ்வின் பெரும்பாலான பகுதியை வீட்டிற்குள்ளேயே செலவிட்டவர்.
தேவகி அவரது பெற்றோர்களுக்கு 12-வது குழந்தையாக பிறந்தார். கேரளாவின் நம்பூதரி பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பாரம்பரியமான இவரது குடும்பத்தில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வீட்டிற்குள்ளேயே இவர்கள் செலவிடுவதால் இவர்கள் ’அந்தர்ஜனம்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
எழுத்தாளர் தேவகி ’நஷ்டபோதங்களில்லாதே’ (Nashtabodhangalillathe) என்கிற தனது முதல் புத்தகத்தை 2003-ம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு ‘எந்த கவலையும் இழப்பும் இல்லாத’ என்று பொருள் ஆகும். குழப்பங்களும் துன்பங்களும் வாழ்க்கையில் நிறைந்திருப்பினும் இந்த புத்தகத்தில் எங்கும் துக்கமோ கோபமோ வெளிப்படுத்தப்படவில்லை.
’நான் தேவகி. 75 வயது நிரம்பிய அந்தர்ஜனம்,’ என்கிற வாக்கியத்துடன் இந்த புத்தகம் துவங்குகிறது. அதன் பிறகு நம்பூதரிப் பெண்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களின் சமூக நிலை குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடிக்கப்படும். வயதான கணவரது வீட்டை அடைவதற்கு முன்பே பலர் விதவையாகிவிடுகின்றனர். விதவைகள் மோசமாக நடத்தப்படுவார்கள். திருமணங்கள் போன்ற மத சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. பல குடும்பங்களில் கணவர் திருமணம் செய்துகொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் ஒன்றாக வசிப்பார்கள். மறுப்பு, கோபம், பொறாமை போன்றவை உணர்வுகளின் கலவையுடன் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
தேவகி இதுவரை நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது வாழ்க்கையிலிருந்து கிடைக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாகவே தேவகியின் புத்தகங்கள் காணப்படுகிறது. அவரது எழுத்துக்கள் எளிமையானதாகவும் உரையாடல்களைக் கொண்டதாகவும் உள்ளது.
அவரது வளரும் பருவம் குறித்து தேவகி பகிர்ந்துகொள்கையில்,
"பாலின வேறுபாடு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்பே துவங்கிவிடுகிறது. பெண்கள் கருவுற்றிருக்கும் சமயத்திலேயே குடும்பத்திலுள்ள பெரியவர்கள் ஆண் குழந்தைதான் பிறக்கவேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். ஆண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் குழந்தை பிறந்த செய்தியை தெரிவிப்பார்கள். ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால் பணிப்பெண் சமையலறை கதவை மெல்ல தட்டி பெண் குழந்தை பிறந்த தகவலை தெரிவிப்பார்.”
நம்பூதரிகளின் வீடுகளில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் வளர்க்கப்படும் விதமே முற்றிலும் வேறுபட்டிருக்கும். பெண் குழந்தைகள் தவறின்றி புராணங்களை படிக்கவேண்டும். அவ்வாறு படிக்கத்தெரிந்தால் அத்துடன் அவர்களது பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதேசமயம் ஆண் குழந்தைகள் அவர்களது விருப்பப்படி படிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் நாட்கள் இருட்டிலேயே முடக்கப்படுவதால் அவர்களது சகோதரர்களால் அவர்களை பார்க்கக்கூட முடிவதில்லை. குழந்தையின் பாட்டிதான் அவர்களை பராமரிப்பார்கள். நம்பூதரி பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ஒரு வருடம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆண் குழந்தைகளாக இருந்தால் ஐந்து வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்படும். பெண் குழந்தைகள் பெரும்பாலும் பணிப்பெண்களாலேயே வளர்க்கப்படுவார்கள். இந்த பணிப்பெண்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து செல்வார்கள். நீச்சல் கற்றுக்கொடுப்பார்கள். கதைகள் சொல்வார்கள். ஆனால் இதில் முரண்பாடு என்னவென்றால் பணிப்பெண்கள் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் குழந்தைகள் பூப்படைந்தவுடன் பணிப்பெண்களை தொடுவதற்கு தடை விதிக்கப்படும்.
"இன்றைய பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களால் படிக்கமுடிகிறது. பணிபுரியமுடிகிறது. பயணம் செய்ய முடிகிறது. உரக்க பேசமுடிகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை என்னுடைய இளம் வயதில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது,” என்றார் 90 வயது தேவகி.
திரிச்சூரைச் சேர்ந்த தேவகி கூறுகையில், “என்னுடைய சகோதரி அருகாமையில்தான் வசிக்கிறார். எங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எங்களது இளம் பருவம் குறித்து நினைவுகூர்ந்து ரசிப்போம். எங்களது கதைகளை கேட்ட என் பேரன் தாதகாதன் இந்தக் கதைகளை எழுதச் சொல்லி என்னிடம் வலியுறுத்தினான்.”
தேவகி அவரது எழுத்துக்களில் கோபத்தையோ வருத்தத்தையே வெளிப்படுத்தவில்லை. ஒரு கதையை ஒரு நபர் விவரிப்பது போலவே நம்பூதரிப் பெண்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
தேவகி மலையாளத்தில் எழுதுகிறார். அவரது சமீபத்திய படைப்பான ’அந்தர்ஜனம்’, ’மெமோயர்ஸ் ஆஃப் ஏ நம்பூதரி வுமன்’ போன்றவை தேவகியின் எழுத்துத் தொகுப்புகளாகும். இவை ராதிகா மேனன் மற்றும் இந்திரா மேனனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி ப்ரெஸ்ஸால் வெளியிடப்பட்டது.
இளம் வயதில் தேவகியும் அவரது சகோதரிகளும் ரகசியமாக புத்தகம் வாசிக்கத் துவங்கினர். அவரது சகோதரர் மூலமாக புத்தகங்களை பெற்றனர். தேவகி பெங்காலி நாவல்களை விரும்பினார். அவரது சகோதரிகள் கவிதைகளை விரும்பி படித்தனர். அவரது வாசிப்புதான் அவரது எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி எழுத்து வடிவில் பிரதிபலித்தது.
தேவகிக்கு 15 வயதிருக்கையில் திருமணமானது. நிலயங்கோட் இல்லத்திற்கு வந்த சமயம் பெண்கள் ஒரளவிற்கு சிறப்பான நிலையை அனுபவிக்கத் துவங்கியிருந்தனர். எழுதவும், படிக்கவும், ப்ளவுஸ் அணியவும் அனுமதிக்கப்பட்டனர். பாரம்பரியமாக கேரளப் பெண்கள் தங்களது மார்பகங்களை மூடிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தேவகியும் அவரது கணவர் ரவியும் சிகப்பு மாலைகளுடன் ’புரட்சி ஓங்குக’ என்கிற கோஷத்துடன் இல்லத்திற்கு வரவேற்கப்பட்டனர்.
நிலயங்கோட் ஒரு முற்போக்கான குடும்பமாக இருந்தது. தேவகிக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். பெண்களுக்கு அதிகாரமளிக்கபடும் இயக்கங்களில் பங்கேற்று பெண் கல்வியை ஊக்குவித்தார்.
அவரது குடும்பம் பாரம்பரியம் நிறைந்ததாக இருக்கையில் தேவகியின் எழுத்துக்களோ சமூகத்தின் உணவுப்பழக்கங்கள், ஆடை அணியும் விதம், சமூக அந்தஸ்து, தீண்டாமை, வரதட்சணை, பெண்களின் நிலை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர் : சித்ரா அஜித்