தடைகளை தகர்த்து ’உலக காது கேளாத அழகி’ பட்டத்தை வென்றுள்ள சாதனை அரசி!
விதிஷா பாலியனுக்கு பிறவியிலேயே கேட்கும் திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. பள்ளியில் சக மாணவர்கள் இவரை கேலி செய்துள்ளனர். இருப்பினும் விளையாட்டிலும் மாடலிங் பிரிவிலும் சாதனை படைத்துள்ளார்.
வலிமை என்பது உடல் திறன் சார்ந்தது அல்ல என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கை சார்ந்தது என்றும் சொல்லப்படுவதுண்டு. இதற்கு மிகச்சரியான உதாரணம் விதிஷா பாலியன். உத்திர பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சர்வதேச அளவில் திறமையான டென்னிஸ் வீராங்கனை மட்டுமல்லாது நம்பிக்கை மற்றும் வசீகரத்தின் மறுவடிவமாகவும் திகழ்கிறார்.
விதிஷாவிற்கு விளையாட்டுகள் மீது ஆர்வம் அதிகம். தேசிய விளையாட்டுகளில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அத்துடன் 2017-ம் ஆண்டு துருக்கியில் நடைப்பெற்ற காது கேளாதோருக்கான டெப்லிம்பிக் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். பின்னர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும் ஆர்வத்தில் மாடலிங் பிரிவைத் தேர்ந்தெடுத்தார். அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான அழகிப் போட்டியில் பங்கேற்று உலகின் ‘காது கேளாத அழகி’ பட்டத்தை வென்றுள்ளார்.
இவருக்கு பிறவியிலேயே கேட்கும் திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. சிறு வயதில் பள்ளியில் சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். விளையாட்டு மற்றும் மாடலிங் துறையில் வெற்றி பெற்றுள்ளார். விதிஷாவின் நீண்ட பயணம் நம்பிக்கையும் துணிச்சலும் நிறைந்தது.
சோஷியல்ஸ்டோரி உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
”என்னுடைய பயணம் எளிதாக இருக்கவில்லை. ஒரு காதில் 100 சதவீதம் குறைபாடும் மற்றொரு காதில் 90 சதவீத குறைபாடும் உள்ளது. இதனால் பலர் என்னுடன் உரையாடுவதில்லை. என்னை கிண்டல் செய்வார்கள். என் மீது அதிகாரம் செலுத்துவார்கள். வகுப்பில் என்னுடைய ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை உதட்டசைவைக் கொண்டு புரிந்துகொள்வேன்,” என்றார்.
விதிஷாவின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவரது குறைபாட்டைத் திறமையாக மாற்றியது. இன்று இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
அடையாளத்தை உருவாக்கினார்
விதிஷாவிற்கு ஐந்தாண்டுகள் இருந்தபோது அவரது பெற்றோர் அவருக்கு கேட்கும் திறனில் குறைபாடு இருப்பதையும் பேச்சுக் குறைபாடு இருப்பதையும் தெரிந்து கொண்டனர். விதிஷாவை சிறப்புப் பள்ளிக்கு அனுப்புமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தபோது அவரது அம்மா தீக்ஷிகா குமாரும் அப்பா விபின் குமாரும் மறுத்துவிட்டனர்.
தங்களது மகள் சிறந்த சூழலில் வளரவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். விதிஷா முசாபர்நகரில் உள்ள எம் என் பப்ளிக் பள்ளியில் சேர்ந்தபோது வேறு வழியின்றி மற்றவர்கள் படிக்கும் வேகத்துடன் ஈடுகொடுத்துப் படிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
”பாடங்களை நான் புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். பள்ளி நேரம் முடிந்ததும் டியூஷன் செல்லத் தொடங்கினேன். என்னுடைய பெற்றோரும் என்னுடன் நேரம் செலவிட்டு பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்களை சத்தமாகப் படித்துக் காட்டினார்கள். பேசும் பயிற்சி சிகிச்சைக்கும் சென்றேன். இத்தனை முயற்சிகள் மேற்கொண்டபோதும் என்னால் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போதுதான் விளையாட்டில் ஈடுபடத் தீர்மானித்தேன்,” என்றார் விதிஷா.
12 வயதில் விதிஷா கைப்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட்டார். இந்த விளையாட்டுகளில் டென்னிஸ் விளையாட்டில் குழு ஈடுபாடு அதிகம் தேவைப்படாத காரணத்தால் அவருக்கு டென்னிஸ் மிகவும் பிடித்திருந்தது. அப்போதிருந்து அதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்தார். உடல் வலிமை, தசைகளுக்கான பயிற்சி, கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அதிக முயற்சிகள் மேற்கொண்டார். உத்திரப்பிரதேச டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2016-ம் ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்று இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.
கடினமான சூழல்
இந்த சம்மர் டெப்லிம்பிக் போட்டிக்கு விதிஷா தேர்வானபோது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை.
”நான் அந்தப் போட்டிக்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது முதுகின் கீழ்பகுதியில் எனக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் என்னுடைய பயிற்சியைத் தொடர்ந்தேன். அது கடினமான காலகட்டமாக இருந்தபோதும் நான் மனம் தளர்ந்துவிடவில்லை,” என விதிஷா நினைவுகூர்ந்தார்.
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் துருக்கியின் சாம்சன் பகுதியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான போட்டியில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 72 டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றனர். விதிஷா போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு குறைந்தது ஓராண்டிற்கு விளையாட்டுகளில் இருந்து விலகி ஓய்வெடுக்கவேண்டும் என விதிஷாவின் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அந்த ஓய்வு காலத்தில்தான் விதிஷா காது கேளாதோருக்கான அழகிப் போட்டி குறித்து செய்தித்தாளில் படித்தார். அதில் பங்கேற்க முடிவு செய்தார்.
”சிறு வயது முதலே எனக்கு மாடலிங் மீது ஆர்வம் இருந்து வந்தது. பாலிவுட் கதாநாயகிகள் போன்றே என்னை வெளிப்படுத்திக்கொண்டு, சில நடன அசைவுகளையும் செய்து பார்ப்பேன். எனவே இதை முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். என்னுடைய உடல் அமைப்பு விளையாட்டு வீரர் போன்றே இருந்ததால் அழகுப் போட்டிக்கு ஏற்றவாறு என் உடலையும் மனதையும் தயார்படுத்திக்கொண்டேன். ஸ்போர்ட்ஸ் ஷூவில் இருந்து ஹீல்ஸ் ஷூக்களுக்கு மாறியது கடினமாக இருந்தபோதும் உற்சாகமளிப்பதாகவும் இருந்தது,” என்றார்.
இந்த சமயத்தில் விதிஷா மாற்றுத்திறனாளிகளுக்கு அதன் அவுட்ரீச் மற்றும் ஆலோசனை திட்டங்கள் மூலம் உதவும் ”வீலிங் ஹேப்பினஸ்” என்கிற அறக்கட்டளையின் உதவியைப் பெற்றுக்கொண்டார். இந்நிறுவனம் விதிஷாவிற்கு மேக் அப், பயணம், படப்பிடிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு நிதியுதவி அளித்தது.
அவரது கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்தது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குவாஹத்தியின் அசாம் பகுதியில் நடைபெற்ற அழகிப் போட்டியில் ’இந்தியாவின் காது கேளாத அழகி’ என்கிற பட்டத்தைப் பெற்றார். ஜூலை மாதம் தென்னாப்ரிக்காவின் போம்பெலாவில் நடைபெற்ற ’உலகின் காது கேளாத அழகி’ பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.
”என்னுடைய உணர்வை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்,” என்றார் விதிஷா.
முன்மாதிரி
இன்று விதிஷாவின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் உந்துலளிக்கிறது. மோசமான சூழல்களிலும் மனம் தளராத அவரது அணுகுமுறையே இலக்கை எட்ட உதவியதாக தெரிவிக்கிறார் விதிஷா.
”என்னுடைய மன வலிமையே வெற்றியின் ரகசியமாகும். ஒருவர் தனது மனதை திடப்படுத்திக்கொண்டால் பெரும்பாலான தடைகளைக் கடந்துவிடலாம். சொந்தமாக ஒரு அறக்கட்டளையை நிறுவி என்னைப் போன்றோருக்கு ஆதரவளித்து அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். மாற்றுத்திறனாளியின் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒருவர் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க நம்பிக்கையும் கடின உழைப்பும் அவசியம்,” என்றார் விதிஷா.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா