ரஷ்யாவில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்!
மாஸ்கோவில் மருத்துவம் படிக்கும் 105 எம்பிபிஎஸ் தமிழக மாணவர்கள் நாடு திரும்ப விமான ஏற்பாடுகளை செய்தார் சோனு சூட்.
ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் 105 எம்பிபிஎஸ் தமிழக மாணவர்கள் நாடு திரும்ப விமான ஏற்பாடுகளை செய்தார் சோனு சூட்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால், சர்வதேச விமானச் சேவை நிறுத்தப்பட்டது. அதனால் பலர் ஆங்காங்கே மாட்டிக் கொண்டு தங்களது சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக வெளிநாடுகளில் படிக்கச் சென்ற மாணவர்கள், ஊரடங்கால் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இந்திய அரசு ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் அமெரிக்கா, லண்டன், துபாய், சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் மாட்டிக்கொண்ட இந்தியர்கள் மற்றும் மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே இந்த விமானங்கள் இயக்கப்பட்டன.
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில், தமிழகத்தைச் சேர்ந்த 105 மாணவர்கள் ஊரடங்கால் சிக்கிக்கொண்டனர். ரஷ்யாவுக்கு வந்தே பாரத் விமானச் சேவை இல்லாததால், அம்மாணவர்கள் ட்விட்டரில் தங்களுக்கு உதவிட ட்வீட் செய்தனர்.
அண்மைக் காலமாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு உதவி வரும் நடிகர் சோனு சூட்-யும் டிவிட்டரில் டேக் செய்து மாணவர்கள் உதவி கேட்டு பதிவிட்டனர்.
கஷ்டத்தில் தவிக்கும் அந்த மாணவர்கள், சென்னை திரும்பிட, விமானச் சேவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அவர்கள் பத்திரமாக சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்தார் சோனு சூட்.
மாஸ்கோவில் 4ம் தேதி விமானம் ஏறிய 105 எம்பிபிஎஸ் மாணவர்கள் டெல்லி மற்றும் சென்னை வந்தடைந்தனர்.
“தங்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்து விமான ஏற்பாடு செய்து தந்த சோனு சூட்-க்கு மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.”
சினிமாவில் வில்லனாக தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோக்களாக வாழும் சோனு சூட் போன்றவர்களை மக்கள் எப்போதும் மறப்பதில்லை.
கட்டுரை தொகுப்பு: இந்துஜா ரகுனாதன் | வீடியோ தொகுப்பு: தமிழ் மாறன்