நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்த ‘சின்ன கலைவாணர்’ விவேக் நினைவலைகள்...
நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கேலிக்கும், கிண்டலுக்கும் நடுவே சீர்திருத்த கருத்துகளை உரக்கச்சொன்ண இந்த கலைஞனின் குரல் தமிழ் மனங்களில் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நடிகர் விவேக் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அவரைப்பற்றி நினைவலைகளில் மூழ்கும் தருவாயில், பிரபலங்கள் உள்ளிட்டோரின் அஞ்சலி மற்றும் நினைவுக்குறிப்புகளை வாசிக்கும் போது நெஞ்சம் இன்னும் கணக்கிறது. ஒரு கலைஞராக விவேக் தமிழ் சமூகத்தின் மீது ஏற்படுத்தி சென்றிருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
‘மோனாலிசாவின் மர்மபுன்னகை இரண்டாம் முறையாக உறைகிறது...”
என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் விவேக் நினைவாக எழுதியுள்ள இரங்கல் கவிதையில் இந்த இழப்பின் வேதனையை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் விவேக்கை நினைவு கூறும் வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் உணர்வுகளை பதிவு செய்திருந்தாலும், அவற்றை எல்லாம் படிக்கும் போது, விவேக் எனும் கலைஞனின் பன்முகத்தன்மை பளிச் என மின்னுவதை புரிந்து கொள்ள முடிகிறது. தவிர, ஒவ்வொரு தரப்பினரையும் அவர் ஒவ்வொரு விதமாக பாதித்திருக்கிறார்.
விவேக் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் விஷயம், அவரது திரைப்பட நகைச்சுவையின் தன்மை தான். பலரும் பாராட்டுவது போல, அவர் திரைப்படங்களில் சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்க முயற்சி செய்தவர். அந்த வகையில் கலைவாணர் துவக்கி வைத்த நீண்ட நெடிய தமிழ் திரைப்பட நகைச்சுவை பாணியின் தொடர்ச்சியாக அமைந்தார்.
ஒரு சின்ன வசனம் கிடைத்தால் கூட அதன் மூலம் சிரிப்பை வரவைப்பதோடு, கொஞ்சம் கருத்து திரியையும் கொளுத்திப் போட முயன்ற விவேக், சின்ன கலைவாணர் எனும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் பொருத்தம் தானே.
சின்ன கலைவாணர் எனும் பட்டத்தை அவர் மனதார ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. ஆனால், அவரது நகைச்சுவை பாணியும், வசனங்களில் தெரித்த சீர்திருத்தக் கருத்துகளையும் கவனத்தில் கொண்டால், நடிகவேள் என புகழப்பட்ட எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை பள்ளியை அவர் அதிகம் நேசித்ததாக நினைக்கத்தோன்றுகிறது.
கே.பாலச்சந்தரால் ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவேக், தனது முதல் படத்தில் பேசிய ’இன்னிக்கு செத்தா, நாளைக்கு பால்’ எனும் வசனம் வெகு பிரபலம். ஆர்வத்துடன் மிமிகிரை செய்யும் கல்லூரி இளைஞர் போன்ற தோற்றத்தில் இந்த படத்தில் அறிமுகமான விவேக், அதன் பிறகு திரையுலகில் பயணித்த தொலைவும், தொட்டுச்சென்ற மைல்கல்களும் வியக்க வைப்பவை.
திரையில் பாத்திரங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, பொருத்தமான இடத்தில் நேரடியாக பார்வையாளனுடன் பேசத்துவங்கி விடுவது விவேக்கின் பாணியாக இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகளை சொல்லியதோடு, அவர்களை சிந்திக்க வைக்கும் கேள்விகளையும் சளைக்காமல் எழுப்பியிருக்கிறார்.
அந்த வகையில் அவர் காலத்தின் கலைஞனாகவே விளங்கினார். நகைச்சுவை நடிகருக்கு மிகவும் அவசியமான டைமிங் உணர்வை பெற்றிருந்த விவேக், சமகால விஷயங்களையும் தனது காட்சிகளில் இணைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இப்படி சமகால விஷயங்களை நகைச்சுவை காட்சிகளின் மூலம் பேசியே நாட்டுக்குத் தேவையான பல நல்ல கருத்துகளை கூறியதோடு, சமூக விமர்சனங்களையும் தயக்கம் இல்லாமல் முன் வைத்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் துவங்கி, மூட நம்பிக்கை எதிர்ப்பு வரை எல்லாவற்றையும் அவர் தொட்டிருக்கிறார்.
திரைப்படம் ஒன்றில், லாரியில் பாதுகாப்பிற்காக எலுமிச்சை பழம் கட்டும் பழக்கத்தை விமர்சிக்கும் வகையில், லாரியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாகங்களை விட இந்த பழமாடா பாதுகாப்பு என்பது போல அவர் பேசும் வசனத்தை விவேக்கின் டிரேட்மார்க் எனலாம்.
கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் தன்னைவிட தனது கருத்துக்களை முன்னிலைப்படுத்த விரும்பிய விவேக், நடிகர் திலகத்தின் மிகை நடிப்பில் துவங்கி சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற புகழ் வரை பல விஷயங்களை கேலி செய்திருக்கிறார். இதற்காக அவர் விமர்சிக்கப்பட்டாலும், ஒருபோதும் இந்த கேலியில் உள்நோக்கமோ, ஆளுமைகளுக்கு எதிரான தன்மையோ இருந்ததில்லை.
சாலமன் பாப்பையாவை குறிப்பிடும் ஒரு காட்சியில், திருவள்ளுவர் மற்றும் பாரதி தொடர்பான சமூகத்தின் அறியாமையை தொட்டுக்காட்ட முயன்றிப்பார். சூப்பர் ஸ்டார் முதல் இளம் நடிகர்கள் வரை எண்ணற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் திரையில் எப்போதுமே விவேக் தனக்கான தனி இடத்தை பிடித்துக்கொண்டிருந்ந்தார்.
அனைவரும் அறிந்தது போல, விவேக் சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல, நல்ல குணசித்திர நடிகரும் கூட. பாய்ஸ் படத்தில் அவர் வெளிப்படுத்திய நேர்த்தியும், பக்குவமும் நிறைந்த நடிப்பை இதற்கான உதாரணமாக சொல்லலாம்.
திரையில் பலவித பாத்திரங்கள் ஏற்றவர், நிஜ வாழ்க்கையிலும் பல பாத்திரங்களை ஏற்று பன்முகம் கொண்டவராக இருந்திருக்கிறார். மேடைப்பேச்சில் வல்லவரான விவேக், ஆர்வத்துடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
நிகச்சிகளில் பங்கேற்பது தவிர, சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு, மரம் நடும் திட்டங்களிலும் அக்கரைக் கொண்டிருந்தார். யோகா போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி, எப்போதும் சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும் மனிதராக அவர் துடிப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறார். அதனாலயே அவரது திடீர் மறைவு பெரும் சோகமாக அமைகிறது. இருப்பினும், மகத்தான கலைஞர்களப் போலவே அவர் தனது ஆக்கங்களை மக்களுக்காக விட்டுச்சென்றிருக்கிறார்.
விடைபெறுங்கள் விவேக், தேர்ந்த நகைச்சுவைக் கலைஞராக தமிழ் சமூகம் உங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.