எழுத்தாலும், நடிப்பாலும் மக்களைச் சிரிக்க வைத்த ‘நகைச்சுவை ஞானி’ கிரேஸி மோகன்!
சினிமா வசனகர்த்தா, நாடகக் கலைஞர், நடிகர் என பன்முகத் திறமைக்கொண்ட கிரேஸி மோகன் சென்னையில் இன்று காலமானார்.
தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி என்ற பக்கத்தில் அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்தவர்களில் ஒருவர் கிரேஸி மோகன். நடிப்பாலும், எழுத்தாலும் தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வந்தவர்.
கடந்த 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி சென்னையில் மோகன் பிறந்தார். அவரது இயற்பெயர் மோகன் ரங்காச்சாரி. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். ஆரம்பகாலத்தில் இருந்தே கலை துறையில் அதீத ஆர்வம் கொண்டவர் கிரேஸி மோகன். அதன் காரணமாக நல்ல வேலை கிடைத்தும், அதனை ஒதுக்கிவிட்டு 1985ம் ஆண்டு முதல் நாடகத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.
‘நாடகங்கள் குழந்தைகள் போன்றவை. நீங்கள் அவற்றை கருப்பா, சிவப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது. சும்மா பார்த்து மகிழ வேண்டும்’ இது தான் காமெடி பற்றி கிரேஸி மோகனின் கருத்து. அவரது பட வசனங்களும் அப்படித்தான். ஆராய்ந்து பார்க்காமல், ஆழ்ந்து ரசிக்கும்படி இருந்தன.
பள்ளியில் தனது சீனியரான எஸ்.வி.சேகர் மூலம், அவர் முதன்முதலில் மேடை ஏற்றிய நாடகம் 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்'. இந்த நாடகம் அமோக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தான் ’கிரேஸி’ எனும் வார்த்தை மோகனுக்கு முன்னாள் சேர்ந்துகொண்டது. அவர் ஆரம்பித்த நாடகக் கம்பெனிக்கும் கிரேஸி கிரியேஷன்ஸ் என்றே பெயர் வைத்தார்.
அந்த ஒரு நாடகம் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட முறை இதுவரை அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல், அவரது ’சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் மூன்று ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
கிரேஸி மோகனின் திரைவாழ்க்கை இயக்குனர் கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படம் மூலம் தொடங்கியது. அந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான தேவி 2 வரை நூற்றுக்கணக்கான படங்களுக்கு வசனம் எழுதி பார்வையாளர்களை சிரிப்புக் கடலில் மூழ்கடித்தவர் கிரேஸி.
மற்ற நடிகர்களைவிட, கிரேஸி மோகன் அதிகமாக பணியாற்றியது கமல் படங்களில் தான். இது ஆரம்பமானது அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து. அந்த படத்தில் ஒரு வசனம் வரும். குட்டி கமல் அப்பு மௌலியிடம் 'கபடநாடகவேஷதாரி' எனச் சொல்வார். அதற்கு பதிலாக, ’'இத்தனை சிறிய உடம்பில் இருந்து இவ்வளவு பெரிய வார்த்தையா?", என மௌலி கேட்பார். இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்படும் வசனம் அது.
கிரேஸி மோகன் - கமல் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே காமெடி கேரண்டி. பார்வையாளர்கள் வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம். பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உள்பட நிறைய படங்கள் இதற்கு உதாரணம்.
‘காமெடியில் கலக்க வேண்டும் என்றால் தொடர்ந்து நீங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் விசயத்தை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக, ஜாலியாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சேர்த்து ஜாலியாக காமெடியாகச் சொல்ல வேண்டும். அது தான் சவால். ஒரே மாதிரியான அலுப்பூட்டும் விதத்தில் சொல்லாமல், புதிய முயற்சிகளாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும்’ என்பது தான் புதிய காமெடி எழுத்தாளர்களுக்கு கிரேஸி மோகனின் அறிவுரை.
பாண்டியராஜன் - எஸ்.வி.சேகர் நடிப்பில் உருவான கதாநாயகன் படத்திற்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன். அந்த படத்தில் கஜாவின் படகில் துபாய்க்கு செல்லும் போது ஒரு வசனம் இடம்பெறும். "தூங்கி எழுந்தா துபாய்", எனும் அந்த வசனம் தாய் கிரேஸிக்கு மிகவும் பிடித்த வசனம். தனக்கு எப்போது எல்லாம் பிரச்சினை வருகிறதோ, அப்போது எல்லாம் இந்த வசனத்தை நினைவுப்படுத்திக்கொண்டு, தூங்கச் சென்று விடுவாராம் கிரேஸி மோகன்.
கமலின் பல படங்களில் பணியாற்றிய கிரேஸி மோகன் ரஜினிக்கு ஒரே படத்திற்கு தான் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால் அதுவும் சூப்பர் ஹிட்டான படம். அது தான் அருணாச்சலம்.
நடிகர் கிரேஸி:
வசனகர்த்தாவாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கலக்கியவர் கிரேஸி மோகன். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் காமெடி மட்டும்மல்லாமல், உணர்வுப்பூர்வமாகவும் நடித்து கலக்கியிருப்பார் அவர். சதீலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா என பலப் படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் அவரது டைமிங் வசனம், அக்காட்சியில் இருக்கும் நாயகனையேகூட மறக்கடித்து விடும்.
சினிமாவில் பிஸியாக இருந்த போதிலும் நாடகங்களை விடாமல் நடத்தி வந்தார். கடந்த 40 ஆண்டுகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறும் விடாமல் நாடகங்களை நடத்தி வந்தார். மாது பாலாஜி, சீனு மோகன் என கிரேஸியின் நாடகக் குழுவில் நடித்த நடிகர்களும், அவர்களது கதாபாத்திரப் பெயர்களாலேயே மிகவும் பிரபலமானார்கள்.
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கிரேஸி மோகனின் நாடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின. அவரது டைமிங் காமெடிக்கு என ரசிகர் வட்டம் பெருகியது. மறுஒளிபரப்பு செய்யப்படும் போதும் கூட அந்த நாடகங்களுக்கு ரசிகர்கள் குறையவில்லை.
இறப்பதற்கு முன்பு வரைக்கூட வசனம் எழுதிக்கொண்டிருந்தவர் கிரேஸி மோகன். இன்று காலை 11 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதியம் 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
கிரேஸி மோகன் காலமானார். ஆனால் அவரது படைப்புகள் காலத்தால் அழியாதவை. தமிழக அரசின் ’சிறந்த மேடைநாடகக் குழு' விருது, தேவன் நினைவு விருது போன்றவை கிரேஸி மோகனின் எழுத்துக்குக் கிடைத்திருக்கும் கௌரவங்கள்.
கிரேஸி மோகனின் இந்த திடீர் மறைவு திரையுலகைச் சேர்ந்தவர்களையும், மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது மறைவிற்கு கமல் உட்பட திரையுலகப் பிரபலங்கள் நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களும் கிரேஸி மோகனின் காலத்தால் அழியாத வசனங்களை பதிவு செய்து தங்களது இரங்கலை சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக செலுத்தி வருகின்றனர்.