Adani FPO: ‘முதலீட்டாளர்களின் நலன் கருதி FPO பங்கு விற்பனையை நிறுத்தி வைக்கிறோம்’ - கெளதம் அதானி!
ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், கெளதம் அதானி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Hindenburg அறிக்கையின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், கெளதம் அதானி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தையில் மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து கடந்த ஒருவாரமாக அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. இதனால் அதானி குழும நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கோடிகளில் நஷ்டமடைந்து வருவது தொடர்கதையாகியுள்ளது.
இதனிடையே, அதானி குழுமம் ரூ.20000 கோடி மதிப்பிலான எஃப்.பி.ஓ பங்கு விற்பனை குறித்து அதிரடி முடிவை அறிவித்தது.
அதானி குழுமம் முடிவு:
கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்குச்சந்தை மற்றும் கணக்குகளை கையாள்வதில் மோசடி செய்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்தன. இந்நிலையில், திட்டமிட்டபடி அதானி எண்டர்பிரைசஸ் தனது எஃப்.பி.ஓ. பங்குகளை வெளியிட்டு 2000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருந்தது. பங்குகள் அனைத்தும் முழுமையாக விற்பனையான நிலையில், அதானி குழுமம் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.
கெளதம் அதானி அறிவிப்பு:
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் ஏற்கனவே முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தில் உள்ள நிலையில், புதிய எஃப்.பி.ஓ. வெளியிட்டை கைவிட முடிவெடுத்துள்ளதாக கெளதம் அதானி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள அவர், இந்த சந்தர்ப்பத்தில் தனது முதலீட்டாளர்களின் நலன் தனக்கு மிகவும் முக்கியம் என்றும், எனவே, முதலீட்டாளர்களை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் FPO-வை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
“அதானி நிறுவனத்தின் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இப்போது பங்குகளை வெளியிடுவது கொள்கை ரீதியாக சரியாக இருக்காது என இயக்குநர்கள் குழுமம் கருதுகிறது. அதனால் முதலீட்டாளர்களின் நலன் கருதி எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை நிறுத்தி வைக்கிறோம்,” என்று அதில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அதானி எண்டர்பிரைசஸ் எஃப்.பி.ஓ -வில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
“இந்த முடிவு எங்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்றுதல் மற்றும் வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். எங்கள் நிறுவனத்தின் அடிப்படைகள் வலுவானவை. எங்களின் இருப்புநிலை ஆரோக்கியமானது மற்றும் சொத்துக்கள் வலுவானது. எங்களின் EBIDTA நிலைகளும் பணப்புழக்கங்களும் மிகவும் வலுவாக உள்ளன. மேலும், எங்களின் கடன்களை திரும்ப செலுத்துவதில் இதுவரை எவ்வித குறைபாடும் இன்றி சாதனை படைத்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி உத்தரவு:
அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரத்தை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதானி நிறுவனம் வங்கிக் கடனில் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறதா என்று விசாரணை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ.7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தவர் படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டு இப்போது 15ம் இடத்தில் உள்ளார்.
‘மோசடியை தேசியவாதம் கொண்டு மறைக்க முடியாது’ - அதானி குழும பதிலுக்கு Hindenrburg பதிலடி!