அதானியால் எல்.ஐ.சி.க்கு ஏற்பட்ட பரிதாபம் - இரண்டு நாட்களில் ரூ.16,580 கோடி இழப்பு!
அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகளில் ஏற்பட்ட கடும் சரிவால் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இரண்டே நாட்களில் ரூ.16,580 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.
அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகளில் ஏற்பட்ட கடும் சரிவால் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இரண்டே நாட்களில் ரூ.16,580 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் கடந்த புதன் கிழமை முதல் கடும் சரிவை சந்தித்து வந்தன. குறிப்பாக புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய பங்குச்சந்தை விற்பனையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,640 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 400 புள்ளிகள் வரையிலும் சரிந்தன.
இதனால் முதலீட்டாளர்கள் 10.73 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை சந்தித்த நிலையில், அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பில் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளது. ஜனவரி 25ம் தேதி நிலவரப்படி, ரூ.19 லட்சம் கோடியாக இருந்த சந்தை மதிப்பு 25 சதவீதம் சரிந்து 15 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
ஆபத்தில் சிக்கிய எல்.ஐ.சி:
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரும் தங்களது முதலீடுகளை இழந்துள்ளனர். குறிப்பாக அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) நிறுவனம் இரண்டே நாட்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அதானி குழுமத்தில் முதலீடு செய்த உள்நாட்டு நிறுவன முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. , இரண்டு நாட்களுக்குள் ரூ.16,580 கோடி ரூபாயை இழந்துள்ளது. இந்த நஷ்டத்தின் பெரும்பகுதி அதானியின் மொத்த எரிவாயு பங்குகளில் இருந்து வந்துள்ளது. அதாவது, அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் எல்ஐசி 5.96 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. இந்த ஒரு நிறுவனத்திடமிருந்து மட்டும் எல்ஐசிக்கு 6 ஆயிரத்து 232 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி என்டர்பிரைசஸ்:
அதானி குழுமத்தின் தாய் நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸில் எல்ஐசி 4.23 சதவீத பங்குகள், அதாவது, 4,81,74,654 பங்குகளை வைத்துள்ளது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.673.5 குறைந்துள்ளது. ஒரு பங்கின் விலை 3,442 ரூபாயில் இருந்து 2,768 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் எல்ஐசி ரூ.3,245 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி போர்ட்ஸ்:
அதானி போர்ட்ஸில் எல்ஐசிக்கு 9.14 சதவீத பங்குகள், அதாவது, 19,75,26,194 பங்குகள் உள்ளன. கடந்த இரண்டு அமர்வுகளில் அதானி போர்ட்ஸ் பங்கு விலை ரூ.156.70 குறைந்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.761.20ல் இருந்து ரூ.604.50 ஆக சரிந்தது. இந்த நிறுவனத்தால் எல்ஐசிக்கு 3,095 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்:
அதானி டிரான்ஸ்மிஷனில் எல்ஐசி 4,06,76,207 பங்குகளை (3.65 சதவீதம்) வைத்துள்ளது. கடந்த புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அமர்வுகளில் பங்கு விலை ரூ. 747.95 குறைந்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.2,762.15 முதல் ரூ.2,014.20 ஆக சரிந்தது. இந்த நிறுவனத்தின் மூலம் எல்ஐசி 3,042 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி:
அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டின் முடிவில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டில் எல்ஐசி 1.28 சதவீத பங்குகளை, அதாவது, 2,03,09,080 பங்குகளை வைத்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் அதானி கிரீன் எனர்ஜி பங்கு மதிப்பு ரூ. 430.55 குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் எல்ஐசி 875 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி டோட்டல் கேஸ்:
அதானி டோட்டல் கேஸில் எல்ஐசி 5.96 சதவீத பங்குகள் அல்லது 2,03,09,080 பங்குகளை வைத்துள்ளது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை ரூ.963.75 குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் எல்ஐசி ரூ.6,323 கோடி இழப்பு ஏற்பட்டது.
கடந்த இரண்டு அமர்வுகளில், இந்த ஐந்து அதானி நிறுவனங்களின் நஷ்டங்கள் அனைத்தையும் சேர்த்தால், எல்ஐசிக்கு சுமார் 16,580 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பலமான அதானி குழுமம் - ஒரே நாளில் ரூ.49 ஆயிரம் கோடி நஷ்டம்: நடந்தது என்ன?