பட்ஜெட் 2022: சிறு, குறு நிறுவனங்களுக்கான அவசரக் கடன் சேவை (ECLGS) மார்ச் 2023 வரை நீட்டிப்பு!
சிறு, குறு மற்றும் நடுத்தர துறையில் விருந்தோம்பல் சேவையை மேம்படுத்த மார்ச் 2023க்குள் இசிஜிஎல் சேவையை ரூ. 5 லட்சம் கோடியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருந்தோம்பல் துறையில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த மார்ச் 2023 வரஒ Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நிதி உத்திரவாத தொகை ரூ.50,000 கோடியில் இருந்து ரூ. 5 லட்சம் கோடியாக விரிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022 -2023ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) பல்வேறு நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில், அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விருந்தோம்பல் மற்றும் அது தொடர்புடைய துறைகளில் இயங்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முழுவதுமாக மீண்டெழவில்லை. எனவே, அவற்றை மேம்படுத்தும் வகையில் அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது,” என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தின் உத்தரவாதத் தொகை ரூ.50,000 கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடியாக விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த கூடுதல் தொகை குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளுக்காக ஒதுக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
”உத்யம், இ-ஷ்ரம், என்சிஎஸ் மற்றும் அசீம் போன்ற MSME இணையதளங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படும் என்றும், அவற்றின் நோக்கம் விரிவுபடுத்தப்படும் என்றும் சீதாராமன் கூறினார். கடன் வசதி, தொழில் முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற G-C, B-C மற்றும் B-B சேவைகளை வழங்கும் நேரடி ஆர்கானிக் தரவுத்தளங்களுடன் அவை இணைக்கப்படும்,” என அறிவித்துள்ளார்.
இந்தியா பிராண்ட் ஈக்விட்டி அறக்கட்டளையின் (IBEF) படி, இந்தியாவில் சுமார் 6.3 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளன. இந்தத் துறையானது, விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் ஒன்று எனக்குறிப்பிட்டார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அறிவிப்புகள்:
கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (சிஜிடிஎம்எஸ்இ) சார்பில், கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
MSME செயல்திறனை விரைவுபடுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,000 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் வெளியிடப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
"இது எம்எஸ்எம்இ துறையை மேலும் நெகிழ்ச்சியுடனும், போட்டித் தன்மையுடனும், திறமையாகவும் மாற்ற உதவும். திறன் திட்டங்கள் மற்றும் தொழில்துறையுடன் கூட்டு முயற்சிகள், தொடர்ச்சியான திறன் வழிகள், நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். தேசிய திறன் தகுதி கட்டமைப்பானது மாறும் தொழில்துறை தேவைகளுடன் சீரமைக்கப்படும்," என்றார்.
உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறையானது “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டத்தையும் உருவாக்கும், இது உற்பத்தி பொருட்களை ரயில்வேயில் கொண்டு செல்லப்படுவதன் மூலம் உள்ளூர் வணிகத்தை மேம்படுத்தும் என அமைச்சர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு, ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
”கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும், இந்திய தொழில்முனைவோர்கள் ஜி.எஸ்.டி வரியை செலுத்தியுள்ளனர். கோவிட் தொற்றுக்கு பிந்தைய அரசின் விரைவான பொருளாதார மீட்பு மற்றும் மத்திய மற்றும் மாநில வரி நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் காரணமாக இது சாத்தியமானது," என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
5 ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டிலேயே கொண்டு வரப்படும். தொலைதொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைகற்றைகள் ஏலம் விடப்படும்.
மலிவு விலையில் இணையதள சேவை மற்றும் செல்போன்களை உருவாக்க பிஎல்ஐ தலைமையில், 5ஜி டிசைன் மற்றும் உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்படும்.
பாதுகாப்புத் துறைக்குத் தேவையான 68% தளவாடப் பொருள்கள் உள்நாட்டிலேயே வாங்கப்படும்.
சோலார் தகடுகளுக்குத் தேவையான பொருட்களில் மிகவும் முக்கியமான பாலி சிலிகான் தயாரிப்பிற்காக உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு ரூ.90,500 கோடி ஒதுக்கீடு.
புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி சலுகை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை 2023-ம் ஆண்டின் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு