அம்பலமான அதானி குழுமம் - ஒரே நாளில் ரூ.49 ஆயிரம் கோடி நஷ்டம்: நடந்தது என்ன?
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 3வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 3வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு சமீப காலமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. புத்தாண்டில் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில், அதானியின் சொத்து மட்டுமே சரிவை சந்தித்து வருகிறது. இதன் மூலம் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமேசான் முதலாளி ஜெஃப் பெசோஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதானி குழும பங்குகளில் சரிவு:
கடந்த புதன்கிழமை இந்திய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தை அடுத்து, கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 5.9 மில்லியன்கள், அதாவது, இந்திய மதிப்பில் 49 ஆயிரம் கோடிக்கு மேல் குறைந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் 20 சதவீதம் சரிந்தன. இவை தவிர, அதானி எண்டர்பிரைசஸ் 18 சதவீதமும், அம்புஜா சிமென்ட் 16 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 15 சதவீதமும், ஏசிசி சிமென்ட் 12 சதவீதமும், அதானி வில்மர் 5 சதவீதமும், அதானி பவர் 5 சதவீதமும் சரிவடைந்துள்ளன.
அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்திருந்த பங்குதாரர்கள் புதன் கிழமை ரூ.3.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 4.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 25 முதல் ஜனவரி 27ம் தேதிக்குள், அதாவது, இரண்டு நாட்களிலேயே அதானி குழுமம் அதன் சந்தை மூலதனத்தில் இருந்து 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளது. ஜனவரி 25ம் தேதி நிலவரப்படி, ரூ.19 லட்சம் கோடியாக இருந்த சந்தை மதிப்பு 25 சதவீதம் சரிந்து 15 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை:
அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரும் மோசடி செய்துள்ளதாக முன்னணி முதலீட்டு ஆய்வு நிறுவனமான Hindenburg ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளை பெருமளவில் கையாள்வதாகவும் கணக்கு மோசடி செய்ததாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் குற்றம் சாட்டியது.
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்களை கையாளுதலில் மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 5 விஷயங்கள் அதானி குழும பங்குகள் சரிய காரணமாக அமைந்துள்ளன.
1. அதானி குழும நிறுவனங்கள் பங்கு விலைகள் மற்றும் கணக்கில் மோசடி செய்துள்ளன.
2. அதானி குழுமம் வரியைத் தவிர்க்க வெளிநாடுகளில் பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
3. மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் அதானி குழுமம் பல நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளன.
4. அதானி குழுமம் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குக் கடன்பட்டுள்ளது. இந்த கடன்கள் முழு குழுவையும் நிதி பேரழிவு நிலைக்கு கொண்டு வந்தன.
5. அதிக மதிப்பீட்டின் மூலம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 85 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது போன்றவை ஹிண்டன்பர்க் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் ஆகும்.
மோசடி மதிப்பு எவ்வளவு?
அறிக்கையின்படி, 120 பில்லியன் டாலர்கள் மற்றும் சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அவருடைய ஏழு பங்குகளின் மதிப்பு பங்குச்சந்தையில் அபரிவிதமாக அதிகரித்து தான் என்றும், இந்த காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு பங்கும் 819 சதவீதம் உயர்ந்ததாகவு, ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் தனது எஃப்பிஓவை விரைவில் வெளியிட இருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதனையடுத்து, கடந்த புதன் கிழமை ஒரே நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் சரசரவென சரிந்து 49 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் மறுப்பு:
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கைக்கு அதானி குழுமம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், எவ்வித ஆதாரமும் இன்றி பொய்யான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் எஃப்பிஓ வெளியீட்டை சீர்குலைப்பதற்காகவே திட்டமிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதானி குழுமம் குற்றச்சாட்டியுள்ளது.
'ஜனவரி 24, 2023 அன்று வெளியிடப்பட்ட ஹின்டன்பர்க் ஆய்வு அறிக்கையைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். குறைந்த பட்சம் எங்களை தொடர்பு கொண்டு உண்மைகளை அறியக்கூட முற்படவில்லை. இது வெறுக்கத்தக்க, ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு. எங்கள் குழுமப் பங்குகளின் விற்பனையை பாதிக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை," எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜனவரி 25ம் தேதி அவரது சொத்து மதிப்பு 9 லட்சத்து 71 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது இரண்டே நாட்களில் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.