அதிசயத்தை நம்புங்கள்! அற்புதமாக வாழுங்கள்! - அனுஜா பதக்
மற்றவர்களின் அறியப்படாத பகுதியை ஆராய்வதற்கு முன் நீ உன்னுடைய அறியப்படாத பகுதியை பற்றி நன்றாக தெரிந்து கொண்டிருக்கவேண்டும்” என்கிறார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கார்ல் யூங் என்கிற உளவியல் மருத்துவர்.
இந்த வரிகள்தான் நோயாளியை குணப்படுத்துவதற்கு அடிப்படை என்கிறார் “அனுஜா பதக்” எனும் ஆழ்துயில் மருத்துவர்.
ஆழ்துயில் மருத்துவம் (hypnotherapy) என்பது உளவியல் மருத்துவத்தைச் சார்ந்தது. இந்த முறையில் மருத்துவர்கள் நோயாளியின் ஆழ்மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அதன் விளைவாக அவர்கள் எண்ணம், உணர்வு மற்றும் நடவடிக்கைகளில் அந்த மாற்றம் பிரதிபலிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துதல், வலியை கட்டுப்படுத்துதல், மனசுழற்சி நோய், சிரங்கு, படை, தூக்கமின்மை, மனச்சோர்வு, அதிர்ச்சி போன்ற பல்வேறு அறிகுறிகளுக்கு இந்த முறையை பயன்படுத்தலாம். மேலும் நோயாளியிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் அந்த அதிர்ச்சியை சமாளிப்பதற்கும் சிகிச்சைக்கும் இந்த ஆழ்துயில் மருத்துவம் உதவுகிறது.
பிளம், கெமிலியா மரங்கள் சூழ்ந்த ஷிலாங் நகரில் பிறந்தவர்தான் அனுஜா. இவர் குழந்தைப்பருவத்தை மிகவும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் கடந்தார். ஆழ்துயில் மருத்துவத்துறையில் சேர்வதற்கு முன், பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். கல்லூரி பேராசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தொழில்நுட்ப எழுத்தாளராகவும் இருந்தார். மோட்டோரோலா, ஆல்காடெல் லியூசென்ட், மற்றும் டெல் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் போன்ற நிறுவனங்களில் இன்ஸ்ட்ரக்ஷனல் டிஸைனராக பணியாற்றினார். சமீபத்தில் டொராடெக்ஸ் எனும் சுவிஸ் எம்பெடெட் கம்பியூட்டிங் கம்பெனியில் சீனியர் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் வல்லுனராக பணியாற்றினார்.
பின் எவ்வாறு ஆழ்துயில் மருத்துவத் துறைக்குள் நுழைந்தார் என்று நாம் வியக்கலாம். இந்த துறையைத்தான் அவர் தனது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் இதில் அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது. ஒரு சாதாரண மனிதன் பயணிக்கும் வாழ்க்கைப் பாதையில்தான் அவரும் செல்ல விரும்பினார். ஆனால் இந்தத் துறை அவரை ஒரு காந்தம் போல ஈர்த்தது. அவரால் இந்தத் துறையை ஒதுக்க முடியவில்லை. மிகுந்த ஆர்வத்தின் காரணமாக எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் இந்தப் பாடத்தை பற்றி ஆழமாக ஆராயத் தொடங்கினார்.
“இது மிகவும் இயற்கையாக என்னிடம் வந்தது. நான் சிறுவயது முதலே எதையும் மேலோட்டமாக பார்க்காமல் கூர்ந்து கவனிக்கும் பண்புடையவள் என்று என் குடும்பத்தினரும் நண்பர்களும் சொல்வார்கள். அந்த பண்புதான் மெல்ல மெல்ல வளர்ந்து இறுதியில் ஒரு ஆழ்துயில் மருத்துவராக நான் வளர உதவியது. என்னுடைய துறைக்கு இந்த பண்பு மிகவும் உறுதுணையாக இருக்கிறது”. என்கிறார் அனுஜா.
ஆழ்துயில் மருத்துவத்துறையை தன்னுடைய வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. இருப்பினும் அந்தத் துறைதான் அவரை தேர்வு செய்தது. அவருடைய அளவுகடந்த ஆர்வமானது இந்தத் துறையை முறையாக மருத்துவ ரீதியாக படிக்கத் தூண்டியது. அது மட்டுமல்லாது மற்ற நிவாரண முறைகளான மெட்டஃபார் தெரபி (Metaphor Therapy), ரேய்கி (Reiki), இஎஃடி (EFT), கிரிஸ்டல் தெரப்பி (Crystal Therapy) ஆகியவற்றையும் கற்றார். ஆர்வத்தின் காரணமாக எதை கற்கத் தொடங்கினாரோ அதுவே அவருடைய வாழ்வாதாரமானது.
அனுஜா தன்னுடைய முதல் கிளையண்டை சந்திக்க நேர்ந்ததே ஒரு விபத்து என்கிறார்.
“என்னுடைய நண்பர் எனக்கு ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றார். நான் முதலில் பயந்தேன். இதில் எனக்கு எந்த முன் அனுபவமும் இல்ல. இருப்பினும் நான் சிகிச்சை அளிக்க சம்மதித்தேன். ஆர்வமாக ஏற்றுக்கொண்டேன். இந்த முதல் அனுபவம்தான் என் வாழ்க்கையையே மாற்றியது” என்கிறார் அனுஜா.
அந்த நபர் ஒரு இளம்பெண். அவர் குழந்தையாக இருந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய திருமண வாழ்க்கையிலும் பல கொடுமைகளுக்கு ஆளானார். மனமுடைந்த நிலையில் வாழ்க்கையில் தோல்வியுற்றவராக வந்து நின்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் மிகவும் தன்னம்பிக்கையுடையவராக மாறினார். எதையும் எதிர்கொள்ளும் துணிவு அவருக்கு ஏற்பட்டது. இதுதான் அனுஜாவை விழிப்படைய செய்தத் தருணம். அந்த பெண்ணுக்கு மட்டுமல்லை அனுஜாவுக்குள்ளும் இந்த சம்பவம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆழ்நிலை மருத்துவத்தை முறையாக பயன்படுத்தினால் அது எவ்வளவு சக்திவாய்ந்தது என்று உணர்ந்தார்.
அதன்பின் அவர் கையாண்ட ஒவ்வொரு நோயாளிகளின் மூலம் அவருக்கு பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைத்தன.
“ஒருவரை சந்தித்தேன். அவர் தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்தது போல உணர்ந்தார். எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியாமல் இருந்ததாக கூறினார். நான் அவருக்கு சிகிச்சை அளித்தேன். பிறகு அவர் மெல்ல தெளிந்தார். அவருடன் சேர்ந்து நானும் என்னுடைய வாழ்க்கையின் பொருளை உணர்ந்தேன். இந்த வாழ்க்கைத் தேடலானது எங்கள் இருவருக்குமே ஒரே மாதிரியான அனுபவத்தை தந்தது. அதாவது கூண்டில் அடைபட்ட ஒரு பறவையை சுதந்திரமாக விடுவிப்பது போல இருந்தது. சிகிச்சை முடிவடைந்து அவர் என் அறையை விட்டு வெளியேற ஆயத்தமானார். அப்பொழுது அவர் கண்களில் ஒரு புன்னகையை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நொடிதான் நான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்த நொடி. இந்த புன்னகைதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். மிகப்பெரிய பரிசு. நான் மனநிறைவடைந்தேன்.” என்கிறார் அனுஜா.
நான் என் மனதிற்கு சரி என்று பட்டதை செய்ய முடிவெடுத்தேன். என்ன ஒரு ஆச்சரியம்! எனக்கு உதவ பலர் முன்வந்தார்கள். என்னை வழிநடத்தினார்கள். என்னுடைய முடிவிற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை.
2006-ம் ஆண்டு அனுஜா உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். அப்பொழுது திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பெங்களூரு செல்லலாம் என்று முடிவெடுத்தார். புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்க எண்ணினார். மிகவும் தைரியமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு. கையில் மூவாயிரம் ரூபாய் பணத்துடனும் மனம் நிறைய நம்பிக்கையுடனும் பெங்களுருவை அடைந்தார்.
“அங்கே நடந்த ஒவ்வொன்றையும் என்னால் நம்பவேமுடியவில்லை. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய நண்பர்கள் பலர் வந்தார்கள். பணம் தந்து உதவினார்கள். தங்குவதற்கு மிகவும் குறைந்த வாடகைக்கு வீடு தேடிக் கொடுத்தார்கள்.”
அன்று நடந்ததை நினைவுகூறும் போது அவருக்கு சட்டென்று நினைவுக்கு வரும் வரிகள் இதோ
“நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் நம்மை சுற்றியுள்ள உலகம் அமையும். நாம் எது நடக்கும் என்று நம்புகிறோமோ அதுதான் நடக்கும். அதே சக்திதான் எதிர்மறை சிந்தனைகளுக்கும் உண்டு. மேலும் நமக்கு மேல் இருக்கும் சக்தியின் மேல் அதீத நம்பிக்கை வைத்து நம் சிந்தனைகளும் நல்லவிதமாக இருக்கும்போது, அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.”
நாம் அதிசயத்தை நம்பும்போது அது கண்டிப்பாக நடக்கும்.
அனுஜாவுடன் நாம் உரையாடும்போது கவனித்தால் அவரது குரலில் ஒரு உற்சாகம் தென்படும். அவர் கண்கள் மிளிரும். அவர் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்கும். இதுவே அவர் தன்னுடைய வாழ்க்கையும் உண்மையான பொருளை அடைந்ததற்கு சாட்சி.
தன்னுடைய வாடிக்கையாளர்களை குறித்து ஆராய்ந்தார் அனுஜா. அவர்களுக்குள் நிறைய எதிர்மறையான எண்ணங்களும் நம்பிக்கைகளும் தென்பட்டது. அதுவே மெல்ல வளர்ந்து பூதாகாரமாக வெடிக்கிறது. அவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இது போன்ற எண்ணங்கள்தான் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவைக்கிறார்.
“இந்த புரிதலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விட்டதற்கு சமம். பழைய எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் தகர்த்தெறியுங்கள். நடந்தது நடந்துவிட்டது. அனைத்தையும் மறந்துவிடுங்கள். இதோ உங்கள் சிறகுகள் தயாராக இருக்கிறது. பறக்கத் தொடங்குங்கள்.”
அதன்பிறகு அவர்களிடம் நடக்கும் மாற்றத்தை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியடையும் என்கிறார் அனுஜா.
அனுஜாவை பொருத்தவரை இந்தியாவில் ஒரு ஆழ்துயில் மருத்துவரிடம் முறையாக துறைசார்ந்த உதவி பெறுவது மிகவும் கடினம். இன்றைய சூழலில் இந்தியர்களிடம் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. இதிலிருந்து விடுபட்டு மக்கள் சீரான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு முழுமையான மருத்துவ சிகிச்சை முறை தேவைப்படுகிறது. இது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை முறையாக எதிர்கொள்வதற்கு உதவும்.
“நான் மக்களிடம் பலதரப்பட்ட பிரச்சனைகள் இருப்பதை கவனித்தேன். பெற்றோர்-குழந்தை இவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், கணவன் - மனைவி உறவுமுறை பிரச்சனைகள், திருமணம் தாண்டிய உறவினால் வரும் பிரச்சனைகள், விவாகரத்துக்கள், தாம்பத்திய உறவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பயம், பணியிடத்தில் உடன் பணிபுரிவோருடனான பிரச்சனைகள், வாழ்க்கை பாதையை சரியாக தேர்ந்தெடுப்பதிலுள்ள பிரச்சனைகள் மற்றும் கற்பழிப்பு, கருச்சிதைவு விபத்து போன்றவற்றால் ஏற்படும் அதிர்ச்சி போன்ற பல பிரச்சனைகளுடன் வருவோரை சந்தித்திருக்கிறேன்”.
இந்த நாட்டில் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது மிகவும் பயங்கரமானதாக உள்ளது.
"நான் இதுபோன்ற பலாத்காரம் செய்யப்பட்ட பலரை அடிக்கடி சந்திக்கிறேன். இதில் பெரும்பாலும் குற்றவாளிகள் அந்த குழந்தையின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அல்லது அவர்கள் வீட்டில் பணிபிரியும் வேலையாட்களாகத்தான் இருக்கிறார்கள்”.
அனுஜா குழந்தைகளுக்கு “பேட் டச்” (Bad Touch) குறித்து கற்பிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது என்று அறிவுறுத்துகிறார்.
அனுஜா ஆழ்துயில் மருத்துவம் மட்டுமல்லாமல் மற்ற பல்வேறு சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை வகுப்புகளும் எடுத்தார். குழந்தைகளுக்கு “பால விகாஸ்” பயிற்சி வகுப்புகள் எடுத்தார். “ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் கீழ் குழந்தைகளுக்கு பல முன்னேற்ற வகுப்புகளை நடந்தினார். “கட்டிங் த டைஸ் தட் பைண்ட்” என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் ஒரு பயிற்சி வருப்பு நடைபெறுகிறது. இந்த வகுப்புகள் “ஃபில்லீஸ் கிரிஸ்டல்” முறையில் எடுக்கப்படுகிறது. இதில் காட்சிகள் மற்றும் சின்னங்கள் மூலமாக ஆழ் மனதில் எப்போதோ பதிந்திருக்கும் பயம் மற்றும் வெறுப்பு உணர்ச்சிகள் தகர்த்து எறியப்படும். வகுப்பில் பங்குபெருவோர்க்குள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் எண்ணங்களில் புதிய பரிமானம் தென்படும். அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றமே அனுஜாவின் மகிழ்ச்சியை அதிகரித்தது. அவர் நிறைய படித்தார். எழுதினார். மிகுந்த கலைத்திறன் படைத்தவராக காணப்பட்டார். மிருகங்களை நேசித்தார். WRRC, CUPA போன்ற அமைப்புகளில் தன்னார்வலராக பணிபுரிந்தார்.
அனுஜா கடின உழைப்பாளி. அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் வாழ்க்கையை மிக அழகாக சரியானபடி சமன்படுத்தி சென்றார்.
“சில சமயம் அதிக வேலை சுமை இருப்பது போல தோன்றும். இருப்பினும் செய்யவேண்டிய வேலைகளை சரியானபடி திட்டமிடுவேன். வேலைகளின் அத்தியாவசியத்தை பொறுத்து அதற்கு முன்னுரிமை அளிப்பேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு முறையாக செய்தாலும், இன்னும் என்னால் செய்து முடிக்க வேண்டிய பல பணிகள் நிலுவையில் இருப்பதுபோல இருக்கும். நான் சிறப்பாக செய்து முடித்த வேலையை பார்த்துகூட நான் திருப்தி அடையவில்லை. இன்னும் பலவற்றை சிறப்பாக செய்யவேண்டும் என்றே தோன்றுகிறது.”
மக்கள் தங்கள் வலியையும் வேதனையையும் போக்க வேண்டும். மன நிம்மதியும் அமைதியையும் பெறவேண்டும். இதற்கு உதவுவதுதான் ஒரு ஆழ்துயில் மருத்துவரின் தலையாய கடமையாகும். இதை வெண்மை நிறத்துடன் அவர் தொடர்புபடுத்துகிறார்.
"வெள்ளை என்பது ஒரு நிறம் மட்டுமல்ல. நீங்கள் உண்மையில் யார் என்பதை அது காட்டுகிறது. வெள்ளை மூலமாகத்தான் மற்ற வண்ணங்கள் அனைத்தும் பிரதிபலிக்கப்படுகின்றன. என்னை பொருத்தவரை என்னிடம் வருபவரை நான் இந்த மனநிலையில்தான் அணுகுவேன்."
அனுஜாவைப் பொருத்தவரை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவருடைய பங்கு இன்றியமையாதது.
“நான் ஒரு மருத்துவராக, மனைவியாக, அன்பான மகளாக எல்லா இடங்களிலும் என்னுடைய பங்கை நான் நிறைவாக செய்கிறேன். இருப்பினும் என்னுடைய தலையாய கடமை என்னவென்றால் “நான் நானாகவே இருப்பது”. அதனால் நான் ஒவ்வொருநாளும் எனக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வேன். அதை எனக்கு பிடித்த வகையில் செலவிடுவேன். நான் என்னை சந்தோஷப்படுத்திக் கொண்டால்தான் என்னால் மற்றவர்ளை சந்தோஷப்படுத்த முடியும். ஏனென்றால் நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் அடுத்தவரிடம் நம்மால் பகிர்ந்துகொள்ள முடியும்.”
இந்தத் துறையில் அவர் நுழைவதற்கு அவரது கணவர் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். ஒரு ஆழ்துயில் மருத்துவராக மக்களின் அடிமனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கையாள்வதற்கு அவருக்கு எங்கிருந்து பலம் வந்தது என்று நான் வியக்கலாம். அந்த பலம் அவரது அம்மாவிடமிருந்து வந்தது.
"என் அப்பா எங்களை பிரிந்து சென்றுவிட்டார். என் அம்மா தனியாக நின்று சம்பாதித்து என்னை வளர்த்தார். நான் அவரிடமிருந்துதான் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டேன்” என்கிறார் அனுஜா.
அனுஜா வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுபவித்து வாழ்கிறார். மற்றவர்களை மனநிறைவடைய செய்வதே தனக்கு மிகுந்த அமைதியையும் நிம்மதியையும் தருவதாக சொல்கிறார்.
“இந்த வாழ்க்கையானது மிகவும் சுவாரஸ்யமானது. ஆச்சரியமானது. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. இந்த சுவாரஸ்யம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. நான் என்னைப்பற்றியே நிறைய தெரிந்துகொள்வதற்கு இந்த நிச்சயமற்ற வாழ்க்கைதான் வழிவகுக்குகிறது.”
ஆக்கம்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா