ரூ.863 கோடி டர்ன்ஓவர் கொண்ட டைல்ஸ் நிறுவனம் உருவாக்கிய அபர்னா ரெட்டி!
1990-களில் தொடங்கப்பட்ட அபர்னா எண்டர்பிரைசஸ் நிறுவனம் இன்று 19 தொழிற்சாலைகளுடன் பல நகரங்களில் சுமார் 19 தொழிற்சாலைகளுடன் இயங்கி வருகிறது.
1980-களில் கர்நாடகாவின் ஹுப்பாளி பகுதியில் டைல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார் எஸ்.எஸ். ரெட்டி. அப்போது அவருக்கு தொழில்முனைவில் ஆர்வம் ஏற்பட்டது. ஆர்வம் இருந்தாலும்கூட குறைவான நிதியே இருந்தது. எந்த வகையான தொழில் தொடங்குவது என்பதில் தெளிவும் இல்லை. எனவே தனக்கு அனுபவம் இருந்த டைல்ஸ் தயாரிப்பையே தேர்வு செய்தார்.
ஆரம்பத்தில் ஹைதராபாத்தில் டைல்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கினார். இந்தியா முழுவதும் உள்ள தயாரிப்பாளர்களிடம் இருந்து டைல்ஸ் வாங்கி ஹைதராபத்தில் வர்த்தகம் செய்தார். பின்னர் தொழிலை விரிவுபடுத்தி ஆந்திரா முழுவதும் செயல்படத் தொடங்கினார். இப்படி 1990-ம் ஆண்டு உருவானதுதான் 'அபர்னா எண்டர்பிரைசஸ்’.
எஸ்எம்பி ஸ்டோரி உடனான உரையாடலில் இரண்டாம் தலைமுறை தொழில் முனைவரான அபர்னா ரெட்டி கூறும்போது,
“என் அப்பா நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார். டைல்ஸ் வர்த்தகம் பற்றிய புரிதல் இருந்ததால் அந்தத் துறையில் செயல்படத் தீர்மானித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம் முதல் தயாரிப்பு வரை
1990-களில் தொழில்முனைவு முயற்சியைத் தொடங்கிய ரெட்டி, டைல்ஸ் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பிறகு ACEPL மூலம் கட்டுமானப் பிரிவில் கால் பதித்தார். 2006ம் ஆண்டு ஹைதராபாத்தில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்எம்சி) தயாரிப்பதற்காக இவரது நிறுவனம் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றை அமைத்தது. பின்னர் 2008-ம் ஆண்டு கட்டுமானத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ரிஜிட் பிவிசி தயாரிப்பையும் இந்நிறுவனம் இணைத்துக்கொண்டது.
இன்று ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு போன்ற நகரங்களில் சுமார் 19 தொழிற்சாலைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 863 கோடி ரூபாய்.
“கட்டுமானப் பொருட்களை முழு வீச்சில் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனத்தை உருவாக்குவதே என்னுடைய அப்பாவின் கனவு. இந்தக் கனவுதான் படிப்படியாக பல்வேறு கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்க உந்துதலளித்தது,” என்றார் அபர்னா.
டைல்ஸ் தயாரிப்பிற்குத் தேவையான 60 சதவீத பொருட்கள் நிறுவனத்திற்குள்ளாகவே தயாரிக்கப்படுவதாக அபர்னா தெரிவிக்கிறார். ஒரு சில பொருட்கள் மட்டும் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு அபர்னா எண்டர்பிரைசஸ் தனது செயல்பாடுகளை மேலும் விரிவடையச் செய்து குவாரி மற்றும் அக்ரிகேட்ஸ் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது. 2017-ம் ஆண்டு விட்ரிஃபைட் டைல்ஸ் தயாரிப்பும் தொடங்கப்பட்டது.
அபர்னா எண்டர்பிரைசஸ் நாடு முழுவதும் டைல்ஸ் விற்பனை செய்து வருகிறது. ஹைதராபாத்தில் சில்லறை வர்த்தக கடையும் செயல்படுகிறது. இந்நிறுவனம் மற்ற ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
சவால்கள் மற்றும் போட்டி
பொருளாதாரச் சூழல், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசாங்கம் சரியான நேரத்தில் முதலீடு செய்தல், எளிதாக தொழில் புரிவதற்கான மேம்பட்ட சூழல் போன்ற நடவடிக்கைகளை இந்நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது என்கிறார் அபர்னா. அத்துடன் அமைப்புசாரா துறையின் வாயிலாகவும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
“கஜாரியா டைல்ஸ், சோமானி செராமிக்ஸ், NITCO லிமிடெட் போன்ற பெரியளவில் செயல்படும் நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டாலும், 50 சதவீத அமைப்புசாரா டைல்ஸ் சந்தை செயல்படுகிறது. இதை எதிர்கொள்வது சவாலானதாக உள்ளது,” என்கிறார் அபர்னா.
சந்தையில் நிலவும் போட்டி குறித்து அபர்னா பகிர்ந்துகொண்டபோது டைல்ஸ் பிரிவைப் பொறுத்தவரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிசைன் மாறுபடும் என்று குறிப்பிட்டார். வாடிக்கையாளர்கள் வாங்கும் முறையைத் தொடர்ந்து ஆராய்ந்து, சந்தையில் அறிமுகமாகும் புதிய டிசைன்களையும் இந்நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
அபர்னா கூறும்போது, “இந்திய வாடிக்கையாளர்கள் வெளிர் நிறங்களையே விரும்புகின்றனர். இவ்வளவு அதிகமான மக்கள்தொகையில் வெறும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே பிரகாசமான வண்ணங்கள் கொண்ட டைல்ஸ்களை விரும்புகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறங்களில் புதிய டிசைன்களை உருவாக்குவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது,” என்றார்.
எதிர்காலத் திட்டங்கள்
உள்கட்டமைப்பில் முதலீடு, ஸ்மார்ட் நகரங்களின் வளர்ச்சி, 2024-ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கு, ரியல் எஸ்டேட் பிரிவில் தனியார் துறை முதலீடு போன்ற சாதகமான அம்சங்கள் நிலவுவதால் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்று அபர்னா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
“எதிர்காலத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் பரவலாக பல்வேறு இடங்களில் செயல்படுதல், சரியான தயாரிப்புகள், மனிதவளம், செயல்முறைகள் தானியங்கிமயமாதல், டிஜிட்டல் செயல்பாடுகள் போன்ற அம்சங்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறோம்,” என்றார் அபர்னா.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா