விவசாயிகள் தற்கொலையின் தாக்கம்; லாபகர மகசூலுக்கு டிஜிட்டல் வழியில் உதவும் இரு நண்பர்களின் ‘பாரத் அக்ரி’
வலுவான விவசாய பின்னணியைக் கொண்ட சாய் கோல், வளரும் பருவத்தில் விவசாயிகளின் தற்கொலைச் செய்திகளை கேட்டே வளர்ந்தவர். அவரது கிராமத்து விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தத் தொடங்கி இன்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக 'பாரத்அக்ரி' எனும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வலுவான விவசாயப் பின்னணியைக் கொண்ட சாய் கோல், வளரும் பருவத்தில் விவசாயிகளின் தற்கொலைச் செய்திகளை கேட்டே வளர்ந்துள்ளார். பின்னாளில் பெரும் கடன்கள் மற்றும் பயிர் இழப்பினால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளால், அவரது ஊர் நாடெறிய தொடங்கியது.
பள்ளிப் பருவத்திலிருந்தே ஏற்பட்ட தாக்கம், பட்டப்படிப்பு முடித்து பெரும் நிறுவனத்தில் பணிப்புரிய தொடங்கிய போதும் மறையவில்லை. அவரது கிராமத்து விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், இன்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக 'பாரத்அக்ரி' ‘
' எனும் ஆலோசனை வழங்கும் செயலி மற்றும் இணையதளத்தை நடத்திவருகிறார்.அவரும், அவரது கல்லுாரி நண்பரான சித்தார்த் டயலானியும் இணைந்து தொடங்கிய பாரத் அக்ரி, மாறிவரும் வானிலைக்கு ஏற்றவாறு விவசாயத்தை லாப நோக்கில் எப்படி அமைத்து கொள்வதை ஏ டு இசட் வழிகாட்டுகிறது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரத் அக்ரி இணையதளத்தில் 5 மில்லியன் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 1.5 மில்லியன் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வடிவத்தில் செயலியினை பயன்படுத்தி ஆலோசனையைப் பெறுகிறார்கள். பாரத்அக்ரி தொடங்கப்பட்ட ஆண்டிலே உபர்பிட்ச் போட்டியில் வென்று, உபர் நிறுவனத்திடமிருந்து ரூ.35 லட்சத்தை முதலீடாக பெற்றது. இன்றோ முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ4.5 கோடி நிதி திரட்டியுள்ளது.
2020ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்குள் குறிப்பிடத்தக்க 30 நபர்களில் ஒருவராக பாரத்அக்ரியின் நிறுவனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் விவசாயத்தில் தகவல் அடிப்படையிலான சேவையைப் பணமாக்க முடிந்த இந்தியாவின் ஒரே நிறுவனம் இதுவாகும்.
பாரத்அக்ரிக்கான விதை விழுந்தது எப்படி?
"ஆர்வி பகுதியில் என் மாமாவிற்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. பருத்தி, சோயாபீன், கொண்டக் கடலை ஆகிய பயிர்களை பயிரிட்டு வந்தார். பள்ளிப் பருவத்தில் ஒவ்வொரு வார இறுதிக்கும் மாமா வீட்டுக்கு சென்று விடுவோம். அந்த சமயத்தில் அப்பகுதியில், விவசாயிகள் தற்கொலை என்பது அடிக்கடி நிகழும் சாதரணமான விஷயமாகயிருந்தது. ஏன் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்? என்று மாமாவிடம் கேட்டுக் கொண்டேயிருப்பேன்," என்ற சாயிற்கு அப்போதே விவசாயிகளின்நிலை குறித்த எண்ணங்கள் தோன்றியுள்ளன.
விவசாயிகள் தற்கொலை சம்பவம் சாயின் துாக்கத்தினை கலைத்தன. அவருடயை மாமா அளித்த பதில்களும், அவருக்கு திருப்திகரமானதாக இல்லை. அதற்கான காரணத்தை அவரே கண்டறிய முற்பட்டுள்ளார். விவசாயிகளிடையே கல்வியின்மை மற்றும் காலாவதியான பயிர் முறைகளைக் கடைப்பிடிப்பது போன்ற காரணங்களால் விவசாயிகள் நட்டத்தை சந்தித்து அவர்களது வளர்ச்சி தடைப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார்.
இதற்கிடையில், பள்ளிப்படிப்பை முடித்த சாய், சென்னைக்கு சென்று ஐஐடி மெட்ராஸில் தயாரிப்பு வடிவமைப்பில் பிடெக் பட்டப் படிப்பை தொடங்கினார். குடும்பத்தை விட்டு பிரிந்து பல மைல் தாண்டி இருந்தாலும், ஆர்வியில் உள்ள அவரது குடும்பத்தின் பண்ணையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டே வந்துள்ளார். காலங்கள் ஓடினாலும் நிலைமை சரியாகமலே இருந்தது. ஒவ்வொரு அறுவடைக் காலத்திலும் பணத்தை இழந்து கொண்டே இருந்தது சாயை கவலைக்குள் ஆழ்தியது. வருமானத்திற்கு விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் மற்ற விவசாயிகளின் நிலையைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார்.
நண்பர்களின் கூட்டுமுயற்சி, தரவுகளின் அடிப்படையில் விவசாயம்!
இந்த சமயத்தில் தான், கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் பிரிவில் படித்துவந்த சித்தார்த் டயலானியை சந்தித்தார். அவரது குடும்பத்தினரால் லாபகரமான விவசாய அமைப்பைக் கொண்டிருக்க முடியவில்லை என்றும் சீசனுக்கு சீசன் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சித்தார்த்திடம் பகிர்ந்துள்ளார். சாயின் வார்த்தைகள் வேளாண் துறையில் நீடித்துள்ள சிக்கல்களை ஆழமாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை சித்தார்த்துக்கு துாண்டியது. இருவரும், சென்னைக்கு அருகில் உள்ள விவசாயிகளைச் சந்திக்கத் தொடங்கினர்.
மேலும், விவசாயம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் உள்ள பல பேராசிரியர்களிடம் பேசியுள்ளனர். இந்த ஆர்வத்தின் நீட்சியால் சித்தார்த் பயோடெக்னாலஜி துறைக்கு மாறி படிக்கத் தொடங்கியுள்ளார். சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஒரு திட்டத்தில் பணிபுரியும் போது, மண் ஊட்டச்சத்து, தாவர நோயியல், தாவர பூச்சியியல் மற்றும் பல வேளாண் செயல்முறையின் வெவ்வேறு அம்சங்களை இருவரும் புரிந்து கொண்டனர். வேளாண்மையில் நீடித்துக் கொண்டிருந்த சிக்கல்கள் தொடர்பான ஆராய்ச்சி ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்த போதே, இருவரும் பட்டப்படிப்பை நிறைவுச் செய்துள்ளனர்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு சாய் ஐடிசியில் கிடைத்த வேலையில் இணைந்தார். அதே நேரத்தில் சித்தார்த் வேளாண்மையில் ஒரு படிப்பை மேற்கொள்வதற்காக இஸ்ரேலுக்கு சென்றார். இஸ்ரேலிலிருந்து அவர் திரும்பியதும், சாய் அவரது வேலையை விட்டுவிட்டு, இருவரும் புனேவுக்கு குடிப்பெயர்ந்து அங்குள்ள பண்ணையில் ஒரு வருடம் அவர்களது யோசனைகளை முயற்சி செய்தனர்.
சோதனையின் முடிவில், 2017ம்ஆண்டு புனேவில் இருவரும் இணைந்து, விவசாயிகளுக்கு முறையான தீர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் 'பாரத் அக்ரி' எனும் செயலியை தொடங்கினர். விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பாரத் அக்ரி செயலியானது, விவசாயிகள் என்ன வளர்க்க வேண்டும்?, எப்படி வளர்க்க வேண்டும்?, எப்போது தண்ணீர் செலுத்த வேண்டும்?, எப்போது உரம் வழங்க வேண்டும்? போன்ற முக்கியமான உள்ளீடுகளை வழங்கி, உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
"விவசாய முதலீடுகள், முதலீட்டின் லாபம், வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்பதை கற்றுக் கொடுத்து விவசாயிகளை வழிநடத்த ஆலோசகர்கள் அநேகர் இருந்தாலும், விவசாயத்தில் உள்ள அபாயங்கள் ஒருபோதும் கணக்கிடப்படுவதில்லை. ஒரு விவசாயி அவரது பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் அல்லது எங்கு செலவழிக்கக் கூடாது என்று வழிநடத்த யவருமில்லை. இதற்கு ஒரு பெரிய உதாரணத்தை என் குடும்பத்திலேயே பார்த்தேன். லாபம் அளிக்கவிட்டாலும் தொடந்து அதே பயிரினை பயிரிட்டுவந்தனர்."
விவசாயம் என்பது ஒரு சிக்கலான விஞ்ஞானம், சரியான நேரத்தில் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைப்பது விவசாயிகளால் சாத்தியமில்லாதது. அதனால், விவசாயிகளிடமிருந்து தரவைச் சேகரித்து அவர்களுக்குத் தேவையான செயல்கள் குறித்த தகவல்களை வழங்கும் செயலியை தொடங்கினோம்.
"ஆரம்ப கட்டத்தில், எந்தவித பிராண்டின் பெயரையும் குறிப்பிடாமல் ரசாயனங்களின் பெயரை பரிந்துரைத்தோம். ஒரு வாரத்திற்குப் பிறகு, நாங்கள் விவசாயிகளைச் சந்தித்தபோது, அவரோ அல்லது கடைக்காரரோ ரசாயனங்களின் பெயரைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை கூறினர். பிறகு, மொழி உட்பட செயலியில் சில மாற்றங்களை செய்தோம்," என்றார் சாய்.
1.5 விவசாயிகளை பயனாளர்கள், 4.3 மில்லியன் டாலர் நிதி!
"ஒவ்வொரு பயிர் நிலையிலும் ஆலோசனை பெற விவசாயி ஒரு நிபுணரை தொடர்பு கொள்ளலாம். பயிர் தொடர்பான பிரச்சனைகளை விவசாய மருத்துவரிடம் பேசி தீர்வு காண முடியும். வானிலை அடிப்படையிலான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். அதாவது,
"ஒரு விவசாயி அவர் பயிரிட போகும் பயிரின் தகவல்களை உள்ளீடு செய்து, பயிர் சார்ந்த தகவல்களையும், மாறிவரும் வானிலையின் அடிப்படையில் பயிர் குறித்த நுண்ணறிவுகளை பெற்று கொள்ளலாம்," என்ற சாய் பாரத்அக்ரி அதன் இணையதளம் மற்றும் செயலி மேற்கூறிய சேவைகளை வழங்குவதாக தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கிவருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில விவசாயிகள் அதிகமானோர் பாரத் அக்ரியின் பயனாளர்களாக உள்ளனர். அதன் பயனாளர்களில் 30 சதவீதம் பேர் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மேலும், விவசாயிகளுக்கு எளிதில் விளங்கும வகையில் செயலியானது, மராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிகளில் இயங்குகிறது. விரைவில் குஜராத்தி மற்றும் போஜ்புரி மொழியினையும் இணைக்கவுள்ளனர். விவசாயிகள் அவர்களுக்கு வழங்கப்படும் தீர்வுகளை வீடியோக்கள், ஆடியோ அல்லது எழுத்து வடிவில் பெறுகிறார்கள். செயலியின் வழியே அவர்களுக்கு வேண்டிய தகவல்களை பெறலாம். வளர்ந்துவரும் டெக்னாலஜிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப்பிலும் விவசாயிகள் ஆலோசனைகளை பெற்று கொள்ள முடியும். கடந்த ஆண்டு, ஆர்காம் வென்ச்சர்ஸ் தலைமையிலான தொடர் ஏ சுற்றில் 4.3 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
"இணையதளத்தில் பண்ணையின் ஒருங்கிணைப்பாளர்களின் தகவல்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். இதனால் விவசாய நிலத்தின் வானிலை தகவலை அவர்களுக்கு வழங்க முடியும். அதுமட்டுமின்றி, பண்ணையின் செயற்கைக்கோள் மேப்பிங்கில் தொடர்ந்து கண்கானித்து வருவதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன் நடவடிக்கையினை எடுக்க பரிந்துரைக்கிறோம்.
விவசாயிகள் பாரத் அக்ரி செயலியின் 30 நாள் இலவச சோதனையைப் பெற்றுக் கொண்டு, அதற்கான கட்டணம் பின் பயனாளர்களாக மாறும் போது வசூலிக்கப்படுகிறது. இதுவரை 5 மில்லியன் விவசாயிகள் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.5 மில்லியன் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வடிவத்தில் செயலியினை பயன்படுத்தி ஆலோசனையைப் பெறுகிறார்கள்.
10,000க்கும் அதிகமான ஸ்டாக் கீப்பிங் யூனிட்கள், 100க்கும் அதிகமான சந்தை பங்குதாரர்களை கொண்டுள்ளோம். பாரத் அக்ரியானது விவசாயிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
”ஒரு விவசாயி 100% ஆலோசனையைப் பின்பற்றினால், அவரது செலவில் 40 முதல் 50% வரை சேமிக்க முடியும். ஏனெனில், சரியான தரம், பயன்படுத்த வேண்டிய பொருட்களின் அளவு, அவற்றை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும், வானிலையைப் பொறுத்து எவ்வாறு வேளாணை மேம்படுத்துவது வரை அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி விவசாயிகளை வழிநடத்துகிறோம்.”
இன்றைய இணையத்தின் உதவியால் எழும் சந்தேகங்களுக்கு எல்லாம் இலவசமாக விடைத் தெரிந்துவிடுவதால், முதல் மூன்று ஆண்டுகள் பணம் கொடுத்து பாரத்அக்ரியின் சேவையை பெறுவது விவசாயிகளுக்கு கடினமாக தெரியும். ஆனால், அவர்கள் எங்களது ஆலோசனைகளை பின்பற்றத் தொடங்கி பலனை அனுபவித்துவிட்டர் எனில், பணம் செலுத்த தயங்கமாட்டார்கள், என்று அவர் கூறுகிறார்.
தொகுப்பு: ஜெயஸ்ரீ
ஏழு மாநிலங்களில் விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ‘ரகுநாதன் நாராயணன்’