ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் முதலீடு செய்துள்ள யோகா நிறுவனம்!
இந்தியாவைச் சேர்ந்த ஆரோக்கியம் மற்றும் யோகா ஸ்டார்ட் அப்பான ’சர்வா’, அண்மைக் காலங்களில், ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லோபஸ் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் சாஹித் கபூர் மற்றும் மலைக்கா அரோரா உள்ளிட்டோர் ஆதரவையும் முதலீட்டையும் பெற்றுள்ளது.
உடல்நலம் மற்றும் யோகா ஸ்டார்ட் அப் நிறுவனம் சர்வா (SARVA). ஏற்கனவே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில், தென்னிந்தியாவில் இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆதரவையும், முதலீட்டையும் தற்போது பெற்றுள்ளது.
”மலைக்கா மற்றும் சர்வேஷ் சசியின் ’சர்வா’ செயல்பாடுகள் மற்றும் திவா யோகாவை நெருக்கமாக கவனித்து வருகிறேன். ஒட்டுமொத்த நோக்கிலான உடல்நலம் தொடர்பான எங்கள் சிந்தனை முறை ஒத்துப்போவது உற்சாகம் அளிக்கிறது,” என்று திரைப்பட இயக்குனரும், ஐநா பெண்கள் திட்ட ஆதரவாளருமான ஐஸ்வர்யா தனுஷ் கூறுகிறார்.
ஐஸ்வர்யா தனுஷ், ஐக்கிய நாடுகள் சபையின் பாலின சமத்துவ மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தூதர் என்ற முறையில், பெண்களுக்கான உடல் தகுதி மற்றும் மன நலனை வலியுறுத்தி வருகிறார். இந்த பொறுப்பு, சர்வாவின் திவா யோகாவுடன் அவர் கைகோர்ப்பதற்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இந்த பிராண்டை பிரபலமாக்க அவர் உதவுவார்.
“இருவருக்குமாக பணியாற்றுவது உற்சாகம் அளிக்கிறது. இந்த கூட்டு மூலம் தென்னிந்தியாவில், சர்வா மற்றும் திவா யோகாவை பிரபலமாக்குவேன். அமைதி மற்றும் ஒட்டுமொத்த நோக்கிலான உடல் நலன் அவசியத்தை உலகம் அறிய வேண்டும். இந்த இலக்கிற்கான எனது பங்களிப்பாக இது அமையும்,” என்று ஐஸ்வர்யா தனுஷ் கூறுகிறார்.
“உடல் நலத்தில் ஐஸ்வர்யாவின் ஈடுபாடு மற்றும் தெற்கில் அவருக்கு இருக்கும் பிரபலம், திவா யோகாவின் விரிவாக்க திட்டத்திற்கு உதவும். ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நோக்கிலான வாழ்வியல் என்று வரும் போது, நாங்கள் மூவரும் ஒரே பார்வையை கொண்டுள்ளோம். எங்கள் கூட்டு முயற்சி சர்வா மற்றும் திவா யோகாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன்,” என்று மலைக்கா அரோரா கூறுகிறார்.
2016ல், யோகா ஆர்வம் கொண்ட தொழில் முனைவரான சர்வேஷ் சஷியால் துவக்கப்பட்ட சர்வா, யோகா, மன அமைதி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சேவைகளை நேரடியாக மற்றும் டிஜிட்டல் மூலம் வழங்கி வருகிறது. அண்மைக் காலங்களில் நிறுவனம், ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லோபஸ் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் சாஹித் கபூர் மற்றும் மிரா கபூர் உள்ளிட்டோர் ஆதரவை பெற்றுள்ளது.
”ஒட்டுமொத்த வர்த்தக வளர்ச்சியை பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாக சர்வாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. வருவாயில் 12 மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறோம்,” என்கிறார் சர்வேஷ் சஷி.
ஆங்கிலத்தில்: சுத்ரிசின்ஹா கோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்