இந்தியாவின் புதிய லோ காஸ்ட் விமான சேவை 'Akasa Air' மாத இறுதியில் விண்ணில் பறக்கும்: சிறப்பம்சங்கள் என்ன?
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் அகாசா ஏர் நிறுவனம் மொத்தம் 72 விமானங்களை ஆர்டர் செய்திருந்த நிலையில் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் டெலிவரி கிடைத்துள்ளது.
இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனமான 'Akasa Air' 'ஆகாசா ஏர்’ இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் விமான சேவையை தொடங்க இருக்கிறது.
இந்தியாவின் பிரபல கோடீஸ்வரரும் பங்கு சந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் Akasa Air நிறுவனம் மொத்தம் 72 விமானங்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், முதல் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் டெலிவரி கிடைத்துள்ளது. வணிக ரீதியாக செயல்படத் தொடங்குவதற்கு, DGCA ஏர் ஆப்பரேடர் அனுமதியை பெற்று மாத இறுதியில் விண்ணில் பறக்க உள்ளது.
Akasa Air ஏர் – நோக்கம்
- விமான சேவை என்பது குறிப்பிட்ட பிரினருக்கானது என்றில்லாமல் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.
- மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஏர்லைன் நிறுவனமாக செயல்படவேண்டும்.
இவையே ஆகாசா ஏர் தனது முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும் கலாச்சார அடிப்படையிலும் எந்தவித பாகுபாடுமில்லாமல் ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான விமான சேவை கிடைக்கவேண்டும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி ஆகாசா ஏர் குறைந்த கட்டணத்தில் சேவையளிக்க உள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் தங்களது கனவையும் இலக்கையும் எட்டவேண்டும். அதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. வான்வழி பயணம் எட்டாக்கனியாக இல்லாமல் எளிதாக அணுகும்படி இருந்தால் எல்லோரின் கனவும் நனவாகும். இதை Akasa Air சாத்தியப்படுத்த முற்படுகிறது.
Akasa Air - லோகோ
வானத்தில் நாம் பார்க்கும் கூறுகளைக் கொண்டு இதன் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம், வானில் சுதந்திரமாக சிரமமின்றி சிறகுகளை விரித்துப் பறக்கும் பறவை, விமான இறக்கையின் மீதான நம்பகத்தன்மை போன்ற அம்சங்களால் உந்தப்பட்டு Akasa Air லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
Akasa Air – தனித்துவமான அம்சங்கள்
மிகச்சிறப்பான வாடிக்கையாளர் சேவை, நம்பகமான செயல்பாடுகள், குறைந்த கட்டணம், ஊழியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறை, நவீன தொழில்நுட்பம் போன்றவவை ஆகாசா ஏர் நிறுவனத்தின் தனித்துவமான அம்சங்கள் எனலாம்.
கட்டணம்: ஆகாசா ஏர் அதன் எரிபொருள் செலவுகளையும் நிர்வாக செலவுகளையும் திறம்பட நிர்வகிக்கும் வகையில் செயல்பாடுகளை திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையளிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.
ஊழியர்கள்: ஊழியர்கள் மேல் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் போக்கை இந்நிறுவனம் கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளது. ஊழியர்களே நிறுவனத்தின் அடையாளமாகவும் நிறுவனத்தையும் மக்களையும் இணைக்கும் பாலமாகவும் இருப்பார்கள் என்பதால் ஊழியர்களை மையப்படுத்தி செயல்பட திட்டமிட்டுள்ளது.
நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள்
வினய் துபே – நிறுவனர், நிர்வாக இயக்குநர், சிஇஓ; பெல்சன் கோடின்ஹோ – இணை நிறுவனர் மற்றும் Chief Marketing & Experience Officer; அன்குர் கோயல் – Chief Financial Officer; பிரவீன் பி ஐயர் – இணை நிறுவனர் மற்றும் Chief Commercial Officer; பவின் ஜோஷி – இணை நிறுவனர் மற்றும் SVP Leasing & Procurement; நீலு கத்ரி – இணை நிறுவனர் மற்றும் SVP Corporate Affairs & Operations Planning; ப்ரியா மெஹ்ரா – General Counsel & Chief Compliance Officer; ஆனந்த் ஸ்ரீனிவாசன் – இணை நிறுவனர் மற்றும் Chief Information Officer ஆகியோர் ’ஆகாசா ஏர்’ நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே நிறுவியுள்ள ஆகாசா ஏர் நிறுவனத்தில் ஏற்கெனவே பைலட், கேபின் அட்டெண்டண்ட், பொறியாளர்கள் போன்றோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியாளர்களின் சீருடை
Akasa Air சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்நிறுவனம் அதன் ஊழியகர்களுக்கான சீருடையை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு உருவாக்கியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
பணியாளர்கள் சௌகரியமான உணர்வுடன் வேலை செய்யவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பேண்ட், பிளேசர்கள், காலணிகள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் ஊழியர்களை மையமாகக் கொண்டு செயல்பட திட்டமிட்டிருப்பதையும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டிருப்பதையும் வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் செயல்படுத்துகிறது என்பதை இதுபோன்ற முன்னெடுப்புகள் நிரூபிக்கின்றன.