24ஆயிரம் சதுர அடியில் சென்னையில் டெலிவரி மையம் தொடங்கியது அமேசான்!
சென்னை விருகம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த டெலிவரி மையம் மூலம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை அமேசான் நிறுவனம் வழங்கவுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிவரி மையம் கடந்த வியாழன் அன்று (22 ஆகஸ்ட்) சென்னையில் திறக்கப்பட்டது. விருகம்பாக்கத்தில் 24, 000 சதுர அடியில் இந்த மையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் டெலிவரியை விரைவுபடுத்த முடியும் என அமேசான் நிறுவனத்தின் இயக்குநர் பிரகாஷ் ரோசலானி தெரிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தவிர நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் ஆகிய நகரங்களிலும் டெலிவரி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 120க்கும் மேற்பட்ட டெலிவரி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து இதுபோல டெலிவரி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
டிஎல்எப் ஐடி பூங்கா பின் கோடு பகுதியில் செயல்படும் டெலிவரி மையத்தை ஜமுனா ராணி நடத்தி வருகிறார். ஐடி துறையில் பணிபுரிந்தவர் திருமணத்துக்கு பிறகு சொந்தமான தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் காரணமாக இந்த மையத்தை நடத்தி வருகிறார்.

அமேசான் நிறுவனத்துடன் இணைந்து இந்த மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பின் கோடு பகுதிகான பார்சல்கள் இந்த மையத்துக்கு வரும். அதனை பிரித்து டெலிவரி செய்யும் பணியை நாங்கள் செய்வோம் என்று கூறினார்.
என் கணவர் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இருந்ததால் ஆரம்பகால சவால்களை எளிதாக சந்திக்க முடிந்தது. மேலும் இந்த மையத்தில் பெண்கள் மட்டுமே பார்சல்களை டெலிவரி செய்கிறார்கள்.
ஆரம்பத்தில் 2 பெண்களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது 12 பெண்களுடன் செயல்பட்டு வருகிறது. 2016 ஆண்டு தொடங்கப்பட்டதை விட தற்போது ஏழு மடங்கு அளவுக்கு பார்சல்களை கையாளுகிறோம் என நிகழ்ச்சியில் கூறினார் ஜமுனா ராணி.
அதேபோல ‘I have a space’ என்னும் திட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட கடைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இனி அமேசான் டெலிவரி செய்யும் என பிரகாஷ் கூறினார்.
தமிழகத்தில் அமேசான் ஆறு பேக்கிங் மையங்கள், 120 டெலிவரி மையங்கள், 1400 I have Space மையங்கள் மற்றும் 32,000 விற்பனையாளர்கள் கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
தற்போது 1200க்கும் மேற்பட்ட பின்கோடுகளில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் எங்களால் டெலிவரி செய்ய முடியும். இந்த எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்தி வருகிறோம். மொத்த ரீடெய்ல் பிரிவில் 3 சதவீதம் மட்டுமே இ-காமர்ஸ் ஆகும். அதனால் வளர்ச்சிக்கு இன்னும் அதிக வாய்ப்பு இருக்கிறது, என்றார்.
தமிழகம் எங்களுக்கு முக்கியமான மாநிலமாகும். இங்கு டெக்னாலஜி மற்றும் கட்டுமானத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம் என குறிப்பிட்டார்.
இந்த மையத்தை தி.நகர் இணை கமிஷனர் அசோக் குமார் தொடங்கி வைத்தார்.