அமெரிக்கா டு ஆயுர்வேதா: பாரம்பரியத்தை கையில் எடுத்த அர்ஜுன் வைத்யா!
அமெரிக்காவில் லட்சங்களில் சம்பாதித்த அர்ஜுன் வைத்தியா, குடும்பப் பாரம்பரிய ஆயுர்வேத மருந்து தொழிலை கையிலெடுத்து நாடு முழுதும் பிரபலப்படுத்திய கதை!
மிகவும் சிறு வயதிலேயே அர்ஜுன் வைத்தியாவிற்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டது. 14 வருடங்கள் கடினமான ஆயுர்வேத சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் குணமானார். இதன் காரணமாக சிறு வயதிலேயே சமஸ்கிரிதத்தில் எழுதியிருந்த சுவடிகளைப் படிப்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
"எனது தாத்தா வைத்திருந்த ஆயுர்வேத நிலையத்தில் தினமும் 350 நோயாளிகள் வரை சந்திப்பார். எங்கள் முன்னோர்களின் 150 வருட பாரம்பரியம் மிக்க ஆயுர்வேத சிகிச்சைகளை அவர் முன்னெடுத்துச் சென்றார். நானும் அதில் இணையவேண்டும் என்று விரும்பினார்,” என்றார் வைத்தியா.
வணிகத்திற்கு உதவ வேண்டும் என உயிரியல் துறையை தேர்ந்தெடுக்க அவரது தாத்தா கூறியுள்ளார். ஆனால் அர்ஜுன், சர்வதேச உறவுமுறை மற்றும் பொருளாதாரத்தில் இளநிலை படிப்பை பிரவுன் பல்கலையில் முடித்தார். ஆனாலும் விதி அவரை விடுவதாக இல்லை.
அமெரிக்காவில் எல் கேப்பிட்டல் ஆசியா என்ற நிறுவனத்தில் பணியாற்றத் துவங்கியுள்ளார் அர்ஜுன். இரண்டு வருடங்கள் அங்கு வேலை பார்த்த பின்பு 2013ல் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
அவர் வந்த 3 மாதங்களில் அர்ஜுனின் தாத்தா இறந்துவிட, அவரோடு தனது உரையாடல்களை நினைத்துப் பார்த்துள்ளார். குடும்பப் பாரம்பரியப் பணியை தொடரவேண்டும் என அவரது தாத்தா கூறியது நினைவில் வந்துள்ளது.
எனவே அக்டோபர் 2016ல் தனது வேலையை விட்டுவிட்டு, தாத்தா வழியில் அவரது விருப்பத்தை நிறைவேற்ற இறங்கியுள்ளார் அர்ஜுன்.
"பிரான்க்கைடிஸ் (மூச்சுக்குழாய் அழற்சி) காரணமாக நான் சிரமப்பட்ட பொழுதும், பின்னர் அது குணமான பொழுதும் இந்த அறிவியல் சார்ந்தே எனது எண்ணங்கள் இருந்தன. ஆனால் அதனை வேலையாக எடுக்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. எனது தாத்தா இறந்தபின்பு, ஆயுர்வேத சந்தையில் இருந்த வெற்றிடம் எனக்கு புலப்பட்டது."
2016ல் தனது தாத்தாவின் வழியில் Dr.Vaidya's டாக்டர் வைத்தியா'ஸ் நிறுவனத்தை நிறுவியுள்ளார் அர்ஜுன். முதலீடாக தனது சேமிப்பை பயன்படுத்தியுள்ளார்.
யுவர்ஸ்டோரி அர்ஜுன் வைத்தியா உடன் நடத்திய நேர்காணலின் சில பகுதிகள்:
டாக்டர் வைத்யா'ஸ் என்பது என்ன ?
அர்ஜுன் வைத்யா: இது துவங்கி 3 வருடங்கள் ஆகின்ற ஆயுர்வேத நிறுவனம். நமது பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளை இன்றைய நவீன வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் கொண்டு சேர்க்கும் லட்சியம் கொண்ட ஒரு நிறுவனம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் பரம்பரை பரம்பரையாக பல ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் குணப்படுத்த பயன்பட்ட மூலிகை சூத்திரங்கள் கொண்டு உருவாகியுள்ளன.
எனது தாத்தாவிற்கு மும்பையில் ஒரு ஆயுர்வேத நிலையம் இருந்தது. தினமும் அங்கு 100 பேருக்கு மேல் வந்து ஆயுர்வேத மருந்துகள் வாங்கிச் செல்வார்கள். ஆனால் அதைத்தாண்டி சந்தையில் தனது மருந்துகளை விற்கும் பணியில் அவர் இறங்கவில்லை.
டாக்டர் வைத்யா'ஸ் மூலம் சில்லறை வணிக மாதிரியை ஆன்லைன் விற்பனை மூலம் பின்பற்றினேன்.
உங்கள் பொருட்களின் எஸ்கேயூ என்ன, அவற்றுக்கான மூலப்பொருட்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
அர்ஜுன் வைத்யா: தற்பொழுது எங்களிடம் 120 மூலிகை சூத்திரங்கள் மூலம் உருவான 42 எஸ்கேயூக்கள் உள்ளன. "LIVitup" "சகாஸ்" போன்ற பொருட்கள் மூலம் ஆரோக்கியம் மற்றும் FMCG துறையிலும் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளோம். இவை மட்டுமன்றி எங்கள் நிறுவனத்தில் ஆர்த்தரைடிஸ், நீரழிவு நோய், ஆஸ்துமா, கலவியில் இன்பம், எடை இழப்பு, இருமல், தோல் என அனைத்திற்கும் தொடர்பான மருந்துகள் உள்ளன.
இன்று எங்களிடம் எப் டி ஏ அனுமதி கொண்ட ஆயுர்வேத மருந்துக் காரணிகள் உள்ளன. அனைத்துப் பொருட்களும் சில்வாசவில் உள்ள எங்கள் தயாரிப்பு நிலையத்தில் தயாராகிறது. அந்த தயாரிப்பு நிலையத்திற்கு ISO 9001:2015 தரச்சான்றிதழ், GMP தரச்சான்றிதழ், US FDA பதிவு என அனைத்தும் பெற்றுள்ளோம்.
மேலும் எங்கள் மூலப்பொருட்களை இந்தியாவில் இருந்தே பெறுகிறோம். நெல்லிக்காய் மத்தியபிரதேஷில் இருந்தும், கேசர் காஷ்மீரில் இருந்தும் பெறுகிறோம்.
இவர்கள் பொருளின் விற்பனை தங்கள் வலைத்தளம் மூலம், மற்றும் அமேசான், நாயிகா, நெட்மேட்ஸ், கோகிய், மெட்லைப், 1 எம்ஜி போன்ற தளங்களிலும், 500 மேற்பட்ட அங்காடிகளிலும் நடக்கறது.
இன்று இந்தியாவில் டாக்டர் வைத்யா'ஸ் இந்திய ஆயுர்வேத சந்தையில் ஒரு பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. அதன் சொந்த வலைதளத்தில் ஒரு நாளில் 1000 திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வணிகம் நடைபெறுகிறது. வரும் காலங்களில் ஆப்லைனிலும், உலக சந்தையிலும் ஆழமாக இறங்கும் திட்டமும் உள்ளது.
ஜூன் 2019ல் ஆர்பி சஞ்சீவ் கோயன்கா உடன் இணைந்து 35 கோடி மதிப்பிலான முதலீடு பெற்றுள்ளனர். மேலும் ஃபோர்ப்ஸ் இதழின் 30 அண்டர் 30 ஆசியா பட்டியலிலும், பிசினஸ் வேர்ல்ட் இதழின் 40 அண்டர் 40 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் அர்ஜுன் வைத்தியா.
போட்டியில் இருந்து உங்களை வேறுபடுத்துவது எது ?
அர்ஜுன் : இந்த நாட்டின் வாடிக்கையாளர்கள் அளவுகளை வைத்து பார்க்கும் பொழுது ஒரு நிறுவனத்தை வளர்ப்பது எளிதான காரியமாக இருக்காது. வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், சவாலும் அதிகமாகவே இருக்கும். எனவே எங்கள் மூலாதாரா கோட்பாட்டில் இருந்து மாறாது ஆன்லைனில் இருந்து வணிகத்தைத் துவங்குவது, பல்வேறு தரமான பொருட்களை வைத்திருப்பது, போன்றவற்றால் சந்தையில் போட்டி இல்லை என்றாலும் எங்கள் வணிகம் வளர உதவியுள்ளது.
சமீபத்தில் வெளியாகியுள்ள சிஐஐ அறிக்கை, ஆயுர்வேத சந்தை $4.2 பில்லியன் மதிப்புள்ள சந்தை எனவும், அடுத்த 6-7 வருடத்தில், வருடத்திற்கு 16% வளர்ச்சி காணவுள்ள சந்தை எனவும் கூறுகிறது. போட்டியாளர்களிடம் இருந்து தனது நிறுவனத்தை அர்ஜுன் இரண்டு வழிகளில் தனித்து நிற்க வைக்கிறார்.
1. பல வருட ஆய்வுகளின் பலனாக உருவாகியுள்ள இவர்கள் மருந்துகள்.
2. முன்னோர்களின் மருந்து, தற்காலத்திற்கு ஏற்றது அல்ல என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், தயாரிப்பு முதல் அதனை வாடிக்கையாளரிடம் சேர்ப்பது வரை அனைத்திலும் புதுமையை புகுத்தியுள்ளார்.
எதிர்காலம் :
ஆன்லைன் விற்பனை முக்கிய நோக்கமாக இருக்க, மறுபுறம் கடைகளிலும் எங்கள் விற்பனையைத் துவக்கியுள்ளோம். எங்கள் அனைத்து பொருளிலும் இந்திய தயாரிப்பு என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்ற பொருள் கொண்ட "பிரவுட்லி இந்தியன்" என்ற வாசகம் உண்டு. மேலும் இந்தத் தயாரிப்பு, அடுத்த 5 ஆண்டுகளில் 50 மேற்பட்ட நாடுகளில் இருக்கவேண்டும் என்பதே எனது கனவு, என முடிக்கிறார்.
தமிழில் : கெளதம் தவமணி