ஆன்லைனில் டாக்டர் அட்வைஸ், மருந்துகள் டோர் டெலிவரி: மருத்துவ புரட்சி செய்யும் செயலி!
அயல்நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை இந்திய ஹெல்த்கேர் துறையில் அறிமுகம் செய்துள்ளது Doxtro டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்.
லேசான தலைவலி, காய்ச்சல், சளித் தொல்லை என்று பெரிய ஆபத்தில்லாத நோய்கள் என்றால் மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் வழக்கம் இந்தியா முழுவதும் இருக்கிறது. நமக்குத் தெரியாதா நம்ம உடல்நிலையை பற்றி என அதீத நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரியான சமயத்தில் அவர்களுக்குள்ளேயே இருக்கும் டாக்டர் தொபுக்கடின்னு குதித்து வந்து மருந்து, மாத்திரையை அவர்களே கடைகளில் வாங்கி உண்வடே வழக்கம். அதிலும் இப்போது எல்லாமே கூகுளில் என்றாகிவிட்ட நிலையில் மெத்த படித்த மேதாவிகள் கூகுளில் இருந்து தேடி எடுத்து மருத்துவம் பார்த்துகொள்கின்றனர்.
ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்கலாமா? மருத்துவரிடம் பார்க்க நேரம் கேட்டு விட்டு காத்திருத்தல், பணி நேரத்தில் பெர்மிஷன் போட்டு மருத்துவமனையில் காத்திருப்பு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதற்கே பலரும் சுயமாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம், மருந்துகள் வாங்க மருந்து கடைக்கும் போக வேண்டாம். ஸ்மார்ட் போனில் மாடிப்படிக்கட்டு போல ஏறிக்கொண்டே இருக்கும் ஆப் லிஸ்ட்டில் பயனுள்ள செயலியான ’டாக்ஸ்ட்ரோ’ (Doxtro) வைத்திருந்தால் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் எந்த நேரத்திலும் ஆன்லைனில் டாக்டர் ஆலோசனையை பெறலாம். மருந்துகளை டோர் டெலிவரியும் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாக்ஸ்ட்ரோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (www.doxtro.com) நிறுவனத்தின் அறிமுகம் இந்த டாக்ஸ்ட்ரோ செயலி. 24*7 ஆன்லைனில் மருத்துவர்களின் ஆலோசனையை பெற இந்த செயலி உதவுகிறது.
ஆன்ட்ராய்டு, ஆப்பிள், ஐ போன் பயன்படுத்துபவர்களா நீங்கள் அப்படின்னா தாராளமா doxtro செயலியை பயன்படுத்த முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டாக்ஸ்ட்ரோ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொது மருத்துவர், சைக்காலஜி மருத்துவர், இதய நோய் சிகிச்சை மருத்துவர், மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மருத்துவர் என அத்தியாவசியமான 11 வகை சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் ஆன்லைனில் ஆலோசனை கேட்டுp பெறலாம்.
25 வருடங்களாக ஹெல்த் கேரில் அனுபவம் பெற்ற மகாகுருசாமி; டாஸ்ட்ரோவிற்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஜிஇ ஹெல்த் கேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த மகாகுருசாமி, டாக்ஸட்ரோ நிறுவனர்களில் ஒருவர். இந்த நிறுவனத்தின் மென்டாராகவும் மகாகுருசாமி செயல்படுகிறார். ஹெல்த்கேர் தொடர்பான ஸ்டார்ட் அப்பில் பயணித்து வந்த ஸ்ரீகாந்த் முருகேசனும் டாக்ஸ்ட்ரோவின் இணை நிறுவனராக இணைந்து செயல்பட்டு வருகிறார்.
டாக்ஸ்ட்ரோவின் தேவை குறித்து அதன் இணை நிறுவனர்களில் ஒருவரும் சிடிஓவுமான ஸ்ரீகாந்த் தமிழ் யுவர் ஸ்டோரியிடம் கூறும் போது,
"நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே டாக்ஸ்ட்ரோவின் அடிநாதம். மருத்துவச் சேவை தேவைப்படுபவர்கள் டாக்ஸ்ட்ரோவில் எந்த அப்பாயின்மென்ட்டும் வாங்காமல் 20 நிமிடத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். இந்த டெலிஹெல்த் செயலியில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் போன் சாட்டிங் மூலமும், வாய்ஸ் கால் மூலமும் ஆலோசனையை பெற முடியும்.”
பொதுவாக 70 சதவிகித உடல் உபாதைகளுக்கு மருத்துவமனைக்கு செல்லத் தேவையில்லை, நோயின் தன்மைகளைக் கூறி மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்துகளை உட்கொண்டாலே போதுமானது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அத்தகைய நோய்களுக்கான ஆன்லைன் மருத்துவ ஆலோசனை மட்டுமே இந்த செயலியில் வழங்கப்படுகிறது என்கிறார் ஸ்ரீகாந்த்.
2016ம் ஆண்டில் டாக்ஸ்ட்ரோவிற்கான விதை போடப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2017ல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய ஆலோசகர் மகாகுருசாமி, அவரைத் தவிர ஹெல்த் கேர் துறையில் பயணித்த கௌதம், ராமமூர்த்தி மற்றும் நான் உள்பட 4 இணை நிறுவனர்கள் சேர்ந்து சொந்த முதலீடான ரூ.1 கோடி செலவில் டாக்ஸ்ட்ரோவை மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தோம் என்கிறார் ஸ்ரீகாந்த்.
இந்தியா முழுவதிலும் சேவையை செய்து வரும் டாக்ஸ்ட்ரோவுடன் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கைகோர்த்துள்ளனர். வடமாநிலங்களில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்தி மொழியிலும், இந்தி தெரியாதவர்களுக்கு வசதியாக ஆங்கில மொழியிலும் என இரண்டு மொழிகளில் தற்போது மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
2019ம் ஆண்டில் மற்ற பிராந்திய மொழிகளிலம் டாக்ஸ்ட்ரோ சேவையை பெற விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
டாக்ஸ்ட்ரோ அறிமுகம் செய்யப்பட்ட 15 மாதங்களில் 1.5 லட்சம் பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் 60 ஆயிரம் பேர் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். மாதத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ ஆலோசனைகள் டாக்ஸ்ட்ரோ மூலம் வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் டாக்ஸ்ட்ரோவில் ஆலோசனை தேவைப்படும் நோயாளிக்கு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்கி வருகிறார். இதில் சில அசவுகரியங்கள் இருக்கின்றன, சிலர் ஆலோசனையின் தொடர்ச்சியாக மருத்துவரை நேரில் சந்தித்து தொடர் மருத்துவ சிகிச்சை பெற விரும்பினால் அது முடியாமல் போகிறது. இந்த அசவுகரியத்தை போக்கும் விதமாக விரைவில் அந்தந்த பகுதி சார்ந்த நோயாளிகள் அந்ததந்த பகுதியைச் சேர்ந்த மருத்துவரின் ஆலோசனையை பெறும் வசதியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என்கிறார் ஸ்ரீகாந்த்.
பெங்களூரு, டெல்லி, குர்கான், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தே அதிகம் பேர் டாக்ஸ்ட்ரோ மூலம் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர். டாக்ஸ்ட்ரோ செயலி கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஜியோ அறிமுகம் செய்யும் ஹெல்த் ஹப் செயலியில் மருத்துவ ஆலோசனைக்கான பிளாட்பார்ம் டாக்ஸ்ட்ரோவிற்கு ரூட் செய்யப்படும். இதே போல இந்தியாவின் முன்னணி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்கள் மருத்துவ ஆலோசனை பெற டாக்ஸ்ட்ரோவை பயன்படுத்தவும் டை அப் செய்துள்ளதாக கூறுகிறார் டாக்ஸ்ட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மேலாளர் ராகுல் ஜவஹர்.
”ஆன்லைன் மருத்துவ ஆலோசனை மட்டுமின்றி ஹோம் கேர் சேவை, லேப் பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் டோர் டெலிவரி செய்யும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சேவைகள் அனைத்தும் நெட்மெட்ஸ், தைரோகேர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுத்தப்படுகிறது. ஹோம் கேர், பேபி கேர் உள்ளிட்டவை குடும்பத்திற்கு ஏற்றாற் போல வார மற்றும் மாத பேக்கேஜ்களாக கொடுக்கப்படுகின்றன,” என்கிறார் ராகுல்.
மருத்துவர் கட்டணம் ரூ. 300ல் இருந்து தொடங்குகிறது. சவால்கள் எல்லாவற்றிலுமே இருக்கும், முதல் 3 மாதங்கள் டாக்ஸ்ட்ரோவில் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறலாம் என்று கூறி இருந்த போது அதிகம் பேர் பயன்படுத்தினார்கள். ஆனால் கட்டணம் அறிமுகம் செய்த போது 50 சதவீதம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தது. எனினும் தொடர்ந்து டாக்ஸ்ட்ரோவில் மருத்துவ ஆலோசனை மட்டுமின்றி, லேப் டெஸ்ட், மருந்துகள் டோர் டெலிவரி உள்ளிட்ட அம்சங்களை ஒவ்வொன்றாக சேர்க்க சேர்க்க அதிகம் பேரின் கவனத்தை ஈர்க்க முடிந்தது, இதனால் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது என்கிறார் ராகுல்.
கைராசி டாக்டர் ஒரு தரம் பார்த்தாலே நோய் பறந்திடும் என்று யாரோ ஒருவர் சொல்ல அந்த டாக்டரை நோக்கி நோய் பாதிக்கப்பட்டவர்கள் படையெடுப்பது வழக்கம் தான். இதனால் அந்த குறிப்பிட்ட ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க நேரம் கேட்டால் 10 நாட்கள் ஏன் சில மருத்துவர்கள் 1 மாதம் கழித்து கூட அப்பாயின்மெண்ட் கொடுக்கும் விஷயங்களெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த நடைமுறை பிரச்னைக்கான தீர்வையும் தருகிறது டாக்ஸ்ட்ரோ.
இந்த செயலியில் இருக்கும் 300 மருத்துவர்களில் எந்த குறிப்பிட்ட மருத்துவரிடம் ஆன்லைனில் ஆலோசனை பெற விரும்புகிறார்கள் என்பதை குறிப்பிட்டால் அந்த மருத்துவரிடம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நாளில் ஆன்லைனில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற முடியும். அதே டாக்டரிடம் அடுத்த நாளே ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் அப்பாயின்மெண்ட் கேட்டு காத்திருக்க வேண்டாம், 24*7 அந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மருத்துவர் கொடுக்கும் மருத்துவ குறிப்பு சீட்டைஇ- பிரெஸ்க்ரிப்ஷனாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும், மருத்துவ பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கவும் முடியும்.
அயல்நாடுகளில் இருக்கும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை முறையை இந்தியாவில் அறிமுகம் செய்து ஹெல்த்கேர் துறையில் புரட்சியை செய்துள்ளது டாக்ஸ்ட்ரோ. பெண்கள், வயதனாவர்கள் என பலருக்கும் இந்த செயலி கைகொடுத்து உதவும் காக்கும் கடவுளாக இருக்கிறது.
செயலி பதிவிறக்கம் செய்ய: doxtro