முன்பு தெருவே வாழ்க்கை; இன்று கோடீஸ்வரர்: இன்ஸ்டாகிராம் மூலம் உச்சம் சென்ற அமெரிக்க இளைஞர்!
நம்பிக்கை கதை!
'12 மணி நேரத்துக்குள் நாங்கள் எங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது நாங்கள் பொது கழிப்பிடங்களிலும், எங்களது நண்பர்கள் வீடுகளிலும் தங்கினோம்...'
தெருமுனையில் இருந்தவர் இன்ஸ்டாகிராம் உதவியால் இன்று கோடீஸ்வராக இருப்பது அனைவரது மனதிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரியவம்சம் படத்தில் ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல குறுகிய காலத்தில் அமெரிக்காவில் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார். அவரைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதாக பிராடன் கேண்டி என்பவர் தனது இளம் வயதில் தந்தையை இழந்து வறுமையான நிலையில் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, தனது தாயாரின் வேலை பறிபோனதால், வாடகை வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாமல் தெருவில் தங்கியுள்ளனர்.
தனது வாழ்க்கையை மாற்ற வேண்டும் தாய்க்கு சொந்த வீடு வாங்கி அமர வைக்க வேண்டும் என்று எண்ணிய பிராடன் கேண்டி, தனது 15 வயது முதல்பல ஓட்டல்களில் பணி புரிந்திருக்கிறார். தொடர்ந்து, தனது கடின உழைப்பை வெளிப்படுத்திய பிராடன் கேண்டிற்கு இன்ஸ்டாகிராம் திருப்புமுனையாக மாறியுள்ளது.
தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தை மார்க்கெட்டிங்குக்காக பயன்படுத்தி லட்சங்களில் சம்பாதிக்கத் தொடங்கி இருக்கிறார். மேலும், தனது பெயரில் கம்பெனி ஒன்றையும் அவர் ஆரம்பித்திருக்கிறார்.
தொடர்ந்து, 2 வருடங்களில் தனது இலக்கை அடைந்த பிராடன், தனக்கும், தனது தாய்க்கும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். குறுகிய காலத்தில் தனது இலக்கை அடைந்த பிராடன் தான் நினைத்த மாதிரியே தனது தாய்க்கு வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார். அவரின் வாழ்க்கை தான் தற்போது அமெரிக்க நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
இது குறித்து பிராடன் கேண்டி கூறுகையில்,
"எனது தாய் நிறைய உழைத்தார். அன்பு செலுத்தினார். ஆனால் அப்போதைய நிலை எங்களை மேலும் வலிக்கு ஆழ்த்தியது. அந்த நேரத்தில் எனது தாயின் வேலை பறிபோனது. 12 மணி நேரத்துக்குள் நாங்கள் எங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது நாங்கள் பொது கழிப்பிடங்களிலும், எங்களது நண்பர்கள் வீடுகளிலும் தங்கினோம். அந்த நேரத்தில் எனக்குப் பயமும், நம்பிக்கை இழப்பும் ஏற்பட்டது. எனது வாழ்க்கையில் யாருக்கும் அந்த நிலை எற்படக் கூடாது என்று எண்ணிணேன்," என்று கூறியுள்ளார்.
தொகுப்பு: மலையரசு