இன்ஸ்டாவை கலக்கும் 20 மாதக் குழந்தை: குவிந்த 9 லட்ச ரூபாய் பரிசுகள்!
20 மாதக்குழந்தையாக இருக்கும்போதே, இன்ஸ்டாகிராம் ஸ்டாராக வலம் வருவதுடன் அவருடைய அம்மாவுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருள்களை பெற்றுத்தந்துள்ளார். அது எப்படி?
தன் குழந்தையின் பிஞ்சுவிரல்கள் தொடங்கி தத்தித்தாவி தவழ்ந்தும், விழுந்தும் பின்னெழுந்து நடை பயிலுவதுவரை அனைத்தையும் தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிடும் ஏராளமான ‘மாம்’களில் ஒருவரே நட்டாஷா மேக்ஸ்வெல்.
இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரைச் சேர்ந்த நட்டாஷா அவரது குழந்தை ’பார்கர் ஜார்ஜ்’, எட்டுமாத கைப் பிள்ளையாக இருக்கையில், ’லைஃப் ஆப் பார்கர் ஜார்ஜ்’ (Life Of Parker George) என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கியுள்ளார்.
‘லைஃப் ஆப் பார்கர் ஜார்ஜ்’ பக்கத்தை ஜார்ஜ்ஜின் மொத்த வாழ்வினையும் பிரதிபலிக்கும் விதமாக முக்கியப் புகைப்படங்களை பதிவிட்டு சேமிக்கத் தொடங்கினார். இன்றோ, ஜார்ஜின் புரோஃபைலை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
பல முன்னணி நிறுவனங்களும் அவர்களது தயாரிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், அவர்களது தயாரிப்புகளுடன் ஜார்ஜ்ஜை புகைப்படமெடுத்து பதிவிடுவதற்காக அத்தயாரிப்புகளை பரிசாக வழங்கி வருகிறது. ஸ்ட்ரோலர்கள் அல்லது ப்ராம்கள் என்படும் குழந்தையை வைத்துக் கொண்டுசெல்லும் தள்ளுவண்டிகள், குழந்தைகளுக்கான உயர்நாற்காலிகள், டிசைனர் உடைகள், ப்ரீட்ஜ், டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கின் நுழைவுசீட்டு என ஜார்ஜ்ஜுக்கு இதுவரை கிடைத்த கிஃப்ட்களின் மொத்த மதிப்பு ரூ.9,00,000.
இதுகுறித்து தாய் நட்டாஷா கூறுகையில்,
“பெற்றோர்கள் சமூக ஊடகங்களை ஒரு நல்ல மற்றும் நேர்மறையான முறையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டும்விதமாகவும் அமைந்துள்ளது.
எங்களுக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக அன்பின் பரிசாக அனுப்பப்பட்டுள்ளன. குறைந்தது அவையனைத்தும் 10,000 பவுண்டுகள் (ரூ.9லட்சம்) மதிப்பிருக்கும். என் குழந்தைகளைப் பயன்படுத்தி எதையும் பெறுவதற்கான ஒரு வழியாக இதை நான் எண்ணி தொடங்கவில்லை. எனது குழந்தைகளின் எல்லா புகைப்படங்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க முடியுமானதொரு இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கும் என்பதால் நான் இப்பக்கத்தைத் தொடங்கினேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களும்கூட ஒரே இடத்தில் குழந்தையின் புகைப்படங்களை பார்த்து கொள்ளமுடியும்,” என்று பகிர்ந்தார்.
ஜார்ஜின் புகைப்படங்களை சேமித்து வைப்பதற்கும், அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வழியாகவே இன்ஸ்டா பக்கத்தை நட்டாஷா எண்ணினார். ஆனால், விரைவில் 20 மாத குழந்தையின் புசுபுசு கன்னங்களும், குழந்தைகளுக்கே உரித்தான மழலைச் சிரிப்பும் எக்கச்சக்க இன்ஸ்டா பயனர்களை ஈர்த்தது.
2018ம் ஆண்டு டிசம்பரில் தொடக்கப்பட்ட இன்ஸ்டா பக்கம் 6 மாதத்திலே 10,000 பாலோயர்களை பெற்றது. ஜார்ஜ்ஜை ரெடி செய்து, போட்டே எடுப்பது, எடிட் செய்வது என்று நட்டாஷா அவரது நாளில் 9 மணிநேரத்தை இன்ஸ்டாகிராமில் பதிவினை உருவாக்குவதற்காக செலவிடுகிறார்.
நட்டாஷாவின் ஒவ்வொரு போஸ்டும் 20 ஆயிரம் லைக்குகளை குவிக்க, குழந்தைகளின் பேஷன் அண்ட் கேர் தொடர்பான முன்னணி நிறுவனங்கள், அவர்களது தயாரிப்புகளை பரிசாக வழங்கி, அதனை ஜார்ஜ் பயன்படுத்தும் புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ள முன்வந்தன.
அதில், 1948ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஷன் பிராண்டான ‘ரிவ்வர் ஐலண்ட்’, குழந்தைகளின் பர்னிச்சர்கள் மற்றும் கருவிகளுக்காக உலகளாவிய விற்பனையை கொண்டுள்ள ‘ஸ்டோக்’ போன்ற பெரும் பிராண்டட் நிறுவனங்களும் அடங்கும்.
“ஜார்ஜ்ஜின் புகைப்படங்களை பதிவிடுவதால் இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஆனா, ஜார்ஜ் ஏன் இவ்வளவு பிரபலமடைந்தான் என்றே தெரியவேயில்லை. ஜார்ஜ் பார்க்கும் எல்லோரிடமும் க்யூட்டான முகச்சிரிப்பை வெளிப்படுத்துவான்.
நிறையபேர் பிள்ளைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், நான் அதை அப்படி பார்க்கவில்லை. ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுகிறார்கள். உண்மையில் அதில் எந்த பாதிப்பும் இல்லை. இது எந்த வகையில் நெகட்டிவ்வாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் வாழ்க்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவதை விரும்புகிறேன்,” என்றார் நட்டாஷா.
தனது குழந்தைகளின் படங்களை ஆன்லைனில் பகிரும்போது மற்ற பெற்றோர்களும் கிரியேட்டிவ்வாக சிந்தித்து அவர்களது குழந்தைகளை புகைப்படம் எடுப்பர். குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை மற்ற பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ளுவதற்கான வாய்ப்பாகவும் இத்தளத்தை பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: டெய்லி மெயில்