'என் ரிசார்ட்டுகளை சிகிச்சை மையங்களாக மாற்றிக் கொள்ளுங்கள்’ - ஆனந்த் மகிந்திரா அறிவிப்பு!
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வென்டிலேட்டர் கருவிகள் தயாரிக்க உதவி, தனது முழு சம்பளத்தை தானம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இந்தியா போராடி வரும் நிலையில், வெண்டிலேட்டர் கருவி உற்பத்தியில் உதவி, தங்களின் ரிசார்ட்களை தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளிட்ட நடவடிக்கைகளை மகிந்திரா குழுமம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு தேவையான உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாக மகிந்திரா குழுமம் அறிவித்துள்ளது.
செயற்கை சுவாசக் கருவிகளான வென்டிலேட்டர் கருவிகளை உற்பத்தி செய்யும் வகையில் மகிந்திரா உற்பத்தி வசதியை மாற்றி அமைப்பது பற்றி யோசித்து வருவதாக மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டர் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
“இந்த வரலாறு காணாத நெருக்கடியில் உதவ, மகிந்திரா குழுமத்தில் உள்ளவர்கள், எங்கள் உற்பத்தி வசதியை வென்டிலேட்டர் கருவிகள் தயாரிக்கக் கூடியதாக மாற்றத் தேவையான பணிகளை உடனடியாக துவக்க உள்ளோம்,” என்று கூறியுள்ளார்.
மகிந்திரா ஹாலிடேஸ் ரிசார்ட்டை, தற்காலிகச் சிகிச்சை மையங்களாக மாற்றிக்கொள்ள அரசுக்கு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“வைரஸ் நிபுணர்களின் கருத்துக்கள் படி பார்த்தால், இந்தியா ஏற்கனவே வைரஸ் பரவலில் 3வது இட்டத்தை எட்டிவிட்டதாகத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து, மருத்துவக் கட்டமைப்பு மீது நெருக்கடியை ஏற்படுத்தலாம்,” என்றும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, தற்காலிகச் சிகிச்சை மையங்கள் அமைக்க தங்கள் ரிசார்ட் உள்ளிட்டவற்றை அளித்து அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'மஹிந்திரா ஃபவுண்டேஷன்’ மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு உதவ ஒரு நிதியை அமைக்க தன் குழுவை கேட்டுக்கொண்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா. மேலும், தனது சம்பளம் மொத்த்தையும் அதற்கு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்