கொரோனா: சிறு தொழில் நிறுவனங்களுக்கு $100 மில்லியன் ஃபேஸ்புக் நிதியுதவி!
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள 30 நாடுகளில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ ஃபேஸ்புக் நிறுவனம் 100 மில்லியன் டாலர் அறிவித்துள்ளது.
சமூக வலைப்பின்னல் ஜாம்பவான் நிறுவனமான ஃபேஸ்புக், கொரோனா வைரசின் பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள 30 நாடுகளில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு 100 மில்லியன் டாலர் உதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
30,000 க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரொக்க உதவி மற்றும் விளம்பரச் சலுகை அளிக்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
"சிறு தொழில் நிறுவனங்களுக்கு எப்படி உதவ முடியும் என புரிந்து கொள்ள அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டிருக்கிறோம்,” என ஃபேஸ்புக் சி.ஓ.ஓ ஷெரில் சாண்ட்பர்க் தெரிவித்துள்ளார்.
"நிதி உதவி இந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட உதவியாக இருக்கும் மற்றும் வேலைக்கு வர முடியாதவர்களுக்கு ஊதியம் தர உதவும் என புரிந்து கொண்டுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதே போல, ஃபேஸ்புக், கொரோனா வைரஸ் தவறான தகவல்களை கட்டுப்படுத்த ஐரோப்பாவில் பங்குதாரன் அமைப்பான, சர்வதேச ஃபேக்ட் செக்கிங் நெட்வொர்கிற்கு 1 மில்லியன் டாலர் வழங்குவதாகவும் ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த நிதி, 45 நாடுகளில், கொரோனா பொய்ச்செய்திகளை, #CoronaVirusFacts Alliance அமைப்பு மூலம் கட்டுப்படுத்தி வரும் பாயின்டர் இன்ஸ்டிடியூட்டிற்கான 50,000 டாலரை உள்ளடக்கியது.
கொரோனா தொடர்பான பொய்ச்செய்திகள் பரவாமல் தடுக்க ஃபேஸ்புக் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் போராடி வரும் நிலையில், தவறான தகவல்கள், வைரசே ஒரு மோசடி என்பது உள்ளிட்ட வதந்திகளும் அதிகரித்துள்ள நிலையில் ஃபேஸ்புக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அண்மையில், இந்தியாவின் பேடிஎம் நிறுவனம், கொரோனா பரவுவதை தடுக்க, ‘India Fights Corona' இந்தியா ஃபைட்ஸ் கொரோனா எனும் விழிப்புணர்வு திட்டத்தை துவக்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நிறுவனம், சுகாதார பிராண்டான லைப்பாய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் யுகேன் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.
லைப்பாய் பொருட்களை சமூகத்தினரிடம் விநியோகிக்க பேடிஎம் செயலியில் நிதியுதவி அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நன்கொடை நிதி, மிகவும் தேவை உள்ள மக்களுக்கு சோப் உள்ளிட்டவை விநியோகிக்க பயன்படுத்தப்படும்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்