‘இந்த ஆட்டோ வீடு கட்டிய சென்னை இளைஞரை யாராவது கண்டுபிடிச்சு கொடுங்க...’ ஆனந்த் மஹிந்த்ரா ட்வீட்
ஆனந்த் மஹிந்த்ரா தேடும் தமிழர்!
"நடமாடும் வீடு என்ற வகையில் இது பலரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலேயே முதல் சிறிய நடமாடும் வீடு என்ற பெருமையையும் இந்த ஆட்டோ வீடு பெற்றுள்ளது.''
ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவிலேயே வீடு தயாரித்துள்ள இளைஞர் அருண் பாபுவுக்கு மஹிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்த்ரா மற்ற தொழிலதிபர்களிலிருந்து வேறுபடுபவர். இளைஞர்களின் ஆர்வத்துக்கு எப்போதும் மதிப்பளித்து, அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பவர்.
அண்மையில் கூட, தமிழகத்தைச்சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அது போல பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பவர். அப்படித்தான் இதுவும் நடந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் அருண் பாபு. எப்போதும் புதுமையான முயற்சிகளில் ஆர்வம் காட்டுபவர். இன்ஜினியரிங்க் பட்டதாரியான இவர், தொழில் முனைவோர்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் 'ஆட்டோ வீடு' ஒன்றை கடந்த ஆண்டு உருவாக்கினார்.
இந்த ஆட்டோவில் வீட்டில் இருப்பதை போன்றே கழிவறை, குளியலறை, படுக்கையறை, சமையலறை என அனைத்து வசதிகளும் உண்டு. வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற வசதிகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆட்டோ வீட்டின் மேலே 250 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டியும் உண்டு.
இந்த வீட்டுக்கு சோலோ 0.1 என்று அருண் பாபு பெயரிட்டிருந்தார். பல்வேறு வசதிகளுடன் அட்டகாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ வீட்டை, அவர் 1 லட்சத்திலேயே முடித்துள்ளார். நடமாடும் வீடு என்ற வகையில் இது பலரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலேயே முதல் சிறிய நடமாடும் வீடு என்ற பெருமையையும் இந்த ஆட்டோ வீடு பெற்றுள்ளது.
குறிப்பாக பயணங்களை விரும்புபவர்களுக்கு இந்த நகரும் வீடுகள் வரப்பிரசாதமாக இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இளைஞர் அருண் பாபுவை மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இத்தனை சிறிய இடத்தில் ஒரு வீட்டையே அமைக்க முடியும் என்று சமூகத்துக்கு எடுத்துக் காட்டிய இளைஞர் அருண் பிரபுவின் கிரியேட்டிவிட்டியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
மேலும், அருண் பிரபுவை தொடர்பு கொள்ள மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். எங்களது பொலிரோ பிக்கப் வேனுக்கு இது போன்ற டிசைனை வடிவமைக்க அருண் முன்வருவாரா...? அவரின் இணைப்பு எண்ணை தர முடியுமா?” என்று ஆனந்த் மஹிந்த்ரா கேட்டுள்ளார்.
மகிந்த்ரா, மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆட்டோவின் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர் அருண்குமாரின் திறமையை வெகுவாக பாராட்டியிருக்கிறார்