ஏப்ரல் 20 முதல் எந்தெந்த இடங்களில் என்னென்ன அனுமதி? அனுமதி இல்லை?
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் முழு தொகுப்பு இதோ:
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏப்ரல் 14ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள முடக்கநிலை காலம் மே 3ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
நாட்டில் அடையாளம் காணப்படும் பகுதிகளில், ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து, குறிப்பிட்ட சில அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
பிரதமரின் அறிவிப்புகளின் தொடர்ச்சியாக, முடக்கநிலை அமல் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 14, 2020 தேதியிட்ட ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்களால், நோய்த் தடுப்புக்கான மண்டலங்கள் என எல்லை குறிக்கப்படாத பகுதிகளில் சில கூடுதல் செயல்பாடுகளை அனுமதிப்பதற்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுக்க தடை செய்யப்பட்ட செயல்பாடுகளை பிரித்துக்காட்டி, நோய்த்தடுப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், மற்ற பகுதிகளில் அனுமதிக்கப்படும் சில செயல்பாடுகள் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது. இவை ஏப்ரல் 20 முதல் கடைபிடிக்கப்பட வேண்டும்.
முதலாவது கட்ட முடக்கநிலை அமல் மூலம் கிடைத்த ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்வது, கோவிட்-19 பரவுதலை மேலும் கட்டுப்படுத்துதல், அதே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் அளிக்கப் பட்டுள்ளன.
ஏப்ரல் 20ம் தேதி முதல் கீழ்கண்டவை தடை தொடரும்:
- விமானம், ரயில் மற்றும் சாலை வழிப் பயணங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது.
- கல்விநிலையங்கள், பயிற்சி நிலையங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
- தொழிற்சாலை மற்றும் வணிகச்செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
- விருந்தோம்பல் சேவைகளுக்குத் தடை இருக்கும்.
- அனைத்துத் திரையரங்குகள், வணிகவளாகங்கள், தியேட்டர்கள் மற்றவைகளுக்கும், அனைத்து சமூக, அரசியல் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கும் தடை இருக்கும்.
- மத வழிபாட்டுத் தலங்களை மதக்கூட்டம்/ மத செயல்பாடு உள்ளிட்ட பொது மக்கள் கூடும் வகையில் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
கீழ்கண்ட சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்:
- பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில், வீடுகளில் தயாரிக்கப்பட்ட முகக்கவச உறைகளை அணியவேண்டும்.
- கிருமி நாசினி அளிக்கப்படவேண்டும்.
- ஷிப்டு நேரங்களை தள்ளியிருக்கும்படி அமைக்கவேண்டும்.
- அணுகுதல் கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும்.
- உடல் வெப்பம் கண்டறியும் வசதி செய்யப்படவேண்டும்.
- பொது இடங்களில் துப்புவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படவேண்டும்
ஏப்ரல் 20ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளவை:
- அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் சரக்குப்போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட வேண்டும்.
- வேளாண் பொருள்கள் கொள்முதல்,
- மண்டிகள் மூலம் வேளாண்மைப்பொருள் வாங்குதல்,
- நேரடி மற்றும் பரவலாக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண்மை செயல்பாடுகள்.
- எலக்ட்ரீஷயன், ப்ளம்பர், தச்சர், மோட்டார் மெக்கானிக் பணி செய்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விதைகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை.
- கடல் மற்றும் உள்நாட்டு மீன்வள செயல்பாடுகள்
- பால் வழங்கல், பால் பொருட்கள் வழங்கல்
- சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரவும், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணிகளை தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கோழிவளர்ப்பு மற்றும் வேளாண் நிலத்தில் கால்நடைகள், ஆடு, கோழிகள் உள்ளிட்டவை வளர்ப்பு தொடர்பான கால்நடை பராமரிப்புத்துறை செயல்பாடுகள்
- தேயிலை, காபி மற்றும் ரப்பர் தோட்ட செயல்பாடுகள் ஆகியவை அனுமதிக்கப்படும்.
ஊரகப் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிப்பதற்காக,
- ஊரகப்பகுதிகளில் இயங்கும் உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட தொழிற்சாலைகள்,
- கிராமப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல்,
- பாசனத் திட்டப்பணிகள்
- கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைத் திட்டப் பணிகள்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டப் பணிகளை பாசனம் மற்றும் தண்ணீர் சேமிப்புப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது
- ஊரகப் பொதுச் சேவை மையங்களின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலம் பிரித்துக்காட்டுவது மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களும் வெளியிடப் பட்டுள்ளது.
- இந்த மண்டலங்களில் அத்தியாவசியச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
- எல்லைப்புறக் கட்டுப்பாடு கடுமையாக இருக்கும்.
- மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
வேளாண்மை மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் முழுமையாக செயல்படுதல், கிராமப்புறப் பொருளாதார செயல்பாடுகள் அதிகபட்ச செயல் திறனுடன் இயங்குதல், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இந்தச் செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து அனுமதி அளிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில தொழிற்சாலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும், போதிய அளவுக்கான கட்டாயமான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedures - SOP) பின்பற்றவேண்டும் என்றும், டிஜிட்டல் பொருளாதார செயல்பாடுகளை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்ற கட்டாயமான விஷயத்தில், கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்துதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த செயல்பாடுகளால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட, கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாகும்.
- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
- ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள்
- தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் நகரியங்கள்
மேற்கண்ட இடங்களில் சமூக இடைவெளிக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, அணுகுதல் கட்டுப்பாடுகளுடன் உற்பத்தி மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். அவை:
- தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி
- அத்தியாவசியப்பொருள்கள் உற்பத்தி மற்றும் பொதியிடல்களுக்கு (Packaging) அனுமதிக்கப்படும்.
- நிலக்கரி, மினரல் மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆகியவை அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளாக இருக்கும்.
இந்த நடவடிக்கைகள் மூலமாக தொழிற்சாலை மற்றும் உற்பத்தித்துறைகள் புத்துயிர் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியைப் பராமரிக்கும் நிலையில், இவை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயத்தில், தொழில்துறையினருக்கு ரொக்கம் மற்றும் கடன் ஆதரவு அளிப்பதைக் கருத்தில் கொண்டு, நிதித்துறையில் முக்கியமான அம்சங்களாக, உதாரணமாக
- இந்திய ரிசர்வ் வங்கி
- வங்கிகள்
- ஏ.டி.எம்.க்கள்
- செபி அறிவிக்கையின்படியான முதலீட்டு மற்றும் கடன் சந்தைகள், காப்பீட்டு நிறுவனங்களும் செயல்படும்.
சேவைகள் துறையில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கியம். தேசத்தின் வளர்ச்சிக்கும் அது முக்கியம். அதன்படி,
- மின்னணு வணிகச் செயல்பாடுகள்,
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளின் செயல்பாடுகள்
- அரசு செயல்பாடுகளுக்கான தகவல் தொகுப்பு மற்றும் கால் சென்டர்கள்,
- ஆன்லைன் கற்பித்தல் மற்றும் தொலைநிலை கற்றல் ஆகிய அனைத்துமே இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.
- சுகாதாரச் சேவைகள் மற்றும் சமூகப்பிரிவு செயல்பாடுகளையும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அனுமதிக்கின்றன;
- பொது மக்கள் சேவைக்கான நிறுவனங்கள் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படும்;
- அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும்;
- மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய அலுவலகங்கள், தேவையான ஆள் பலத்துடன் திறந்திருந்து செயல்படும்.
ஏப்ரல் 20ம் தேதி முதல் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட விஷயங்கள், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்களால் நோய்க் கட்டுப்பாடு செய்யப்படும் மண்டலங்களாக எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படாது.
- இந்த மண்டலங்களில், எல்லைக்குள் வரும் அல்லது வெளியே போகும் நபர்கள் உரிய பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.
- அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பணிகள், அரசு செயல்பாடுகள் தொடர்வது தொடர்பானவர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் காரணங்களுக்காக மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- கோவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள அல்லது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் பகுதிகளாக இருக்கும், நோய்த்தொற்று பாதிப்புப் பகுதிகளில் மிகக் கடுமையான நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல் செய்யப்படும்.
தகவல் உதவி: பிஐபி