இந்தியா முழுதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி!
கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றாலும் சமூக விலகல் மற்றும் ஊரடங்கால் மட்டுமே இந்த நோய்தொற்று பரவலை குறைக்கமுடியும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில்,
“கொரோனா கட்டுக்குள் இருக்கும் சில பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஆராய்ந்த பின்பு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். தற்போது ஊரடங்கின் அவசியம் இருப்பதால் மே-3ம் தேதி வரை அது நீட்டிக்கப்படுகிறது. மக்கள் அதை கடைபிடிக்க வேண்டும்,” என்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவில் அடுத்த ஒருவார காலம் முக்கியமானது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் நிலை குறித்து ஆராயப்படும். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும், என்றார் மோடி.
கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது, இருப்பினும் சமூக விலகல் மட்டுமே இதை ஒழிக்க ஒரே வழி என்றார்.
தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நாட்டு மக்கள் வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் உரையில் இருந்து முக்கிய அம்சங்கள்:
- நாட்டு மக்கள் அனைவரும், வெளியில் வரும் போது முகக்கவசங்களை நிச்சயமாக அணிய வேண்டும். வீட்டில் தயாரித்த மாஸ்குகளை அணியலாம்.
- வீட்டில் உள்ள முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். Aarogya Setu செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- ஏழை எளிய மக்கள் மற்றும் தினக்கூலிகள் அனைவரையும் மனதில் வைத்தே புதிய நெறிமுறைகளை உருவாக்கி உள்ளோம். நீங்களும் அவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள்.
- கொரோனா போராட்டத்தில் நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
- தொழில் புரிபவர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யவேண்டாம்.
- வீட்டில் ஆரோக்கியமான உணவு அருந்தி, உங்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை வலுவாக்குங்கள்.
கொரோனாவை எதிர்கொள்ள ஏற்கெனவே ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன என்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பான வழிபாட்டு நெறிமுறைகள் நாளை அறிவிக்கப்படும், என்று தெரிவித்து உரையை முடித்துக் கொண்டார் பிரதமர்.