பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு சுற்றுச் சூழலுக்கு உகந்த கழிப்பறைகள் கட்டும் கட்டிடக் கலைஞர்!
சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடும் இன்றைய சூழலில் ராஷ்மி திவாரி போன்றோர் பசுமையான எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ராஷ்மி திவாரி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். 2017ம் ஆண்டு முதுகலை கட்டிடக்கலை பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக சுற்றுசூழல் வடிவமைப்பு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை இவர் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அதுகுறித்து தீவிரமாக சிந்தித்தபோது பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கழிப்பறைகள் கட்டும் எண்ணம் தோன்றியது.
சிறியளவில் இதற்கான மாதிரியை உருவாக்கினார். கல்லூரியில் முதலிடம் பெற்றார். அப்போதுதான் தனது திட்டமானது இந்தியாவில் நிலவி வரும் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் திறன் கொண்டுள்ளது என்பதை உணர்ந்தார்.
’தூய்மை இந்தியா’ திட்டத்தையும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக உருவாக்கவேண்டும் என்கிற அதன் நோக்கத்தையும் கண்டு உந்துதல் பெற்ற ராஷ்மி, டாக்டர் அம்பேத்கர் அரசுப் பள்ளியில் கழிப்பறைகள் கட்டத் தீர்மானித்தார். பள்ளி முதல்வரின் ஆதரவைப் பெற்று தனது சேமிப்பில் இருந்து 18,000 ரூபாய் செலவிட்டு கடந்த மார்ச் மாதம் இந்தப் பணியில் ஈடுபட்டார்.
”நான் ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகவேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். ஆனால் எனக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. படைப்புத்திறனை வெளிப்படுத்த விரும்பினேன். எனவே கட்டிடக்கலை தொடர்பாக படிக்கத் தீர்மானித்தேன்,” என்றார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகள்
“பூச்சு வேலைக்கு சிமெண்ட் மற்றும் மணல் பயன்படுத்தினேன். இதன் மூலம் கட்டுமானத்திற்கான செலவு 30% குறைந்தது. வழக்கமான பயன்படுத்தும் செங்கற்களுக்கு பதிலாக 1,200 ஒரு லிட்டர் பெட் பாட்டில்களைப் பயன்படுத்தினேன். பாட்டில்களின் உட்புறம் வைக்கப்படும் கலவைக்கு மண், மாட்டுச்சாணம், கோமியம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தினேன்,” என்றார்.
இரண்டு மாதங்கள் சோதனை செய்யப்பட்டது. வெவ்வேறு வானிலையிலும் நீடித்திருப்பது உறுதிசெய்யப்பட்டதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகள் மே மாதம் 21ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன் குறைந்த விலை கொண்டதாகும்.
பாட்டில்களை மறுசுழற்சி செய்தாலோ அல்லது வேறு ஏதேனும் விதங்களில் பயன்படுத்தினாலோ சேதம் அதிகரிக்கும் என்கிறார் ராஷ்மி.
”மறுசுழற்சி செய்வதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மறுசுழற்சி செய்யப்படும்போது வெளியாகும் வாயு நச்சுத்தன்மை கொண்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அவற்றைத் திறம்பட பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்தேன்.
கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதை உணர்ந்தேன். நம்மால் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பைத் தடுக்கமுடிவதில்லை. அவற்றை வீடுகளோ அல்லது கழிப்பறைகளோ கட்டுவதற்குப் பயன்படுத்துவதே சிறந்தது,” என்றார்.
முயற்சியின் நோக்கம்
உலகளவில் ஒரு நிமிஷத்திற்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை மக்கள் வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இவ்வாறு மக்கள் வாங்கும் பிளாஸ்டிக்கில் 91 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. நிலங்களிலும் நீர்நிலைகளிலும் கொட்டப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகரிப்பதைக் கண்டு வருந்திய ராஷ்மி தனது பிராஜெக்டிற்கான மூலப்பொருளாக அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தார்.
”கிராமங்கள், அரசுப்பள்ளிகள், குடிசைப்பகுதிகள் போன்ற இடங்களில் கழிப்பறைகள் பற்றாக்குறை இருந்ததால் அவற்றைத் தேர்வு செய்தேன். குறிப்பாக மாணவிகள் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் சிரமங்கள் சந்திக்க நேர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படுகிறது. பெண்கள் சூரியன் மறைவதற்காக காத்திருக்கும் அவலநிலை காணப்படுகிறது,” என்று ராஷ்மி விவரித்தார்.
சவால்கள் மற்றும் அங்கீகாரம்
இந்த பிராஜெக்டை நிறைவு செய்வது எளிதாக இருக்கவில்லை. தேவையான பாட்டில்களை வாங்குவது கடினமாக இருந்ததாகத் தெரிவித்தார் ராஷ்மி.
”எனக்கு பாட்டில்கள் தேவை என்பதைத் தெரிந்துகொண்டு மக்கள் அதிக விலை நிர்ணயித்தனர்,” என்றார்.
அதுமட்டுமல்லாது ராஷ்மி மற்றுமொரு சவாலையும் சந்திக்க நேர்ந்தது. சுவரை முறையாக எழுப்புவதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை கவனமாக கையாள வேண்டியிருந்தது.
”அனைத்தையும் கொத்தனாரின் பொறுப்பில் ஒப்படைத்துவிடமுடியாது. பாட்டில்களை முறையாக வைத்து கட்டுவதற்கு நானும் உடன் இருக்கவேண்டிய அவசியம் இருந்தது,” என்றார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தபிறகு ராஷ்மியின் உந்துதலளிக்கும் முயற்சி அங்கீகரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சி மண்டல ஆணையர் ஹரிசந்தன தசாரி ராஷ்மியை பாராட்டினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு மண்டலத்தில் 60-80 கழிப்பறைகள் கட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி முன்னணி செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி சானல்களிலும் இவரது பிராஜெக்ட் இடம்பெற்றது. பல என்ஜிஓ-க்கள் கூடுதல் கழிப்பறைகள் கட்டுவதற்காக இவரை அணுகினார்கள்.
எதிர்காலத் திட்டம்
ராஷ்மி ’நமஹா’ (NAMAHA) என்கிற பெயரில் என்ஜிஓ ஒன்றை தொடங்கி அதன் மூலம் தனது அடுத்தகட்ட திட்டங்களுக்குத் தேவையான வளங்களையும் நிதியையும் பெற திட்டமிட்டுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள நலிந்த பிரிவினருக்காக பெட் பாட்டில்களைக் கொண்டு கூடுதல் கழிப்பறைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஜோனா குரியன் | தமிழில்: ஸ்ரீவித்யா