Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

படித்த படிப்புக்கு வேலை இல்லை; டூவீலரில் குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தாய்!

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த பெண் ஒருவர், வேறு வேலை கிடைக்காததால், தனது குழந்தையை வண்டியில் வைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

படித்த படிப்புக்கு வேலை இல்லை; டூவீலரில் குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தாய்!

Saturday November 23, 2024 , 2 min Read

மனமிருந்தால் மார்க்கமுண்டு எனச் சொல்வார்கள். இதற்கு உதாரணமாகப் பலர் வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்கள். தற்போது இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

வேலையில்லை, கைக்குழந்தை இருப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை எனப் பல சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறி, வறுமையில் உழல்பவர்களுக்கு மத்தியில் இப்பெண், ஹோட்டல் மேனெஜ்மெண்ட் முடித்திருந்தபோதும், குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உணவு டெலிவரி செய்து வருகிறார்.

காலில் செருப்பு இல்லாமல், ஹெல்மெட்டும் இல்லாமல் இவர் தனது குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்தான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜொமேட்டோ உணவுப் பை வண்டியின் பின்புறம் இருக்க, முன்பக்கத்தில் தனது குழந்தையுடன் வண்டியை ஓட்டிச் செல்கிறார் அப்பெண்.

viral video

குழந்தையுடன் வேலை

இந்த வீடியோவை விஸ்வித் என்ற கண்டெண்ட் கிரியேட்டர் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சாலையில் கடந்து செல்பவராக இல்லாமல், வண்டியை நிறுத்தி, அப்பெண்ணிடம் பேட்டி ஒன்றையும் எடுத்திருக்கிறார் விஸ்வித்.

அதில் அப்பெண், “கடந்த ஒரு மாதமாக இந்த வேலையை செய்து வருகிறேன். நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கிறேன். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை கேட்டுச் சென்ற ஒவ்வொரு இடத்திலும், குழந்தை இருப்பதைக் காரணம் காட்டி வேலை கொடுக்க மறுத்து விட்டனர். ஆனால், குழந்தையை தனியாக வீட்டில் விட்டுச் செல்லும் அளவிற்கு என் குடும்பச் சூழலும் இல்லை. அதனால், குழந்தையையும் வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்வது மாதிரியான வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்தேன்.

ஏற்கெனவே என்னிடம் ஒரு பைக் இருந்தது. அதன் மூலம் கடந்த ஒரு மாதமாக குழந்தையை பைக்கின் முன் பக்கம் வைத்துக்கொண்டு இப்போது இந்த டெலிவரி வேலையை செய்கிறேன். வாழ்வதற்கு ஏதாவது வேலை வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறேன். இந்த வேலை ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்த பிரச்னையும் இல்லை,' 'எனத் தெரிவித்துள்ளார்.

8.5 மில்லியன்

இந்த வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டதாக இருந்தபோதும், தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 8.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் ஒரு மில்லியன் மக்கள் இதனை லைக் செய்துள்ளனர்.


அப்பெண்ணின் செயலைப் பலரும் பாராட்டியுள்ள நிலையில், சிலர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கினால், தாய், சேய் இருவருக்குமே நல்லது என நல்லெண்ணத்துடன் அறிவுரையும் கூறியுள்ளனர்.

viral video

10 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி

படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், கிடைத்த வேலையில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை என வருந்துபவர்களுக்கும், ஜொமேட்டோ, ஸ்வக்கி போன்ற உணவு டெலிவரி உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும், ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களில் டிரைவர் பணியும் பெரிய வாழ்வாதாரங்களாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

சமீபகாலமாக இந்த வேலைகளில் பெண்களும் அதிகளவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பெண்களுக்கென சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் சில பிரத்யேக வசதிகளைத் தர ஆரம்பித்துள்ளன.

ஜொமேட்டோவில் மட்டும் இப்போது மொத்தமுள்ள உணவு டெலிவரி ஊழியர்களில் 9 சதவீதம் பேர் பெண்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை 20 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதற்காக 10 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாகவும் ஜொமேட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.