காப்புரிமை பெற்ற ‘வாழைப்பழ பிஸ்கட்’ - அன்று வழக்கறிஞர்; இன்று லட்சாதிபதி விவசாயி!
வழக்கறிஞர் வேலையைத் துறந்துவிட்டு, வாழைப்பழ விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தி ஆண்டுதோறும் லட்சங்களை அள்ளி வரும் அசோக் காடே எனும் விவசாயியின் பயணம் வியக்கத்தக்கது.
மகாராஷ்டிராவின் ஜல்கானைச் சேர்ந்த 65 வயதான விவசாயி அசோக் காடே தனது இடத்தில் வாழை விவசாயத்தை வருவாய் தரும் விவசாயமாக வளர்த்தெடுத்ததில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டவர்.
வாழை விவசாயத்தில் லாபம் அதிகமில்லை. மேலும், நிறைய நாசமடைவதன் காரணமாக பாரம்பரிய வாழை விவசாயத்தில் சவால்களை எதிர்கொண்ட அசோக் மற்றும் அவரது மனைவி குசும், புதுமையான தீர்வுகளைக் கண்டடைந்தனர்.
நிலையில்லாத சந்தையில் வாழைப்பழங்களை மட்டும் விற்பதில் பயனுமில்லை, லாபமுமில்லை. எனவே, வாழைப்பழத்தை வைத்து புதிய உணவுகளைத் தயாரித்தனர்.
வாழைப்பழ சிப்ஸ், ஜாம், மிட்டாய்கள், பப்பாட், சிவ்டா, லட்டு மற்றும் வாழைப்பழ பிஸ்கட் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக வாழைப்பழத்தை பரந்துபட்ட நுகர்வுப் பண்டமாக்கினர்.
வாழ்க்கையை மாற்றியப் பயணம்
முதலில் சட்டம் படித்து ஐந்து வருடங்கள் பயிற்சி செய்த அசோக், தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தின் வாழை சாகுபடியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து, வாழை விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட 12.5 ஏக்கர் விவசாய நிலம் அவருக்கு சொந்தமானது.
வழக்கறிஞராக இருந்து விவசாயியாக மாறியது, விவசாயத்தில் புதுமைக்கான பயணத்தின் தொடக்கம் என்பதோடு இவரது வாழ்க்கையையே பலவிதங்களில் மாற்றியது.
தனித்துவமான தின்பண்டமாக வாழைப்பழ பிஸ்கட்களை இவர் தயாரித்து மத்திய அரசின் காப்புரிமையையும் பெற்றார். இதுதான் இவரது வர்த்தகத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது.
இந்தக் காப்புரிமை அவர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் அறிவுசார் சொத்துகளையும் பாதுகாத்தது. இது அவர்களின் தயாரிப்புக்கான தேவை மற்றும் அங்கீகாரத்தை அதிகரிக்க வழிவகுத்தது.
இந்த பிஸ்கட்டுகள் கிலோ ஒன்றுக்கு ரூ.400-500 வரை விற்கப்படுகின்றன. மேலும், இந்த காடே தம்பதியினருக்கு ஒரு குறிப்பிடத்தக்க வருமான ஆதாரமாகவும் வாழைப்பழ பிஸ்கட் மாறியது.
வாரத்திற்கு 60 முதல் 100 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 25 லட்சம் கிடைக்கின்றது.
சமூகத் தொழில் முயற்சி
அசோக் தன் சொந்த வெற்றியோடு நிறுத்தாமல், அதை ஒரு சமூகத் தொழிலாகவும் சமூகப் பயன்பாடாகவும் மாற்றினார். 50 வாழை விவசாயிகளுடன் கூட்டுறவு மேற்கொண்டார். இதன் மூலம் அதுவரை பெரிய பண லாபம் காணாத விவசாய சமூகம் இப்போது அசோக் காடேயினால் நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர்.
இவர்கள் ‘சங்கல்ப் எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தை தங்கள் தயாரிப்புகளுக்கான உற்பத்திப் பிரிவை உருவாக்கி, மூல வாழைப்பழ விற்பனையில் இருந்து பதப்படுத்தப்பட்ட வாழைப்பழ பொருட்களுக்கு முழுமையாக மாறியுள்ளனர்.
வர்த்தகம் என்றால் அதில் புதுமைகளைப் புகுத்த வேண்டும்; புதியதை விற்கவும், சந்தையில் போட்டியை வெல்லவும் உத்திகள் பல வகுக்க வேண்டும். அசோக் காடேயின் கதை இத்தகைய அனுபவங்கள் நிறைந்து வெற்றி கண்ட ஒன்று.
மூலம்: Nucleus_AI
‘மேக் இன் இந்தியா’ - கோதுமை தவிட்டில் இருந்து உணவுத் தட்டுகளை தயாரிக்கும் கேரள தம்பதி!
Edited by Induja Raghunathan